ஹஜ்: சொர்க்கத்தின் கல்லை முத்தமிடுவது ஏன்? ~ சஹாரா தமிழ்

ads

செவ்வாய், 10 நவம்பர், 2009

ஹஜ்: சொர்க்கத்தின் கல்லை முத்தமிடுவது ஏன்?

ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகின் பல்வேறு பகுதிகளி­ருந்தும் மக்காவை நோக்கி முஸ்­லிம்கள் குழுமும் காலமிது!

ஹஜ்ஜின் பல செயல்முறைகளில் ஹஜருல் அஸ்வத் எனும் கல்லை முத்தமிடுவதும் ஒன்று. இப்படி நீங்கள் கல்லை முத்தமிட்டு வணங்குகிறீர்களே? என்று முஸ்லி­ம் அல்லாதவர்கள் கேட்பதுண்டு. ஓரிறைக் கொள்கையைக் கூறும் இஸ்லாத்தில் இப்படி ஒரு கல் வழிபாடு இருப்பது எப்படி? என்ற கேள்வி முஸ்­லிம்களில் சிலரிடம் கூட உண்டு.


கண்டதையும் கடவுள் என வழிபாடு செய்யும் மக்களிடம் இதுமாதிரியான வழக்கங்கள் இருக்குமானால், இதுகுறித்து எவரும் விமர்சனம் செய்ய மாட்டார்கள். ஆனால் அல்லாஹ்வை மட்டுமே கடவுள் என நம்பி, அவனை மட்டுமே வணங்கும் மக்களிடம் கல்லை முத்தமிடல் எனும் வழக்கம் இருப்பது எவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

இஸ்லாத்தின் மீது எதையேனும் தூற்ற வேண்டும் என்ற கருத்தில் இருப்போர், நாங்கள் மட்டும்தான் கற்சிலையை வணங்குகிறோம். நீங்களும்தானே கல்லை வணங்குகிறீர்கள்? என்று கூறுவர்.

கஃபாவை வலம்வரும் மக்கள் கஃபாவின் சுவற்றில் பதியப்பட்டுள்ள கருப்பு நிறக் கல்லை முத்தமிடுவது திடீரென உருவான வழக்கம் அல்ல. நம் நபி (ஸல்) அவர்களும்கூட இந்த கல்லை முத்தமிட்டு இருக்கிறார்கள். இப்படி முத்தமிட்டதைத்தான் வணக்கம் லி வழிபாடு என சிலர் புரிந்து கொண்டனர்.

இது வெறும் முத்தம்தான். வணங்குவது என்ற நோக்கில் இடப்படும் முத்தமல்ல! ஒன்றை வணங்குவது என்பதன் பொரு ளைப்புரிந்து கொண்டால் இதுபோன்ற விமர்சனமும், தேவையற்ற விவாதமும் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

ஒருவர் கற்சிலையை வணங்கு கிறார். அவர் கூறும் வேதச்சொற்களை அந்த கற்சிலை புரிந்து கொள்ளும், ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறார். ஒருவர் அதே கற்சிலை முன் பிரார்த்தனையிலும் ஈடுபடுகிறார். இது நம் பிரார்த்தனையைக் கேட்டு, நமக்கு உதவி புரியும் என்றும் நம்புகிறார். இந்த கற்சிலை முன் நாம் பயபக்தியுடன் நடந்து கொள்ளா விட்டால் இந்த கற்சிலை நம்மை தண்டித்துவிடும், நம் பிரார்த்தனையை ஏற்காமல் புறக்கணித்துவிடும் என்றும் நம்புகிறார்.

இந்த நம்பிக்கை முறைதான் கற்சிலையை வணங்குவது என்பதன் பொருள். எது கேட்டாலும் தரும். கேட்காவிட்டால் தண்டிக்கும் என்று அதற்கு மதிப்பளிப்பதோ, பயப்படுவதோ தான் வணக்கத்தின் அளவுகோலாக அமைந்து விடுகிறது.

இது மாதிரியான நம்பிக்கையை ஏக இறைவன் முன்தான் வெளிப்படுத்த வேண்டும். இதுதான் வணக்கம் எனக் கூறுகிறது இஸ்லாம். கற்சிலை முன் அல்லது சாதாரணமாக உள்ள நம்மைப் போன்ற மனிதன் முன்கூட இப்படி நடந்துகொள்வது கூடாது என்று இஸ்லாம் எச்சரிக்கிறது.

அப்படியானால் ஹஜ்ஜுக்குச் செல் வோர் கல்லை முத்தமிடுகிறார்களே என்ற வினா மீண்டும் எழவே செய்யும். அந்தக் கல்லை முத்தமிடுவது என்பது அதை வணங்குவது என்ற பெயரால் நடப்பதல்ல! நபி (ஸல்) அவர்கள் செய்ததால் நாமும் செய்கிறோம் என்ற நிலையிலேயே அந்தக் கல் முத்தமிடப்படுகிறது.

இஸ்லாமியப் பேரரசின் இரண்டாம் கலீபாவும், நபி (ஸல்) அவர்களின் நெருங்கியத் தோழருமான உமர் (ர­) அவர்கள் தமது ஹஜ்ஜின் போது அந்தக் கல்லை முத்தமிட்டுவிட்டு, அந்தக் கல்லை நோக்கி நிச்சயமாக நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். உன்னால் எந்த நன்மையும், எந்தத் தீமையும் செய்ய முடியாது என்பதையும் அறிவேன். நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிட்டதை நான் பார்த்திருக்கா விட்டால் நான் உன்னை முத்தமிட்டு இருக்கவே மாட்டேன் என்று கூறினார்கள்.

(புகாரி 1597, முஸ்­லிம், அஹ்மத், நஸயீ)

மக்காவை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டபோது, கஃபா ஆலயம் சிலை வணங்கிகளின் கையில் இருந்தது. அதில் ஏராளமான சிலைகள் இருந்தன. ஓரிறைக் கொள்கையை போதித்த இப்றாஹிம் (அலை), இஸ்மாயில் (அலை) ஆகியோரும்கூட சிலைகளாக கஃபாவினுள் நிறுத்தப்பட்டிருந்தனர். மக்காவைக் கைப்பற்றியதும் கஃபாவில் நுழைந்த நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்த சிலைகளை முத­ல் அப்புறப்படுத்தினார்கள். அப்படி கற்சிலைகளை அப்புறப்படுத்திய அவர்கள் கல்லை வணங்கி இருப்பார்களா?

அப்படியானால் அந்தக் கல்லை ஏன் முத்தமிட வேண்டும்! நபி (ஸல்) அவர்கள் முத்தமிட்டதன் காரணம் என்ன? என்பதை ஆராயும் போது ஒரே ஒரு காரணம் மட்டுமே நமக்கு புலனாகிறது.

ஆம்! அந்தக் கல் சொர்க்கத்தின் கல்லாகும். சொர்க்கத்தின் பொருள் ஒன்று. பூமியில் இருப்பது மகிழ்ச்சியான விஷயமல்லவா! சொர்க்கத்தில் பொரு ளாக இதைத் தவிர வேறு எதுவும் இவ்வுலகில் இல்லை என்பதும் முக்கியக் காரணமாகும்.

ஹஜருல் அஸ்வத் எனும் கருப்புக் கல் சொர்க்கத்தின் கற்களில் உள்ளதாகும். இவ்வுலகில் சொர்க்கத்தின் பொருள் என்று வேறு எதுவும் இதைத் தவிர கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ர­) அறிவிக்கிறார்கள். (தப்ரானி)

நாம் அதிகம் நேசிக்கும் பொருள் ஒன்று நம் கண்முன்னே இருக்கிறது. அதை கூடுதல் கவனத்துடன் வைத்துக் கொள்வோம். அதை பழுதடையாமல் பாதுகாப்போம். காணாமல் போகாத அளவுக்கு கூடுதல் கவனம் வைப்போம். இதுதான் இயல்பு.

மேலும் இனி நாம் சேரவேண்டிய இடமான சொர்க்கத்தின் கல்லே நம் கண்முன்னே இருப்பது நம் நேசத்திற்குரியதாக மாறிவிடுகிறது. இந்த வகையில்தான் அதை முத்தமிட்டார்கள் என்று கருதலாம். வழிபாடு , வணக்கம் என்ற நிலையில் நபி (ஸல்) அவர்கள் அதை அணுக வில்லை என்பதற்கு பின்வரும் ஹதீஸ் சான்றாக உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து கஃபாவை தவஃப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வத் எனும் கருப்புக்கல் அருகே வரும்போது தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜ்ருல் அஸ்வதை நோக்கி சைகை செய்துவிட்டு, அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி­) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 1613)

இந்த சம்பவத்தில் கருப்புக் கல்லை முத்தமிட முடியாத போது அதை நோக்கி கையால் வேறு பொருளால் சைக்கினை செய்துள்ளார்கள் என்பதை அறிகிறோம். மேலும் அல்லாஹ் மிகப்பெரியவன் என்று கூறி அல்லாஹ்வை முன்னிலைப் படுத்தியுள்ளார்கள் என்பதையும் அறிகிறோம். அதாவது நீ கல் தான். சொர்க்கத்துக் கல் என்பதால்தான் உனக்கு மதிப்பு. என் இறைவன் அல்லாஹ்தான். அவன்தான் மிகப்பெரியவன் என்ற கருத்திலேயே அல்லாஹு அக்பர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளார்கள்.

எனவே கஃபாவில் உள்ள கருப்புக் கல் வழிபாடு செய்யும் நோக்கில் அமைக்கப்பட்டதல்ல; அது சொர்க் கத்துக் கல் என்ற அளவிலான மதிப்பை மட்டுமே பெறுகிறது என்பதை நினைவில் கொள்வோம்!
--மக்கள் உரிமை--

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்