விலகும் திரை; வெளுக்கும் மோடியின் சாயம் : "இஷ்ரத் கொலை, போலி என்கவுண்ட்டர் ~ சஹாரா தமிழ்

ads

செவ்வாய், 22 நவம்பர், 2011

விலகும் திரை; வெளுக்கும் மோடியின் சாயம் : "இஷ்ரத் கொலை, போலி என்கவுண்ட்டர்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUfd5PA2ohBdb5VMh5tayQbOp6N2XdNMvHqY8DVAY6GFsNUmfak1jOtvZdDxlz_2aQCTCo5M6mTQ4x-IKlXYBIRt3_oGJHWNq8vwz81LeC9DhzLykyqEGCskNu9n_x0y23Hw0Vi7lACsI5/s320/israt+encounter_2.JPGவிலகும் திரை; வெளுக்கும் மோடியின் சாயம் : "இஷ்ரத் கொலை, போலி என்கவுண்ட்டர்" SIT - ஏடு-இட்டோர்-இயல் - தலையங்கம்

குஜராத் காவல்துறையினர் அரங்கேற்றிய பல 'என்கவுண்டர்' நாடகங்களுள் இஷ்ரத் ஜஹான் குழுவினரைக் கொத்துக் கொலை செய்ததும் அடக்கம். "குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டு குஜராத்துக்கு வந்த லஷ்கரே தொய்பா குழுவினர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று கடந்த 15.06.2004இல் குஜராத் அரசின் குற்றப் புலனாய்வுத் துறை (Detection of Crime Branch - DCB) ஒரு நாடகத்தை அரங்கேற்றியது.

அந்த நாடகத்தின் திரை இப்போது முற்றாக விலகியுள்ளது. கதை, வசன கர்த்தாக்களின் மீது இந்தியக் குற்றவியல் சட்டம் 302இன் கீழ் புதிய வழக்குப் பதிவதற்கு, குஜராத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் காவல்துறையின் முகத்திரையைக் கிழிக்கும் இந்த உத்தரவை நீதிபதிகள் ஜெயந்த் பட்டேல், அபிலாஷா குமாரி ஆகிய இருவரும் இட்டுள்ளனர்.

கல்லூரி மாணவியான இஷ்ரத் ஜஹான் (19), ஜாவேத் ஷேக் (பிரனீஷ் பிள்ளை), அம்ஜத் அலீ ராணா, ஸீஷான் ஜோஹர் ஆகிய நால்வரும் 'என்கவுண்டர்' என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டனர் என்று நம் தளத்தில் செய்தி வெளியிட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

தம் மகளை, "குஜராத் காவல்துறை படுகொலை செய்துவிட்டது" என இஷ்ரத் ஜஹானின் தாயார் ஷமீமா கவ்ஸரும் தம் மகன் "என்கவுண்டர் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்ட"தாக ஜாவேத் ஷேக்கின் தந்தை கோபிநாத் பிள்ளையும் குஜராத் காவல்துறைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

ஜாடிக்கு ஏற்ற மூடி என்பதுபோல் மோடிக்கு ஏற்ற தலைமைச் செயலராக இருந்த ஜி.எஸ்.சுப்பாராவ் என்பவர், "மாநிலத்தில் காவல்துறை வலுவாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டுமெனில், அடிக்கடி போட்டுத் தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும்" என்று தமக்கு அறிவுரை கூறியதாகவும் அதற்கு, "அப்பாவிகளைச் சுட்டுக் கொல்வது இந்தியக் குற்றவியல் சட்டம் 120-பி பிரிவின்படி குற்றமாகும்" என்று தாம் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கடந்த ஆண்டு ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசும்போது, குஜராத் அரசின் முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார் கூறினார்.

வழக்கை விசாரித்த குஜராத் மெட்ரோபாலிடன் நீதிபதி S.P. தாமங் கடந்த 07.09.2009இல், "காவல்துறை அதிகாரிகளின் சுயநலத்துக்காகச் செய்யப்பட்ட படுகொலைகள்" என்று போலி என்கவுண்டரைக் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் குஜராத் உயர்நீதி மன்றம் இந்த வழக்கை, சிறப்புப் புலனாய்வுக் குழு (Special Investigation Team - SIT) அமைத்துத் தன் நேரடிக் கண்காணிப்பின்கீழ் விசாரித்து வந்தது.

இறுதியாகக் கடந்த வெள்ளிக்கிழமை (19.11.2011) அன்று, "திரட்டப்பட்ட சான்றுகளின் அடிப்படையில், நிகழ்த்தப்பட்ட என்கவுண்டர் என்பது ஒரு நாடகம்" என்று SIT குழுத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் வர்மா, நீதிமன்றத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், "நால்வரும் கொலை செய்யப்பட்டது 'என்கவுண்ட்டர்' நடந்ததாகச் சொல்லப்படும் 15.06.2004 தேதியில் அல்ல; அதற்கு முன்னரே அவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டனர்" எனத் திட்டவட்டமாக வர்மா தம் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

'லஷ்கரே தொய்பாவினர்' என்று பூச்சாண்டி காட்டியே சொஹ்ராபுத்தீன் உட்பட 'என்கவுண்டர்' எனும் பெயரில் முப்பதுக்கும் மேற்பட்ட படுகொலைகளை நடத்திய குஜராத் அரசின் முன்னாள் DIG DG வன்ஸாரா என்பவன், இவ்வழக்கின் புதிய முதல் தகவல் அறிக்கையில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்படுவான் எனத் தெரிகிறது. இவன் ஏற்கனவே, சொஹ்ராபுத்தீன் போலி என்கவுண்டர் உட்பட பல கொலைகளுக்காகக் கைது செய்யப்பட்டுக் கம்பி எண்ணிக் கொண்டிருப்பவன் என்பது குறிப்பிடத் தக்கது. வன்ஸாராவின் வலக்கையாகச் செயல்பட்டவனும் அதே வழக்கில் தற்போது சிறைக்கைதியுமான ACP என்.கே. அமின் என்பவனோடு, கூடுதலாக முன்னாள் ACP ஜி.எல். சிங்கால், JCP பாண்டே ஆகிய IPS அதிகாரிகள் உட்பட 21 காவல்துறை அதிகாரிகள் கொலைக்குற்ற (302) வழக்கில் கைது செய்யப்படுவது உறுதி எனத் தெரிகிறது.

மோடிக்கு எதிரான பல்வேறு சாட்சியங்கள் அழித்து ஒழிக்கப்பட்டு வரும் நிலையிலும், நீதி முழுமையாக செத்துப் போய்விடவில்லை என இந்திய மக்களுக்கு உயர்நீதி மன்றத்தின் இந்த உத்தரவு சிறிது நம்பிக்கை தருகிறது.

oOo

"குஜராத் முதல்வர் நரேந்திரமோடியைக் கொலை செய்ய முயன்ற லஷ்கரே தொய்பா தீவிரவாதி" என்ற காரணம் காட்டி சொஹ்ராபுத்தீனைச் சுட்டுக் கொன்றதன் பின்னர் அவருடைய மனைவியான கவ்ஸர் பீவியை இரகசிய பங்களாவில் மூன்று நாட்கள் அடைத்து வைத்திருந்து கொலை செய்து, தன் கையால் தீயிட்டு எரித்தவன் இந்த வன்ஸாரா. அடுத்த வேளை சோற்றுக்கில்லாத ஏழைக் குடும்பத்தில் பிறந்த வன்ஸாரா, அவனுடைய ஊர் முஸ்லிம்கள் செய்த பொருளாதார உதவியால் படித்து, காவல்துறையில் சேர்ந்தவன். பரம ஏழைக் குடும்பத்தில் பிறந்த வன்ஸாரா இப்போது 150 கோடிகளின் அதிபதி.

சொஹ்ராபுத்தீனைப் போலி என்கவுண்டர் மூலம் கொலை செய்த மறுநாள் குஜராத் அரசு, "சர்வதேசத் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ள தீவிரவாதியை போலீஸ் சுட்டுக் கொன்றதாக" அறிவித்ததோடு சொஹ்ராபுத்தீனைக் கொலை செய்த வன்ஸாராவுக்கும் அவனுடைய கொலைக் குழுவினருக்கும் குஜராத் அரசு பதக்கங்களும், சன்மானங்களும் வழங்கி கௌரவித்தபோது குஜராத் அரசின் குண்டர் குழுவுக்கும் மோடிக்கும் உள்ள கள்ள உறவு வெளிப்பட்டது.

மேலும், குஜராத் சட்டமன்றத் தேர்தலின்போது, சொஹ்ராபுத்தீனைக் கொன்றதைத் தன் சொந்தச் சாதனையாகவே பொதுக்கூட்டங்களின் பேசிய மோடி, "சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தவனை என்ன செய்ய வேண்டும்?" என்று கேள்வி கேட்டு, தன் ஜால்ராக்கள் மூலமாக, "கொல்ல வேண்டும்" என்று சொல்ல வைத்து, "அதைத்தானே நான் செய்தேன். இதற்கு சோனியாவிடம் நான் உத்தரவு பெறவேண்டுமா, என்ன?" என்று இந்துக்களின் உணர்ச்சியைக் கிளறிவிட்டு சொஹ்ராபுத்தீன் படுகொலையைத் தலைப்பாக்கியே ஆட்சியைப் பிடித்தார். இதன் மூலம் மோடிக்கும் வன்ஸாராவுக்கும் உள்ள நெருக்கம் வெளிப்படையானது.

"லஷ்கரே தொய்பா தீவிரவாதிகள். முதல்வர் மோடியைக் கொல்ல அனுப்பப்பட்டவர்கள்" ஒவ்வொரு முறை படுகொலைகளைச் செய்து முடித்துவிட்டு, ஊடகத்துக்குச் செய்தி தந்த வன்ஸாரா கூறியது ஒரே செய்திதான்.

குஜராத் அரசால் நிகழ்த்தப்பட்ட அத்தனை என்கவுண்டர்களும் போலியானவை; அவை படுகொலைகள் என ஐயத்திற்கிடமின்றி இப்போது நிரூபணமாகி வருகின்றன.

    வன்ஸாராவும் அவனது கொலைக் குழுவினரும் நடத்திய "அனைத்து என்கவுண்டர்களும் போலியானவை" என்றும், "குஜராத் கலவரத்திற்குப் பின் நரேந்திரமோடிக்கு எதிராக நாட்டில் எழுந்துள்ள அவப்பெயரை மறக்கடிக்கவும் மோடியின் மீது அதிகார வட்டத்திலும் மக்கள் மத்தியிலும் அனுதாபத்தை தோற்றுவிக்கவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல்கள்தாம் போலி என்கவுண்டர்கள்" என சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சொஹ்ராபுத்தீனைக் கொலை செய்யத் திட்டம் வகுப்பதில் குஜராத் அரசு பங்கு வகித்திருந்தது.

    சொஹ்ராபுத்தீனைக் கொலை செய்வதற்கு முன்பு குஜராத் காவல்துறை அமைச்சரும் ஆர்.எஸ்.எஸ் தலைவருமான அமித் ஷாவுடன் கைது செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி இருந்தனர்.

    சொஹ்ராபுதீனைச் சுட்டுக் கொன்றவுடன் போலி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டுகளான அதிகாரிகள் சம்பவத்தை அமைச்சருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
    சொஹ்ராபுத்தீன் கொல்லப்பட்டதில் சிக்கல்கள் எழுந்தவுடன் பயந்துபோன காவல்துறை உயர் அதிகாரிகளுள் சில நடுநிலையாளர்கள், அது தொடர்பாக சி.ஐ.டி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அதனை குஜராத் அரசு ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்தது.

    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இவ்வழக்கை விசாரிக்க ஆரம்பித்த சி.ஐ.டி துறையினரின் விசாரணையை முடக்குவதற்கும் குஜராத் அரசு முயன்றது.

நீதிபதி தருண் சாட்டர்ஜியின் முன்னிலையில் நடந்த சொஹ்ராபுத்தீன் போலி என்கவுண்டர் வழக்கின் விசாரணையின் போது, போலி என்கவுண்டர் மூலம் படுகொலை செய்யப்பட்ட சொஹ்ராபுத்தீனின் மனைவியையும் சுட்டுக்கொன்றதோடு உடல் பாகங்களை எரித்து அழித்ததாக குஜராத் அரசு ஒப்புக்கொண்டது. இவ்விவரத்தை குஜராத் அரசு சார்பாக வாதாடும் வழக்கறிஞரான KTS துல்ஸி என்பவர் கடந்த 30.04.2007 அன்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அரசு வழக்கறிஞரே அரசுக்கு எதிராக குற்றத்தை ஒப்புக் கொள்ளும் அளவுக்கு சாட்சியங்கள் உறுதியாக இருக்கின்றன. மோடியின் எல்லா அராஜகங்களுக்கும் அவரது வலக்கரமாக விளங்கிய குஜராத் அரசின் முன்னாள் உள்துறை இணை அமைச்சர் அமித் ஷா இப்போது கம்பிக்குள். சொஹ்ராபுத்தீன் போலி என்கவுண்டரைப் பின்னணியில் இயக்கிய அமித் ஷாவின் உத்தரவைப் பற்றி உயர்மட்ட காவல் துறையினரான என்.கே. அமின், என்.வி சௌஹான் ஆகிய இருவரும் தொலைபேசியில் உரையாடியதை NDTV வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த உரையாடலின் இடையே காவல்துறை அதிகாரி சௌஹான், "வன்ஸாராவுக்கு பெரிய எஜமான்களின் நேரடித் தொடர்பு இருக்கிறது" என்று அமினிடம் கூறுகிறார். பெரிய எஜமான்களில் ஒருவரான குஜராத்தின் முன்னாள் உள்துறை இணையமைச்சர் அமித் ஷா தற்போது சிறைக்குள். அமித் ஷாவுக்கும் எஜமானனான குஜராத் உள்துறை(க்கும்) அமைச்சர் மோடி?

இனக்கலவரத்தைத் தூண்டி, ஆயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றொழித்து, எண்ணற்ற அப்பாவி இளைஞர்களையும் யுவதிகளையும் தன்னைக் கொல்ல வந்த தீவிரவாதிகள் எனக்கூறி போலி என்கவுண்டர் மூலம் கொலை செய்து, அதையே பிரச்சார மூலதனமாக வைத்துக் கொண்டு ஆட்சி-அதிகாரத்தைக் கைப்பற்றி வலம் வரும் நவீன நீரோ மோடிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்பதைக் குறித்து இனியாவது நீதிபதிகள் சிந்திக்கவேண்டும்.

சத்தியமார்க்கம்.காம்

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்