மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் இரங்கல் அறிக்கை... ~ சஹாரா தமிழ்

ads

புதன், 29 ஜூலை, 2015

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் இரங்கல் அறிக்கை...


               
                  அந்தச் செய்தி ஒரு கெட்ட கனவாக இருந்திருக்கக்கூடாதா? என நாடே துடித்தது. மேதகு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இறந்துவிட்டார் என்ற துயர செய்தி உறுதியான போது, தனது வீட்டில் ஒருவர் இறந்துவிட்டது போன்ற சோகத்தில் ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் கலங்கியது என்றால் அதுமிகையில்லை. அவர் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கக்கூடாதா? என ஒவ்வொரு இந்தியனின் இதயமும் துடிக்கிறது.

எப்போதும் நாட்டைப்பற்றிய கவலை, தொலைநோக்குச் சிந்தனைகள், சலிப்பற்ற உழைப்பு, சுற்றுச்சூழல் குறித்த முன்னோக்குப் பார்வை, ஏழைகளின் மீதான அக்கறை, குழந்தைகள் மீதான பரிவுடன் கூடிய ஈடுபாடு, மாணவர் சமுதாயத்தின் மீதான நம்பிக்கை என அவரது நடவடிக்கைகள் அவரை “மக்களின் ஜனாதிபதியாக” நாட்டு மக்களின் இதயத்தில் குடி அமர்த்தியது.

துடிப்பான இந்தியாவை உருவாக்கி, நாட்டை உலகின் தலைசிறந்த வல்லரசாக மாற்ற வேண்டும் என்பதற்காக அவர் கனவு கண்டதோடு மட்டுமின்றி அந்தக் கனவை நோக்கி இளைய தலைமுறையை வழிநடத்தினார். அவரது எழுத்துக்களும், உரைகளும், நாளைய தலைமுறைக்கும் வழிகாட்டக் கூடியதாகும். அவர் ஏவுகணை தொழில்நுட்பத்திலும், விஞ்ஞான வளர்ச்சியிலும் காட்டிய அதே ஆர்வத்தை கிராமப்புற வளர்ச்சியிலும் காட்டினார். அது அவரது மனிதநேயத்தைப் பறைசாற்றுகிறது.

அனைத்துத் துறைகளையும் குறித்த ஆழமான அறிவும், அன்றாட உலகின் முன்னேற்றங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஆர்வமும் அவரை துடிப்பானத் தலைவராக உலகிற்கு காட்டியது. அவரது வருகையை வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் வரவேற்று மகிழ்ந்தன. அவரது உரைக்காக பல நாட்டு பல்கலைக்கழங்கள் காத்திருந்தன.

வாழ்நாள் முழுக்க மாணவர்களை சந்திப்பதிலேயே ஆர்வம் காட்டிய அவரது வாழ்க்கை கடைசியில் ஒரு மாணவர் சந்திப்பிலேயே நிறைவு பெற்றது ஆச்சரியம் அளிக்கிறது.
அறிவியல், அரசியல், அரசு நிர்வாகம், சமூகசேவை ஆகியவற்றோடு இலக்கியத்திலும் அவர் காட்டிய ஆர்வம் சிறப்பானது. தமிழின் மீது தனியாத தாகம் கொண்ட அவர் தமிழில் பேசுவதைப் பெருமையாகக் கருதினார்.

தனது இறைநம்பிக்கைக் குறித்தும், அன்றாட தொழுகை குறித்தும் தம்பட்டம் அடித்ததில்லை. அவர் எல்லோரின் கொள்கைகளையும், நம்பிக்கைகளையும், மதித்தார். அனைத்து இந்தியர்களையும் தமது சகோதர, சகோதரிகளாக பாவித்தார். இவை எல்லாம் அவரது சிறப்புகளில் முக்கியமானதாகும்.

காந்தி மற்றும் நேருவிற்குப் பிறகு அனைத்து இந்தியர்களாலும் போற்றப்பட்டு, சர்வதேசத்தால் அங்கீரிக்கப்பட்ட ஒரே தலைவர் அப்துல் கலாம் தான் என்றால் அது மிகையில்லை. அவர் பன்முக ஆளுமைத் திறன் கொண்டவராக இருந்தார். அதனால்தான் அவர் இந்தியாவின் அறிவுஜீவியாக உலக அரங்கில் மதிக்கப்பட்டார்.

தன் புகழிலும், பொது வாழ்விலும் குடும்பத்தினரை அண்டவிடாத; கரைப்படியாத நேர்மையாளரான அவர் ஒரு முன்மாதிரி இந்தியராக வாழ்ந்து சென்றிருக்கிறார்.
இன்று அப்துல் கலாமின் உழைப்பும், சிந்திப்பும் முற்று பெற்றுவிட்டது. இந்த நாட்டுக்காகவே துடித்த அவரது இதயம் தன் துடிப்பை நிறுத்தியிருக்கிறது. மரணம் என்பது வாழ்க்கைக்குத் தானே தவிர வரலாற்றிற்கு அல்ல. அந்த மனிதநேயரை இந்திய வரலாறு தன் வைர வரிகளால் பதிவு செய்யும் என்பதில் ஐயமில்லை. அவருக்காக எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.

இவண்
எம். தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்