குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் வெளிச்சத்துக்கு வரும் புதிய ஆதாரங்கள் ~ சஹாரா தமிழ்

ads

புதன், 18 ஆகஸ்ட், 2010

குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் வெளிச்சத்துக்கு வரும் புதிய ஆதாரங்கள்


குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-இன் பங்கு: வெளிச்சத்துக்கு வரும் புதிய ஆதாரங்கள்
மகாராஷ்டிராவில் மாலேகான், மத்தியப் பிரதேசத்தில் அஜ்மீர், ஆந்திராவில் ஹைதராபாத் மெக்கா மசூதி, கோவாவில் மார்காவோ ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் இந்து மதவெறி பயங்கரவாதிகளின் கைங்கர்யம் என்ற உண்மை அம்பலமாகி, இப்பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய ‘எழுச்சி கொண்ட இந்துக்கள்’ சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இக்குண்டு வெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகளுக்கும் தொடர்பில்லை எனக் காட்டிக் கொள்வதற்காக, இக்குற்றவாளிகள் தங்களைத் தனி அமைப்புகளாக – அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி என்ற பெயர்களில் அடையாளப்படுத்திக் கொண்டனர்.

எனினும், ஹெட்லைன்ஸ் டுடே என்ற தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனம், இக்குற்றவாளிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் இடையே நடந்த இரகசிய உரையாடல்களை ஒலி-ஒளி பரப்பியிருப்பதும்; இக்குண்டு வெடிப்புகளோடு தொடர்புடைய குற்றவாளிகள் தமக்குள் நடத்திய உரையாடல்கள் மற்றும் இக்குண்டுவெடிப்புகள் தொடர்பாக போலீசாரிடம் உள்ள சாட்சியங்களை  தெகல்கா இதழ் (31 ஜூலை, 2010) வெளியிட்டிருப்பதும் இக்குண்டு வெடிப்புகளை நடத்திய குற்றவாளிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கும் நேரடித் தொடர்பிருப்பதையும் வேறு பல பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்துவது பற்றி அவர்கள் விவாதித்திருப்பதையும் அம்பலப்படுத்தியுள்ளன.

‘‘ஹெட்லைன்ஸ் டுடே” ஒளிபரப்பிய ஒளி-ஒலிப்பேழை ஒன்றில் மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தயானந்த பாண்டே என்ற இந்துச் சாமியார், இந்திய இராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாகப் பணியாற்றிக் கொண்டே மாலேகான் குண்டு வெடிப்பை நடத்தியவரான புரோகித், ஆர்.எஸ்.எஸ்.-இன் தீவிர ஆதரவாளரும் பா.ஜ.க.-வின் முன்னாள் கிழக்கு தில்லி நாடாளுமன்ற உறுப்பினருமான பி.எல்.சர்மா ஆகிய மூவரும் முசுலீம்கள் வசிக்கும் பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவது பற்றி விவாதிக்கின்றனர். 

மற்றொரு ஒலிப்பேழையில், தயானந்த பாண்டேயும், ஆர்.பி. சிங் என்ற மருத்துவரும் துணை அரசுத் தலைவர் ஹமித் அன்சாரியைக் கொல்லும் திட்டம் பற்றி விவாதிக்கின்றனர்.
அத்தொலைக்காட்சி ஒலிபரப்பிய இன்னொரு ஒலிப்பேழையில், அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் காலஞ்சென்ற ஆர்.எஸ்.எஸ். ஊழியர் சுனில் ஜோஷி என்பவன், ஆர்.எஸ்.எஸ்.-இன் சியச் செயல் கமிட்டி உறுப்பினரான இந்திரேஷ் குமாரிடம் அக்குண்டு வெடிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து விளக்கியுள்ளான்.

துணைக் அரசுத்தலைவரை கொல்லத் திட்டம் போட்ட ஆர்.பி.சிங்கிற்கும் விஷ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்காலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதையும்; மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய அபிநவ் பாரத் அமைப்பிற்கும் புனேவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.-இன் உயர்மட்டத் தலைவர்களுள் ஒருவரான ஷியாம் ஆப்தேவிற்கு இடையில் நெருக்கமான உறவு இருந்து வந்ததையும்; விஷ்வ இந்து பரிஷத்தின் முக்கியத் தலைவரான பிரவீன் தொகாடியா அபிநவ் பாரத் அமைப்பிற்கு ஒரு இலட்ச ரூபா நன்கொடை அளித்திருப்பதையும் தெகல்கா இதழ் வெளியிட்டுள்ள ஒலிப்பேழை உரையாடல்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

இவை ஒருபுறமிருக்க, இந்தியா  பாகிஸ்தான் இடையே சென்றுவரும் சம்ஜௌதா விரைவுத் தொடர்வண்டியில் நடந்த குண்டுவெடிப்புகூட இந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலாக இருக்கும் என்றும்; சந்தீப் டாங்கே மற்றும் ராம்ஜி என்ற இரு ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களுக்கு இக்குண்டு வெடிப்பில் நேரடியாகத் தொடர்பிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளியான தேவேந்திர குப்தாவிற்கு உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள கான்பூர் நகர ஆர்.எஸ்.எஸ். கிளைத் தலைவரான அசோக் வார்ஷ்னேயும், ஆர்.எஸ்.எஸ். இன் தேசிய செயல் கமிட்டி உறுப்பினரான அசோக் பேரியும்தான் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.  சங்கப் பரிவார அமைப்புகளுள் ஒன்றான பஜ்ரங் தள் சட்ட விரோதமாகக்  குண்டு தயாரிக்கும் வேலைகளைச் செய்து வருவது கான்பூரிலும் நான்டேட்டிலும் நடந்த குண்டு வெடிப்புகளின்போதே அம்பலமாகியிருக்கிறது.

மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய கும்பல்தான் மகாராஷ்டிராவிலுள்ள ஜல்னா, பர்பானி, நான்டேட் ஆகிய இடங்களிலும் குண்டு வெடிப்புகளை நடத்தியிருப்பதும் புலனாவில் நிரூபணமாகியுள்ளதால், அக்கும்பல் மீதான வழக்குகளை வழக்கமான இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்காமல், பொடாவுக்கு இணையான மகாராஷ்டிரா குற்றக் கும்பல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்குமாறு மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல்களில் பங்குகொண்டு அதிகாரத்தைப் பிடித்து மேலிருந்து இந்து மதவெறித் திட்டங்களை நிறைவேற்ற பா.ஜ.க.; கீழிலிருந்து இந்து மதவெறித் திட்டங்களை நடைமுறைப்படுத்த பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிசத் போன்ற அமைப்புகளை இயக்கி வரும் ஆர்.எஸ்.எஸ்., நாடெங்கும் குண்டு வெடிப்புகளை நடத்துவதற்காகவே அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான் போன்ற அமைப்புகளைத் தமது தலைவர்கள் மூலம் இரகசியாக இயக்கி வருகிறது என்றுதான் இவ்வுண்மைகள் மூலம் முடிவுக்கு வர முடியும்.

எனினும் கடந்த பத்தாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். இன் ஆசீர்வாதத்தோடு நடந்துள்ள இக்குண்டு வெடிப்புகள் குறித்து போலீசார் ஒருங்கிணைத்த முறையில் விசாரணை நடத்த மறுக்கிறார்கள்.  மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இந்து மதவெறியர்களை விசாரணை செய்த பொழுதே, அஜ்மீர், ஹைதராபாத் குண்டு வெடிப்புகளுக்கும் இந்து மதவெறி பயங்கரவாத அமைப்புகள்தான் காரணம் என்பது அம்பலமாகிவிட்டது.

ஆனாலும், மிகத் தாமதமாகத்தான் அக்குண்டு வெடிப்புகளை நடத்திய சதிகாரர்கள் கைது செய்யப்பட்டனர். அதேசமயம்,  இக்குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரியாகக் கருதப்படும் ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த இராம்நாராயணன் கல்சங்கரா, சுவாமி அசிமானந்தா ஆகியோர் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்.

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான சுனில் கோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டு விட்டான். குண்டுவெடிப்பு பற்றிய உண்மைகளை மூடிமறைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்.குண்டர்கள் அவனை கொன்றிருக்கலாம் எனப் பரவலாக நம்பப்படும் பொழுது, போலீசாரோ “சிமி” அமைப்புதான் அக்கொலையைச் செய்ததாகக் கூறிவருகிறார்கள்.
சம்ஜௌதா விரைவுத் தொடர்வண்டியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகிறது. 

அபிநவ் பாரத் அமைப்போடு தொடர்பு வைத்துள்ள பல இராணுவ அதிகாரிகள், போலீசு அதிகாரிகள் பற்றிய விவரங்கள் புலன் விசாரணையில் அம்பலமானாலும் அவர்களுள் ஒருவர்கூட விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. 

குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்-ஐத் தொடர்புபடுத்தும் ஆதாரங்கள் கிடைத்தால், மத்தியப் புலனாவுத் துறையைச் சேர்ந்த பார்ப்பன அதிகார வர்க்கம் விசாரணையை அப்படியே அமுக்கிவிடுவதாக அம்பலப்படுத்தியிருக்கிறார், மகாராஷ்டிரா மாநில முன்னாள் போலீசு தலைவர் எஸ்.எம்.முஷ்ரிஃப்.

இந்திய அரசு இந்து மதவெறி பாசத்தோடுதான் இருந்து வருகிறது என்பதற்கான ஆதாரங்கள் இவை.  இந்தியாவில் குண்டு வெடிப்புகளை நடத்தி வரும் முசுலீம் பயங்கரவாதிகளுக்குக் கிடைக்காத சாதகமான அம்சம் இது.
__________________________________

- புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2010
- வினவு

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்