ரமளானே வருகவே...!!!‏ ~ சஹாரா தமிழ்

ads

புதன், 11 ஆகஸ்ட், 2010

ரமளானே வருகவே...!!!‏

http://amadeo.blog.com/repository/1564885/3475608.jpg 

பகலெலாம் பசித்து

இரவெலாம் விழித்து
அகமெலாம் நிறைந்து
அல்லாஹ்வைத் துதித்து
முகமத்(ஸல்) உம்மத்து
முழு மாதம் நோன்பு பிடித்து
அகமும் முகமும்
அமல்களால் அலங்கரித்து
இகம் பரம் ஈடேற்றமும் இறையின்
ரகசிய அறிவும் பெற்று தரும்
ரமளானே வருகவே...!!!
 
பசித்தவரின் பசியினை
பட்டு நீ உணர்த்திடும் பட்டினி-  ஊனில்
வசித்திடும் ஷைத்தானை
வதைத்திட வைத்திடும் உண்ணாமை
 
குடலுக்கு ஓய்வுக் கொடுத்து;
குர்-ஆனின் ஆய்வு தொடுத்து;- மஹ்ஷர்
திடலக்கு தயார்படுத்துதல் உன் கவனம்;
திண்ணமாய் கிட்டும் சுவனம்
 
பாவம் தடுத்திடும்
பாதுகாப்பு கேடயம்;
கோபம் வென்றிடும்
குணத்தின் பாடம்
 
அல்லாஹ்வுக்காகவே நோன்பு;
அல்லாஹ் மட்டுமே அறியும்  மாண்பு
அல்லாஹ்வே அதற்கான சாட்சி;
அல்லாஹ்வே தருவான் மாட்சி
 
முப்பது நாட்களை மூன்றாய் வகுத்து
முப்பதின் முதல் பத்தில் ரஹ்மத்து;
முப்பதின் இரண்டாம் பத்தில் மக்பிரத்து;
முப்பதின் மூன்றாம் பத்தில் நஜாத்து;
தப்பாது வேண்டிட வேண்டியே
தகை சான்றோர் வேண்டினரே
 
வானில் இருந்த இறைவேதம்
வஹியின் வழியாக
தேனினும் இனிய திருநபியின் (ஸல்)
திருவதனம் மொழிய வந்த மாதம் 
 
ஆற்றல் மிக்கதோர் இரவின் பிறப்பு;
ஆயிரம் மாதங்களினும் மிக்க சிறப்பு;
போற்றிடுவோம் பெற்றிடுவோம் அவ்விரவு;
புனிதமிகு ரமளானின் வரவு...!!!
 
ஈகைத் திருநாளாம்
ஈத் பெருநாளைக்கு முன்பாகவே
வாகைத்தரும் பித்ரா தர்மம்
 வழங்குவோம் ஏழைகட்கு அன்பாகவே
 
குறிப்பு: தடிமன் எழுத்துக்களில் உள்ளவைகள் அரபி பதங்கள்: அதன் பொருள் இதோ:
 
 உம்மத்து= சமுதாயம்
அமல் = செயல்
மஹ்ஷர்= மறுமை தீர்ப்பு நாளின் பெருவெளி மைதானம்
ரஹ்மத்து= இறையருள்
மக்பிரத்து= இறைமன்னிப்பு
நஜாத்து= நரக விடுதலை
வஹி= வானவர்  ஜிப்ராயில்(அலை)மூலம் இறைத் தூது
பித்ரா= ஏழைகட்கு ஈந்துவக்கும் தானிய தர்மம் (அதனாற்றான் இந்த நோன்பு பெருநாளை "ஈதுல் பித்ர்" (ஈகைத் திருநாள்) என்பர்.
               
- "கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்
 

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்