தொழிலாளர்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது - பிருந்தா காரத் ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 29 ஜனவரி, 2015

தொழிலாளர்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது - பிருந்தா காரத்



மத்திய அரசு, விவசாயிகள், பழங்குடியின மக்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் குற்றஞ் சாற்றியுள்ளார்.

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத் துறை சார்பில், நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அறக்கட்டளை சொற்பொழிவு நடைபெற்றது.

அரசியல் அறிவியல் துறைத் தலைவர் ஜி.பழனிதுரை தலைமையில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் சிறப்புரை நிகழ்த்தினார்.

அந்தக் கூட்டத்தில் பிருந்தா காரத் பேசியதாவது:-

வி.ஆர்.கிருஷ்ணய்யர் நீதிபதியாக இருந்தபோது, சமூக நீதியை நிலைநாட்டுவதில் உறுதியாக இருந்தார். மேலும், அதிகாரங்களின் மூலம் மக்களின் வாழக்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என்பதிலும் நம்பிக்கை கொண்டிருந்தார்.

உலகமயமாக்கல் என்பது தெளிவான பொருளாதார கோட்பாடு இல்லாமல், மக்களை நுகர்வோராக மாற்றும் முயற்சியாக மட்டுமே உள்ளது. சமீப காலமாக வளர்ச்சி என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. அந்த வளர்ச்சி யாருக்கானது, அதன் மூலம் பயன்பெறுவோர் யார் என்பதை புரிந்து கொள்வதற்கு யாரும் முன்வரவில்லை.

பல தனியார் நிறுவனங்கள் அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், 80 சதவீத கிராமப்புற மக்கள் நாளொன்றுக்கு ரூ.50 க்கும் குறைவாக செலவு செய்து வருகின்றனர்.

90 சதவீத இந்திய தொழிலாளர்கள் முறையான அமைப்புகளின் கீழ் செயல்படவில்லை என்பதால், அவர்களுக்கு முறையான ஊதியம் கிடைப்பதில்லை. இளைஞர்களின் திறனுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். சமூக அநீதிகளை எதிர்த்து காந்திய வழியில் இளைஞர்கள் போராட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பிருந்தா காரத் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நுகர்வோரின் உரிமைகளை அழிப்பதற்காக, தொழிலாளர் சீர்த்திருத்த சட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது.

‘இந்தியாவில் உருவாக்குவோம்' என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில், அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட சூரிய மின்சக்தி சாதனைங்களை விற்பனை செய்யும் சந்தையாக இந்தியாவை பயன்படுத்துவதற்கு ஒபாமா அரசு திட்டமிட்டுள்ளது.

தனிப்பெரும்பான்மை இருப்பதால், விவசாயிகள், பழங்குடியின மக்கள், தொழிலாளர்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது” என்று கூறினார்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்