முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு எச்சரிக்கை... ~ சஹாரா தமிழ்

ads

ஞாயிறு, 22 ஜூன், 2014

முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு எச்சரிக்கை...



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது போனால், இலங்கை தொடர்பான வீசா கட்டுப்பாடுகளில் திருத்தங்களை செய்யப் போவதாக பல முக்கிய முஸ்லிம் நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

முஸ்லிம் எதிர்ப்பு மோதல்களை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இந்த நாடுகள் அரசாங்கத்தை கடுமையாக வலியுறுத்தியுள்ளன.

கொழும்பில் உள்ள பங்களாதேஷ், ஈரான், ஈராக், எகிப்து, இந்தோனேசியா, குவைத், மலேசியா, மாலைதீவு, நைஜீரியா, பாகிஸ்தான், பாலஸ்தீனம், துருக்கி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு ராஜ்ஜியம், கட்டார் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் இந்த வலியுறுத்தலை மேற்கொண்டுள்ளன.

இந்த நாடுகளில் பலவற்றில் இலங்கைத் தொழிலாளர்கள் தொழில் புரிந்து வருவதால், அந்நாடுகள் வீசா கட்டுப்பாடுகளில் திருத்தங்களை மேற்கொண்டால், அது அங்கு பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களை பாதிக்கும்.

எவ்வாறாயினும், முஸ்லிம் நாடுகள் வீசா கட்டுப்பாடுகளில் திருத்தங்களை செய்யப் போவதாக விடுக்கப்பட்டதாக கூறப்படும் எச்சரிக்கை பற்றி தமக்கு தெரியவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தொழில் புரிந்து வருவதுடன், அதன் மூலம் நாட்டுக்கு பெருந் தொகையான அந்நிய செலாவணி கிடைத்து வருகிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு வெளியில் உள்ள முஸ்லிம் நாடுகளிலும் கணிசமான இலங்கையர்கள் தொழில் புரிந்து வருகின்றனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை தொழிலாளர்களுக்கு வழங்கும் வீசா கட்டுப்பாடுகளில் திருத்தங்களை மேற்கொண்டால், அது இலங்கையின் பொருளாதாரத்தின் மீது கடும் தாக்கங்களை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும் இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடந்து வரும் தாக்குதல்களை நிறுத்த அரசாங்கம் இதுவரை குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

கொழும்பில் உள்ள முஸ்லிம் நாடுகளில் தூதரகங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்து மறுநாளில் பாணந்துறையில் உள்ள நோ லிமிட் நிறுவனம் தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்