சட்டமன்றத்தில் மின்னணு கழிவுகள் குறித்து ஜவாஹிருல்லா MLA கேள்வியும் அமைச்சரின் பதிலும்... ~ சஹாரா தமிழ்

ads

புதன், 30 ஜூலை, 2014

சட்டமன்றத்தில் மின்னணு கழிவுகள் குறித்து ஜவாஹிருல்லா MLA கேள்வியும் அமைச்சரின் பதிலும்...



முனைவர்.எம்.எச். ஜவாஹிருல்லா:  மின்னணு கழிவுகள் குறித்து எனது கேள்வியும் அமைச்சரின் பதிலும் துக்ளக் வார இதழின் ஆதங்கமும்

கடந்த ஜுலை 25 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது மின்னணுக் கழிவுகள் குறித்து நான் எழுப்பிய கேள்வியும் அதற்கு சுற்றுச் சூழல் அமைச்சர் அளித்த பதிலையும் இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.

பேராபாத்துகளை தாங்கி நிற்கும் மின்னணுக் கழிவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லாத நிலையில் சட்டமன்றத்தில் நான் எழுப்பிய இந்த கேள்வி குறித்து எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. இது குறித்து இந்த வாரம் துக்ளக் இதழில் (6.8.2014) தனது ஆதங்கத்தை வெளிப்பபடுத்தியுள்ளது.

துக்ளக் இதழில் சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து விமர்சனம் செய்யும் 'தோஸ்த்' (மூத்த பத்திரிகையாளர் ரமேஷ்):
'பொதுவாகவே, சபையில் அமளியில் ஈடுபட்டால், மீடியாவில் கிடைக்கிற விளம்பரம், ஆக்கபூர்வமாகப் பேசுகிறவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பது தொடர்ந்து நிலவும் ஒரு குறை. உதாரணமாக, மின்னணுப் பொருட்களின் கழிவால் (e waste) ஏற்படும் பாதிப்புகள் குறித்து, கேள்வி நேரத்தில் ஜவாஹிருல்லாஹ் எழுப்பிய வினா, முக்கியமான ஒரு பிரச்னை சம்பந்தப்பட்டது. செய்திகளில் இப்படிப்பட்ட விஷயங்கள் முக்கியத்துவம் பெறுவதில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

இனி இது தொடர்பாக எனது கேள்விகளும் அமைச்சரின் பதில்களும்
மின்னணுக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா?

மாண்புமிகு திரு. என்.டி. வெங்கடாச்சலம், சுற்றுச் சூழல் துறை அமைச்சர்:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மத்திய அரசினுடைய சுற்றுச்சூழல் வனத் துறை அறிவிக்கையின்படி மின்னணுக் கழிவு (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள் 2011ல் வெளியிடப்பட்டு, 2012 ஆம் ஆண்டு மே 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் 12-9-2013ல் உரிய ஆணைகள் வெளியிடப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் மூலமாக மாண்புமிகு உறுப்பினரு க்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முனைவர்.எம்.எச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
கணினிகள், மடிக்கணிளிகள், இன்னிசைக் கருவிகள், செல்போன்கள், கேமராக்கள், பென்டிரைவ் போன்றவை மின்னணு கழிவாக ஈவேஸ்ட் ஆக கருதப்படுகின்றன. மும்பை, புதுடெல்லி, பெங்களுருக்கு அடுத்ததாக சென்னையிலே ஆண்டொன்றுக்கு 47000 டன் மின்னணு கழிவுகள் கிடைப்பதாக ASSOCHAM(Associated Chamber of Commerce and Industries ) அறிவித்திருக்கிறது. இதில் டிவிக்கள், கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் 26183 டன்கள் சென்னையில் கழிவுகளாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கழிவுகளிலே நச்சுத் தன்மையுள்ள காரியம், பாதரசம், குரோமியம், போன்ற உலோகங்கள் இருக்கின்றன. இந்த உலோகங்கள் கழிவாக ஆகும்போது மனிதர்களுக்குப் புற்று நோய் நரம்புத் தளர்ச்சி, கண் பார்வைக் குறைபாடு போன்ற பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன. விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மண்னையும், நீரையும், காற்றையும் மாசுபடச் செய்கிறது. மாண்புமிகு அமைச்சர் குறிப்பிட்டது போல E-Waste (Management and Handling ) Rules 2011 படி இந்த மின்னணு பொருட்களைத் தயாரிக்கக் கூடியவர்களுக்கு உருவாக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்புடைமை அதாவது Extended Producer Responsibility என்று ஒன்று இருக்கிறது. இந்த விதியின்படி இந்த மின்னணு பொருட்களைத் தயாரிக்கக்கூடிய தயாரிப்பாளர்கள் அது பயன்பாடு முடிவடைந்தபிறகு அதற்கானCollection Centre சேகரிப்பு நிறுவனம் அமைக்கவேண்டும்.

அதேபோன்று, dismantling அதை பிரிப்பதற்கும் மற்றும் recycle மறுசூழற்ச்சி செய்வதற்கும் அந்த விதிகளிலே இடம் இருக்கிறது. அதை நடைமுறைப்படுத் துவதற்கு தமிழக அரசு எத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்று வினவுகின்றேன்.

மாண்புமிகு திரு. என்.டி. வெங்கடாச்சலம், சுற்றுச் சூழல் துறை அமைச்சர்

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,E-Waste என்று சொல்லக்கூடிய மின்ணணு கழிவில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்கும்பொருட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய தலைமையிலான தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொழிற் சாலைகளுக்கு மின்னணு கழிவுகளை சேகரித்து பிரித்தெடுப்பதற்காக, மின்னணு கழிவுகள் மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகள் 2011ன் கீழ் உரிய அனுமதி வழங்கிவருகிறது.

இதுவரை மேற்கண்ட விதியின் கீழ் 16 தொழிற்சாலைகளுக்கு மின்னணு கழிவு உதிரிபாகங்களை தனித்தனியாக பிரித்தெடுத்து மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுப்புவதற்கும், அங்கீகாரம் மற்றும் பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

அவற்றில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்பத்துர் அருகிலே சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள திருவாளர் TES-AMM (India) Private Limited என்ற தனியார் நிறுவனம் முறையான அனுமதி பெற்று மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்து வருகிறது என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். மின்னணு கழிவுகளை பொதுமக்களிடம் மற்றும் நிறுவனங்களிடமிருந்து சேகரித்து மறுசுழற்சி நிலையங்கள் மற்றும் பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவைக்கும் பொருட்டு 7 சேகரிக்கும் மையங்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

முனைவர்.எம்.எச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்களின் விளக்கத்திற்கு நன்றி ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி பகுதிகளிலே, ஒவ்வொரு வார்டிலும் இதுபோன்ற மின்னணு கழிவுகளை சேகரிப்பதற்காக வேண்டி சுற்றுச்சூழல் துறை உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தி கண்டிப்பாக நடைமுறைப்படுத்துமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. என்.டி. வெங்கடாச்சலம், சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உள்ளாட்சித் துறையின் மூலமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளிலே குப்பைகளை பிரித்தெடுக்கும்போது அந்தக் குப்பையெல்லாம் பிளாஸ்டிக் கழிவுகளை தனியாகவும் மின்னணுக் கழிவுகளை தனியாகவும், பிரித்தெடுக்கின்ற வகையிலே அரசு உள்ளாட்சித் துறையின் மூலம் உள்ளாட்சிகளுக்கு பின் என்று சொல்லக்கூடிய தனித்தனிப் பெட்டிகளை வழங்கும் வகையில் பேரூராட்சி பகுதிகளுக்கு நிதியை ஒதுக்கீடு செய்து, அந்தத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகின்றது என்பதை மாண்புமிகு உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்