காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல்கள்:25 வருடங்கள் ஆகியும் ஆறாத வடுக்கள்... ~ சஹாரா தமிழ்

ads

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல்கள்:25 வருடங்கள் ஆகியும் ஆறாத வடுக்கள்...

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியிலுள்ள பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது விடுதலைப்புலிகளினால் நடத்தப்பட்ட தாக்குதலின் 25வது ஆண்டு நினைவு இன்று உள்ளுர் முஸ்லிம்களினால் அனுசரிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடுகளின் தாக்கம் இன்றும் பள்ளிவாசல் சுவர்களில் காணப்படுகிறது
அச்சம்பவத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் நினைவாக தாக்குதல்கள் நடத்தப்பட்ட பள்ளிவாசல்களில் மதரீதியான நிகழ்வுகளும் நடைபெற்றன.
கடந்த 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி இரவு மஸ்ஜிதுல் ஜும்மா பள்ளிவாசலில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது முதலில் தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகள் பின்னர் மஞ்சந்தொடுவாய் ஹுசைனியா பள்ளிவாசலில் அவ்வேளை காணப்பட்ட முஸ்லிம்கள் மீதும் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.
விடுதலைப்புலிகளினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளிலும் கைக்குண்டு தாக்குதல்களிலும் சிறுவர்கள், முதியவர்கள் உட்பட 103 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். 140 பேர் வரை காயப்பட்டிருந்தார்கள்.

பிரேமதாசவுடன் உடன்பாடும், முறிவும்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தலைமையிலான அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட உடன்படிக்கையை அடுத்து 1989ம் ஆண்டு யுத்த நிறுத்தமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பின்னர் 1990ம் ஆண்டு ஜுன் மாதம் நடுப்பகுதியில் அது முறிவடைந்தது.
இக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகளினால் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களும் இடம்பெற்று வந்த நிலையிலே தனி முஸ்லிம் பிரதேசமான காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
விடுதலைப்புலிகளின் இந்தத் தாக்குதலை நினைவுகூரும் வகையில், பள்ளிவாசல்களின் சுவர்களில் துப்பாக்கிச்சூடுகள் மற்றும் கைக்குண்டு தாக்குதல்களின் தடயங்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் மாறாத வடுக்களாக தொடர்ந்தும் பேணப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தரும் உள்நாட்டு , வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் அதனை பார்வையிடுகின்றார்கள்.

பேணப்படும் தடயங்கள்

25 வருடங்களுக்கு முன்னதாக நடந்த இந்தச் சம்பவங்களை மன்னிக்க முடிந்தாலும் மறக்க முடியாதது என்பதற்காகவே அந்தத் தடயங்களை அழிக்காமல் பேணிப் பாதுகாப்பதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் மஸ்ஜிதுல் ஜும்மா பள்ளிவாசலின் தலைவரான முகமது இப்ராகிம் முகமது சுபைர்.
விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல்
போர்க்குற்ற விசாரணை உட்பட எந்தவொரு விசாரணை நடைபெற்றாலும் இழந்த உயிர்கள் கிடைக்கப் போவதில்லை, நடந்த சம்பவங்கள் மறப்போவதில்லை என்பதாலேயே தாங்கள் எந்தவொரு விசாரணையிலும் ஈடுபாடு காட்டவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் ஆனாலும் கிழக்கு வாழ் முஸ்லிம்கள் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை மறக்க முடியாதவர்களாகவே உள்ளனர் என அங்கிருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்