சேலம் அருகே அரசு பஸ் தீப்பற்றி எரிந்தது. 38 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 26 பிப்ரவரி, 2015

சேலம் அருகே அரசு பஸ் தீப்பற்றி எரிந்தது. 38 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.



சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக பஸ் ஒன்று நேற்று மாலை 4.10 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் 38 பயணிகள் பயணம் செய்தனர்.

அந்த பஸ் மாலை 4.40 மணிக்கு சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பனமரத்துப்பட்டி பிரிவு ரோட்டில் வீராசாமிபுதூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பஸ்சில் டீசலுடன் கலந்து ஏதோ எரியும் புகை வாசம் வந்தது. அந்த பகுதியில் அதிகமான அளவில் மரவள்ளி கிழங்கு அரவை ஆலை இருப்பதால், ஆலையில் இருந்து ஏதாவது துர்நாற்றம் வரலாம் என எண்ணி பயணிகள் மூக்கை பிடித்தபடி அமர்ந்திருந்தனர்.

ஆனால், கண்டக்டர் முருகேசனுக்கு சந்தேகம் ஏற்பட்டு டிரைவர் குப்புசாமியிடம் தெரிவித்து பஸ்சை நிறுத்த சொன்னார். உடனடியாக பஸ்சை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு, இருவரும் கீழே இறங்கி பார்த்தனர். அப்போது பஸ்சின் டீசல் டேங்க் அருகே உள்ள வயரில் இருந்து தீப்பொறி விழுந்து கரும்புகை வெளியேற தொடங்கியது.

38 பயணிகள் உயிர்தப்பினர்

உடனடியாக பஸ்சில் இருந்த 38 பயணிகள் கீழே இறங்க அறிவுறுத்தப்பட்டனர். பயணிகள் அலறி அடித்தபடி வேகமாக உடமைகளுடன் கீழே இறங்கினார்கள். பயணிகள் கீழே இறங்கி கொண்டிருக்கும் வேளையிலேயே பஸ், மளமளவென எரிய தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பின்னர், தீ எரிவது கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் பஸ் முழுமையாக எரிந்து எலும்புக்கூடு போல ஆனது.

முரண்பட்ட தகவல்

பஸ் தீப்பிடித்ததற்கு பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் மறைத்து எடுத்து சென்ற யூ.பி.எஸ். பேட்டரிதான் காரணம் என்றும், அந்த சார்ஜபிள் பேட்டரி உராய்ந்ததால் தீப்பொறி ஏற்பட்டு விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான விசாரணையை மல்லூர் போலீசார் நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

இது தொடர்பாக மல்லூர் போலீசாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘பஸ்சின் டீசல் டேங்க் கசிவே தீ விபத்துக்கு காரணம் என்ற தகவலின் பேரில்தான் விசாரணை நடத்தி வருகிறோம். எரிந்து நாசமான பஸ்சில் பயணி விட்டு சென்ற யூ.பி.எஸ். பேட்டரி எதையும் நாங்கள் கைப்பற்றவில்லை’’ என்றனர்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்