இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் - 3 ~ சஹாரா தமிழ்

ads

திங்கள், 18 ஜனவரி, 2010

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் - 3

திப்பு சுல்தான்

திப்பு சுல்தான்

ஒரு நாட்டு மன்னன் இன்னொரு நாட்டை ஆள்வதற்காகப் படை திரட்டிச் சென்று கைப்பற்றுவது என்பது சாதாரண விஷயமாகும். ஆனால், ஒரு நாட்டில் வியாபாரம் செய்வதற்காக வந்தவர்கள் அந்நாட்டைக் கைப்பற்றி அடிமையாக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல.


இன்றும் 'உலக மயமாக்கல்' என்னும் பெயரில், வளர்ந்து வரும் நாடுகளையும் வளர்ச்சி பெறா நாடுகளையும் தங்கள் நாட்டின் வாடகையில்லாச் சந்தைகளாகவும் கழிவுக் கூடங்களாகவும் மாற்றி நவீன காலனித்துவத்தை நிறுவி வரும் மேற்குலக நாடுகளின் வியாபாரம் எனும் பெயரிலான 'நாட்டை அடிமையாக்கும் தந்திரம்' கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியதாகும்.

அன்றும் இன்றும் வியாபாரம் எனும் பெயரில் உலகில் காலனித்துவத்தை நிறுவி வருவதில் ஆங்கிலேய மேலாதிக்கமே முன்னணியில் நின்று வருகிறது.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வியாபாரத்திற்காக வந்த வேளையில், இந்தியாவை முகலாய மன்னர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். இந்தியாவில் முகலாயர்களின் வருகைக்கு முன்னரே அரபிகள் கேரளக் கடற்கரையோரமாக மிகச் சிறந்த வியாபாரத் தொடர்புகளை இந்தியாவுடன் வைத்திருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.

இந்த அரபு வியாபாரிகளின் பரம்பரையில் வந்தவர்கள், பின்னர் ஆங்கிலேய மேலாதிக்கமும் அட்டூழியமும் மிகைத்த காலத்தில் கேரளக் கரையோரம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மிகப்பெரும் நீண்ட போராட்டத்தை மேற்கொண்டனர்.

முகலாய மன்னர்களின் ஆட்சி காலத்தில்தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றினார்கள். ஆகவே முகலாய மன்னர்களின் ஆட்சி காலத்திலிருந்து சில வரலாற்றுக் குறிப்புகளை இப்போது பார்ப்போம்:


கி.பி. 1526 - 1530 வரை இதியாவில் பாபரின் ஆட்சி நடைபெற்றது.

கி.பி. 1530ல் பாபரின் மகன் ஹுமாயூனின் ஆட்சி ஆரம்பம்.

கி.பி. 1539ல் ஹுமாயூனை ஷெர்ஷாஹ் வென்று தில்லியைக் கைப்பற்றினார்.

கி.பி. 1555ல் மீண்டும் ஹுமாயூன் அரியணை ஏறினார்.

கி.பி. 1556ல் ஹுமாயூன் இறந்தபின் அவரின் மகன் அக்பர் மன்னரானார்.

கி.பி. 1565ல் தலக்கோட்டை யுத்தத்தில் விஜயநகரப் பேரரசு வீழ்ந்தது.

கி.பி. 1565 - 1597ல் அக்பரின் படைகள் இந்தியாவின் முக்கியப் பல நகரங்களைக் கைப்பற்றியது.

இந்தியாவின் மிகச் சிறந்த முகலாய மன்னர் என வரலாற்றில் தவறாக எழுதி வைக்கப்பட்டுள்ள அக்பரின் ஆட்சி காலத்தில்தான் முதன் முதலாக ஆங்கிலேய வியாபாரிகளுக்கு இந்தியாவில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

கி.பி. 1579ல் தாமஸ் ஸ்டீபன்ஸ் என்ற ஆங்கிலேய கிறிஸ்தவப் பாதிரி தமிழகம் வந்தபோது, வளம் கொழிக்கும் இப்பூமியைப்பற்றித் தம் தந்தைக்குப் பல கடிதங்கள் எழுதினார். அவர் எழுதிய கடிதங்கள்தாம் இந்நாட்டிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே வர்த்தகத் தொடர்புக்கு வழிகோலின.

கி.பி. 1599 செப்டம்பர் 24ல் லண்டன் வியாபாரிகள் ஒன்றிணைந்து, இந்தியாவில் நேரடியாக வியாபாரம் செய்வதற்காக லண்டன் பவுண்டர்ஸ் ஹால் என்ற இடத்தில் 'லார்ட் மையூர்' என்பவரின் தலைமையில் லண்டன் வியாபாரிகள் சங்கம் ஒன்று உருவாக்கினர்.

கி.பி. 1600 செப்டம்பரில் இங்கிலாந்தை ஆண்டு கொண்டிருந்த எலிசபெத் ராணி கிழக்கிந்திய கம்பெனி ஆரம்பிக்க அனுமதி வழங்கினார்.

இந்தக் கம்பெனி, "இந்தியா, ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் அனைத்து இடங்களிலும் 15 வருடங்களுக்கு மட்டும் வியாபாரம் செய்து கொள்ளலாம்" என்றுதான் அனுமதி பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் எலிசபெத்திற்குப் பின்னர் வந்த முதலாம் ஜேம்ஸ் இந்த அனுமதியை நிரந்தரமாக ஆக்கிவிட்டார்.

1605ல் அக்பர் மரணம் அடைந்து அவரின் மகன் ஜஹாங்கீர் மன்னரானார்.

1609ல் புலிகாட்(பழவேற்காடு) பகுதியில் டச்சுக்காரர்களின் முதல் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.

1611ல் தென்னிந்தியாவில் வைரங்கள், இரத்தினங்கள், விலையுயர்ந்த வண்ணத்துணிகள் ஆகியவற்றிற்கு முக்கிய சந்தையாகத் திகழ்ந்த மசூலிப்பட்டணத்தில் இங்கிலாந்து நாட்டினர் தொழிற்சாலை தொடங்கினர்.

1612ல் ஹுக்ளி நதிக்கரையில், சூரத்தில் வர்த்தக நிறுவனம் அமைத்திட ஆங்கிலேயர் அனுமதி பெற்றனர்.

1615ல் முதலாம் ஜேம்ஸ், சர்.தாமஸ் ரோ என்பவரைக் கிழக்கிந்திய கம்பெனி விவாகாரம் குறித்துப் பேச முகலாய மன்னர் ஜஹாங்கீரிடம் தூது அனுப்பினார்.

ஜஹாங்கீருக்கு நெருக்கமாக இருந்த ஆசிப்கானுக்கு சர்.தாமஸ் ரோ இலஞ்சம் கொடுத்து, சூரத்தில் தனது கம்பெனி அனைத்து வர்த்தகத்தையும் செய்து கொள்ள ஜஹாங்கீரிடம் அனுமதி வாங்கினார்.

இதன் பேரில் கி.பி.1616ல் சூரத் நகரில் டச்சு தொழிற்சாலை தொடங்கப்பட்டது.

கி.பி.1628ல் ஜஹாங்கீரின் மகன் ஷாஜஹான் மன்னரானார்.

கி.பி. 1639ல் ஆகஸ்ட் 29ம் தேதி தாமஸ் வெங்கடபதி என்ற சந்திரகிரி பாளையக்காரரும் பிரான்ஸ்டேயும் ஒப்பந்தம் செய்து கொண்டதன் பேரில் சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்ட அடிக்கல் நாட்டினார்கள்.

கி.பி.1647க்குள் ஆங்கிலேயர் இந்தியாவில் சுமார் இருபத்து மூன்று இடங்களில் தங்களது வர்த்தக நிறுவனங்களை அமைத்துக் கொண்டனர்.

இக்காலகட்டத்தில், சென்னைக்குத் தெற்கே சாந்தோமில் போர்த்துக்கீசியர்களும் பழவேற்காட்டில் டச்சுக்காரர்களும் புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்களும் வியாபாரத்தின் மூலம் ஆதிக்கம் பெற்றிருந்தனர்.

கி.பி.1657 டிசம்பர் 6ல் ஷாஜகானுக்கு சிறுநீர் அடைப்பு ஏற்பட்டு தனது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை அடைந்தார்.

கி.பி.1658 முதல் 1707 வரை ஒளரங்கசீப் ஆட்சி நடந்தது.

கி.பி. 1707 ல் ஒளரங்கசீப் மரணமடைந்தார்.

ஒளரங்கசீப்பின் இறுதி காலத்தில் ஆற்காட்டை தலைநகராகக் கொண்டு தாவூத்கான் முதல் நவாபாக (1703 முதல் 1710 வரை) இருந்தார். ஸஃதுல்லாகான் (1710 முதல் 1732) வரையிலும் தோஸ்த் அலிகான் 1732 முதல் 1740 வரையிலும் சப்தர் அலிகான் 1740 முதல் 1742 வரையிலும் இரண்டாம் ஸஃதுல்லாகான் 1742 முதல் 1744 வரையிலும் அன்வருத்தீன் 1744 முதல் 1749 வரையிலும் நவாபாகப் பதவி வகித்தனர்.

இந்தக் காலகட்டத்தில் ஐரோப்பாவில் ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் கி.பி. 1740ல் நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் எதிரொலியாக இந்தியாவிலும் வர்த்தகம் செய்ய வந்திருந்த ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்குமிடையில் மோதல் வெடித்தது.

இவ்விடம் ஒன்றை நன்றாக நினைவில் நிறுத்த வேண்டும். இந்தியாவின் வளங்களைக் கண்டு வாயடைத்துப் போய், வளங்களை நாட்டு வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவதில் இந்தியர்களுக்கு இருந்த அறிவீனத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் வளங்களை வியாபாரத்தின் மூலம் சுருட்டும் நோக்கத்துடன் மட்டுமே இந்தியாவில் நுழைந்திருந்த ஆங்கிலேய, பிரெஞ்சு, டச்சு வியாபாரிகள் தங்கள் நாட்டில் நடந்த வாரிசுரிமை யுத்தத்தின் நீட்சியாக மட்டுமே தாங்கள் வியாபாரம் செய்ய வந்திருந்த இந்தியாவிலும் முதலில் தங்களுக்கிடையில் அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர்.

இவ்வாறு அவர்களுக்கிடையில் ஆரம்பமான பிரச்சனைகளுக்குத் தத்தம் குழுவினரை மற்றவரைவிட வலிமையாக்கிக் கொள்ள அந்தந்தப் பகுதிகளில் இருந்த இந்தியர்களைப் பல்வேறு வாக்குறுதிகளின் பேரில் தத்தம் நலனுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர்.

இதனால் அவர்களுக்கிடையிலான போரில், எதிர் அணியினரை வெல்ல எதிர் அணியில் இருக்கும் இந்தியர்களையும் வெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவ்வாறான ஒரு போரில், ஆற்காட் நவாப் அன்வருத்தீன் (1744-1749) படைகளைப் பிரெஞ்சுக்காரர்கள் வென்று ஆற்காடைக் கைப்பற்றினர். "ஆம்பூர் போர்" என்றழைக்கப்படும் இப்போரில் அன்வருத்தீன் (1749ல்) பிரஞ்சுகாரர்களால் கொல்லப்பட்டார்.

இதனால் அன்வருத்தீனின் மகன் முஹம்மது அலி திருச்சியில் தஞ்சம் புகுந்தார். இதைச் சந்தர்ப்பமாகக் கருதி முஹம்மது அலிக்கு உதவுவதாகக் கூறி கி.பி. 1751ல் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரி இராபர்ட் கிளைவ் தலைமையில் 210 ஆங்கிலேயர்கள் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதுவரை அவரவர் பகுதியில் தங்களின் வியாபார ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தவர்களின் மனதில் இந்தியாவை முழுவதுமாக ஆக்ரமிக்கும் ஆவல் துளிர் விட ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரெஞ்சுக்காரர்களை ஆங்கிலேயர்கள் அழித்தொழிக்கும் வேலையைக் கவனமாக செய்து வந்தனர்.

1763ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையின்படி ஐரோப்பாவில் ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுகாரர்களுக்கும் போர் முடிவுற்றபோது இந்தியாவிலும் அவர்களிடையே நடந்தப் போர் முடிவுக்கு வந்தது.

இறுதியில் பிரெஞ்சின் கிழக்கிந்திய வணிகக் குழு கி.பி.1770ல் கலைக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி இராணுவப் பிரதேச ஆட்சிக் குழுவாக அரசியல் தன்மை பெற்று, தன் அதிகாரத்தை மென்மேலும் வளர்த்து நிலைநாட்டத் துவங்கியது.

(தொடரும் இன்ஷா அல்லாஹ்)

--சத்தியமார்க்கம்.காம்--

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்