வாக்காளர்களின் விரலில் மையை பெரியதாகவும், தடிமனாகவும் வைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவு ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 4 ஜூன், 2015

வாக்காளர்களின் விரலில் மையை பெரியதாகவும், தடிமனாகவும் வைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவு



தேர்தலில் வாக்களிப்பவர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் அடையாள மையை பெரியதாகவும், தடிமனாகவும் வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர்களின் விரலில் அதிகாரிகள் சரியாக மை வைப்பதில்லை என தொடர்ச்சியாகப் புகார் எழுந்ததையடுத்து மேற்கண்ட முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கையில், "வாக்காளரின் இடது கை ஆள்காட்டி விரலின் நக முனையிலிருந்து முதலாவது மூட்டு தொடும் வரை பெரிய அளவில் பட்டையாக மை வைக்க வேண்டும்; இதற்காக பிரத்யேக பிரஷ் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்னம் பொருந்திய பொத்தானை வாக்காளர் அழுத்துவதற்கு முன்பு அவரது விரலில் அழியாத மை வைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கையாளும் தேர்தல் அதிகாரி உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற சில தேர்தல்களில் வாக்களர்களின் விரலில் சரியாக மை வைக்கப்படவில்லை என புகார்கள் வந்ததால், இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி வைக்கவுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், அலுவலர்களுக்கு இதுகுறித்துப் பயிற்சி அளிப்பதுடன், பெரிய மை குறித்த அறிவிப்புச் சீட்டை வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைத்து அனுப்பி வைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களின் விரல்களில் மை வைக்க சில இடங்களில் தீக்குச்சியைப் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், மையுடன் சேர்த்து, பிரஷ் ஒன்றையும் அனுப்பி வைக்குமாறு மைசூர் நிறுவனத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

கர்நாடக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும், "மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ்' நிறுவனத்திடம் இருந்து வாக்குப்பதிவு அடையாள மை கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த நிறுவனம் கடந்த 1962-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல் முதல் தற்போது வரை மை வழங்கி வருகிறது. சில வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து மை அனுப்பப்படுகிறது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்