ஷவ்வால் மாத நோன்பு.
யார் ரமளான் மாத நோன்பிற்கு பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூ அய்யூப் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.
ஹஜ் மாதத்தில் அரஃபா நோன்பு (ஹாஜிகள் அல்லாதவருக்கு)
அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் ''அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கும் என நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறினார்கள். அறிப்பாளர் அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.
ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை.
அரஃபா தினத்தன்று, அரஃபா மைதானத்தில் (கூடியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். அறிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அபூதாவூத், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா.
முஹர்ரம் மாத நோன்பு
நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்
நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய (ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும் நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்.
மாதத்தில் மூன்று நோன்புகள்.
மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும், ரமளானில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்பதாக அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்.
''நீர் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்றால் அதை பதிமூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நாட்களில் நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூதர் (ரலி) நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்.
திங்கள், வியாழன் கிழமைகளில் நோன்பு
நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தனர். அறிப்பாளர் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா.
ஒவ்வொரு வியாழனும், திங்களும் அமல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என் அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூஹீரைரா (ரலி) நூல்கள்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா.
நபி (ஸல்) அவர்கள் மாதத்தில் மூன்று நோன்புகளை மாதத்தின் ஆரம்பவார திங்கட்கிழமை, அடுத்து வரக்கூடிய வாரம் வியாழக்கிழமை, அதற்கு அடுத்து வரக்கூடிய வியாழக்கிழமை என்று நோற்பார்கள். அறிப்பாளர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: நஸயீ.
வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கலாமா?
நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம் வெள்ளிக்கிழமை நோன்பை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களா? என்று வினவினேன் அதற்கு ''ஆம்'' என்றார்கள். அறிவிப்பாளர், முஹம்மது பின் அப்பாத் (ரஹ்) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.
''உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முந்திய பிந்திய நாள் நோன்பு நோற்றாலன்றி வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூஹுரைரா (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா.
சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாது.
உங்கள் மீது கடமையாக்கப்பட்டு இருந்தாலே தவிர சனிக்கிழமை நோன்பு நோற்க வேண்டாம், (சனிக்கிழமைகளில் உண்பதற்கு) திராட்சைத் தொலி அல்லது மரக்குச்சியைத் தவிர வேறு ஏதும் கிடைக்காவிட்டால் அதையாவதுமென்று விடட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் ளும்மாயி பின்த் புஸ்ர்(ரலி) திர்மிதி, அபூதாவூத்
இரு பெருநாள்களில் நோன்பு இல்லை.
நபி(ஸல்) அவர்கள் இரண்டு நாள்கள் நோன்பு நோற்பதை தடை விதித்துள்ளார்கள் அவை ஃபித்ரு பெருநாள் மற்றும் குர்பானி பெருநாள். அறிப்பாளர் அபூஸயீதில் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.
அய்யாமுத் தஷ்ரீக் (ஹஜ் பெருநாள் அடுத்த மூன்று) நாட்களும் உண்பதற்கும், பருகுவற்கும் உரிய நாட்களாகும். அந்நாட்களில் நோன்பு ஏதும் இல்லை என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிப்பாளர் ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) நூல்: அஹ்மத்.
காலமெல்லாம் தொடர் நோன்பு கூடாது
''நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ''நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே? என்று நபித்தோழர்கள் கேட்டனர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''நான் (எல்லா விஷயத்திலும்) உங்களைப் போன்றவனல்லன் நிச்சயமாக நான் உண்ணவும், பருகவும் வழங்கப்படுகிறேன் என்றோ உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவு பொழுதை கழிக்கிறேன் என்றோ கூறினார்கள். அறிப்பாளர் அனஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பீராக என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியபோது, இதைவிட எனக்கு அதிக சக்தியுள்ளது என்றேன். முடிவில் நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டு விடுவீராக அதுதான் நோன்புகளில் சிறந்ததாகும், என் சகோதரர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்கவே இல்லை. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.
பிறை 1 | பிறை 2 | பிறை 3 | பிறை 4 | பிறை 5 | பிறை 6 | பிறை 7 | பிறை 8 | பிறை 9 | பிறை 10 | பிறை 11 | பிறை 12 | பிறை 13 | பிறை 14 | பிறை 15 | பிறை 16 | பிறை 17 | பிறை 18 | பிறை 19 | பிறை 20 | பிறை 21 | பிறை 22 | பிறை 23 | பிறை 24 | பிறை 25 | பிறை 26 பிறை 27
--சத்தியமார்க்கம்--