ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்குவது சாத்தியமில்லை: தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 20 அக்டோபர், 2016

ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்குவது சாத்தியமில்லை: தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி

புதுடெல்லி: பாராளுமன்ற, மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த தயாராக இருக்கிறோம். ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்குவது சாத்தியமில்லை என்று தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி கூறினார்.

சர்வதேச வாக்காளர் விழிப்புணர்வு குறித்த 3 நாள் கருத்தரங்கு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் 27 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் கலந்துகொண்டு அவரவர் நாடுகளில் பின்பற்றப்படும் தேர்தல் நடைமுறைகள் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்துகொள்கின்றனர்.

இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்த பின்பு, தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதியை நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது, பாராளுமன்றம் மற்றும் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த பரிந்துரை செய்து கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி எழுதிய கடிதம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நஜீம் ஜைதி கூறியதாவது:-

அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு மனதுடன் இதுபோல் ஒரே நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தலை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டால் அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

அதே நேரம் மத்திய அரசும் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி ஆதாரம் உள்ளிட்ட அனைத்து வித உதவிகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு படைகளை ஒதுக்கித்தரவேண்டும். ஏனென்றால் இந்த தேர்தல்களுக்காக அதிக அளவில் மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டியது இருக்கும். அவற்றை வாங்குவதற்கு அதிக நிதியும் (ரூ.9 ஆயிரம் கோடி) தேவைப்படும். இதற்கு சம்மதம் தெரிவித்தால் ஒரே நேரத்தில் பாராளுமன்ற, மாநில சட்டசபைகளுக்கு தேர்தலை நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு 5 மாநிலங்களுக்கு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படுமா? அல்லது தனித்தனி தேதிகளில் இருக்குமா? என்ற இன்னொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கும்போது, “மாணவர்களின் பொதுத்தேர்வு மற்றும் பண்டிகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இதுபற்றி முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கில் பேசும்போது, “கட்டாயமாக வாக்களிப்பது பரவலாக சில நாடுகளில் நடைமுறையில் உள்ளது பற்றி முன்பு விவாதித்தோம். ஆனால் இந்த சிந்தனை நடைமுறையில் சாத்தியமில்லை” என்று குறிப்பிட்டார்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்