கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார். ~ சஹாரா தமிழ்

ads

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_4358637333.jpg

சென்னை,பிப்.22 : நெம்மேலி அருகே கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார். இதன் மூலம் தினமும் 100 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலி அருகில் சூலேரிக்காட்டில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் மற்றும் நீரேற்று நிலையங்கள் சுமார் ரூ.871 கோடியில் அமைக்கப்பட்டு உள்ளது

. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் இந்த நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கு தினமும் 265 மில்லியன் லிட்டர் கடல் நீர் எடுத்து,  அதை குடிநீராக சுத்திகரித்து 100 மில்லியன் லிட்டர் குடிநீர் ஆக்கப்படும். மீதமுள்ள 165 மில்லியன் லிட்டர் நீர் மீண்டும் கடலுக்குள் திருப்பி அனுப்பப்படும்.

இந்த கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் மற்றும் நீரேற்று நிலையங்களின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். நீரேற்று நிலையத்தை சுற்றி பார்த்தார். விழா 15 நிமிடம் நடைபெற்றது. மேடையில் அமருவதற்கு யாரும் இருக்கை போடவில்லை. நின்று கொண்டு இருந்த ஜெயலலிதாவுக்கு ஒரு நாற்காலி போட்டனர். ஆனால் அதில் அவர் உட்காரவில்லை. முன்னதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் பனீந்திர ரெட்டி வரவேற்று பேசினார்.

இங்கு பெறப்படும் 100 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை பகுதியில் உள்ள வேளச்சேரி, திருவான்மியூர், பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள தகவல் தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட 10 லட்சம் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும். விழாவுக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவை உள்ளாட்சி துறை அமைச்சர் முனுசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

விழாவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதிமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் சந்திரமோகன் நன்றி கூறினார். விழாவையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்