தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 20 அக்டோபர், 2016

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த மே மாதம் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு சில தினங்களுக்கு முன், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பணம் பட்டுவாடா அதிகளவில் நடைபெற்றது பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் சீனிவேல் எம்எல்ஏவாக பதவி ஏற்பதற்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இந்த தொகுதியும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் காலியாக இருந்த திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வருகிற நவம்பர் மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 26ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதே தேதியில் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த 4 தொகுதியிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அக்கட்சி சார்பில் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் தேர்லில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அரவக்குறிச்சி தொகுதியில் வி.செந்தில்பாலாஜி, தஞ்சாவூர் - எம்.ரெங்கசாமி, திருப்பரங்குன்றம் - ஏ.கே.போஸ், நெல்லித்தோப்பு- ஓம்சக்தி சேகர் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிக்கு ஏற்கனவே அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் எம்எல்ஏ ரெங்கசாமி ஆகியோர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்