அகதிகளாக வெளியேறிய முஸ்லிம்களின் நிலை ~ சஹாரா தமிழ்

ads

செவ்வாய், 1 டிசம்பர், 2009

அகதிகளாக வெளியேறிய முஸ்லிம்களின் நிலை

(இலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து அகதிகளாக வெளியேறிய முஸ்லிம்களின் நிலை இலங்கையில் போர் முடிவடைந்த இன்றைய நிலையில் எப்படி உள்ளது என்பது குறித்து நேரடி தகவல்களை இந்த கட்டுரையில் தருகிறார் மவ்லவி எஸ்.ஹெச்.எம். இஸ்மாயில் சலஃபி)



1990 களில் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் அவர்களது தாயக பூமியிலிருந்து புலிகளால் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டனர். அணிந்திருந்த ஆடையுடன் அடுத்த கட்ட வாழ்வு குறித்து அடுக்கடுக்கான கேள்விகளுடன் வெளியேறிய முஸ்லிம்கள், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகள் என்ற இருண்ட உலகில் வாழ்ந்து வருகின்றனர்.

தேசத் துரோகிகளால் விரட்டப்பட்ட தேசியவாதிகள் அகதி முகாம்களில் அல்லல்பட்டு, தொல்லைப்பட்டு தமது ஊரை இழந்து, உறவுகளை இழந்து, சமூக கௌரவத்தை இழந்து தமது பாரம்பரியக் கலை-கலாசாரத்தை இழந்து இருபது வருடங்களை ஓட்டி விட்டனர். கடந்த காலங்களில் இலங்ககையின் வடக்கு மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றிப் பேசப்பட்டாலும், விரட்டிய புலிகளின் அதிகாரபூர்வமான உத்தரவின்றி உள்ளே நுழைந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை நீடித்ததால் முஸ்லிம்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை.

மாறி மாறி ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தவர்கள் வட மாகாண முஸ்லிம்கள் குறித்து அலட்டிக்கொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர். இலங்கை முஸ்லிம் தலைவர்களும் தாலாட்டுப் பாடிக்கொண்டிருந்தனர்.

புலிகளுக்கும், அரசுக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது சமாதானக் காலத்தில் சில முஸ்லிம்கள் தமது தாயக மண்ணில் சென்று குடியேறினர்.
சமாதானச் சூழல் எப்போது வேண்டுமென்றாலும் மறைந்து யுத்த மேகம் சூழ்ந்து இரத்த மழை பொழியலாம் என்ற அச்சம் இருந்ததால் அநேகர் அஞ்சினர். இதே வேளை கடந்த சமாதானக் காலத்தில் கூடப் புலிகள் முஸ்லிம்கள் விடயத்தில் மிருக வெறியுடன் நடந்து கொண்டனர். மூதூர்-வாழைச்சேனையெனப் புலிகளின் மனித வேட்டை தொடர்ந்தது. மீள்குடியேற்றத்திற்கு அப்போதைய அரசும் சமாதானப் பேச்சுக் கலைந்து விடக் கூடாது என்பதைக் காரணம் காட்டி, கை கட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. எனவே அந்தச் சூழலும் முஸ்லிம்கள் தமது முகத்தில் குத்தப்பட்ட அகதி| என்ற அவமானச் சின்னத்தை அழிக்க முடியாதது போல் ஐயத்தை உண்டுபண்ணியது.

நல்ல தருணம்


தற்போது யுத்த மேகம் கலைந்து விட்டது! மனித இரத்தம் குடித்து வந்த புலிகள் ஒழிந்து விட்டனர். சமாதானம் நிலைநாட்டப்பட்டு விட்டது! வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சுயகௌரவத்துடன் தமது தாயக மண்ணில் தடம் பதிக்க நல்ல தருணம் இதுவாகும்.
புலிகளால் முஸ்லிம்கள் விரட்டப்பட்ட பின்னர் அவர்களது உடைமைகள் சூறையாடப்பட்டன. அவர்களது கால்நடைகள், வீட்டுத் தளபாடங்கள், வீட்டின் கூரை, ஜன்னல்-கதவுகள் என அனைத்தும் சூறையாடப்பட்டு விட்டன! அவர்களது விவசாயப் பூமிகள் யானை உலாவும் காடுகளாகி விட்டன! இந்த நிலையில் முஸ்லிம்கள் மீளக் குடியேறுவதென்றால் மிகப் பெரும் அபிவிருத்திப் பணிகள் நடந்தாக வேண்டும்.

அரசு பாதை வசதிகளையும், வடிகால் அமைப்புக்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது. குடியேறுபவர்களுக்கு 14 தகரங்கள் வழங்கப்படுகின்றன. அவர்கள் அதற்குத் தேவையான தடிகளைக் காட்டில் வெட்டிக் குடில்கள்-கொட்டில்கள் அமைத்து வாழ அனுமதிக்கின்றது. அத்துடன் பெருமளவில் மின்சார வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மீள்குடியேறும் குடும்பம் ஒன்றுக்கு தலா 25 ஆயிரம் பணத்தைக் காசாகவும், வங்கிக் கணக்காகவும் வழங்கி வருகின்றது.

ஆனால், அங்கு குடியேறும் மக்களின் அவலத்தை அகற்ற இது ஒன்றும் போதாது. நாம் நேரடியாக மன்னார் முஸலி பிரதேசத்தைப் பார்வையிட்ட வகையில் அந்த மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்தவர்கள். தமது விவசாய பூமியில் விவசாயம் செய்யும் எண்ணத்தில்தான் குடியேறியுள்ளனர். அவர்களுக்கு விதை நெல் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், விவசாய நிலத்தைப் பயன்படுத்தி பயிர் செய்ய உபகரணங்களோ, பசளை வசதிகளோ அற்ற நிலையில் தவிக்கின்றனர்.

பள்ளிவாசல்கள் அனைத்தும் உடைந்து போயுள்ளன. புலிகள் தமது தேவைக்காகப் பயன்படுத்திய சில கட்டிடங்களும், சமாதான காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களும் ஓரளவு அழிவிலிருந்து தப்பியுள்ளன.

பாடசாலைகள் போதிய வசதியின்றியுள்ளன. தூர இடங்களிலிருந்து கால்நடையாகப் பாடசாலை வரும் மாணவர்கள் சீருடையில்லாமல் கூட வரும் நிலை நீடிக்கின்றது.
அகதிகள் அனுபவிக்கும் சிரமங்கள்

சொந்த நாட்டில் அகியாக வாழ்ந்த அவலம் நீங்கி தற்போது சொந்த பூமியில் கடல் தொழிலாளிகள், கடல் தொழில் உபகரணங்கள் எதுவுமின்றி உப்புக் கடலைப் பார்த்து ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

கழிப்பிட வசதிகள் கூட இல்லாததால் பெண்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். சுற்றுச் சூழல் மாசடைந்துள்ளது. தற்போதைய அடைமழை மற்றுமொரு தடையாக வந்து சேர்ந்துள்ளது.

மழை நீரில் குடிசைகள் மூழ்கும் நிலையில் உள்ளன. சில பகுதிகளில் யானைப் பயமும், பல இடங்களில் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் பற்றிய அச்சமும் மக்களை வாட்டிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலும் வடக்கு முஸ்லிம்கள் மீள்குடியேற்றத்தில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரை சுமார் பத்து சதவிகித முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன. அடுத்த ஆண்டில் குடியேறும் வீதம் அதிகரிக்கலாம். அப்போது மற்றுமொரு பெரும் சிக்கலை முஸ்லிம்கள் சந்திப்பர்.

புலிகளால் வெளியேற்றப்படும் போது இருந்ததை விட குடும்பங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இவர்கள் தமது இருப்பிடங்களுக்குச் சென்றால் மிகப் பெரும் அளவில் நிலப்; பற்றாக்குறை ஏற்படும். ஒரு குடும்பம் குடியிருந்த இடத்தில் சுமார் மூன்று அல்லது நான்கு குடும்பங்கள் குடியேற நேரிடும். அது போக முஸ்லிம்களின் நிலங்கள் அந்நியர் ஆதிக்கத்திற்குட்பட்டும் இருக்கலாம். எனவே, அரசு அவர்களுக்கு அரசு நிலத்தில் இடம் வழங்க வேண்டும். எனினும் அரசு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை.


புலிகளுக்கு எதிரான போரில் வன்னித் தமிழ் மக்கள் பெரும் அளவு இடம் பெயர்வுக்குள்ளானார்கள். அவர்கள் பல்வேறு வகையான மிகப்பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வவுனியா மெனிக் ஃபாம்|, செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாமிலும் அல்லல்பட்டு வருகின்றனர். சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அரசு இவர்களின் இடம்பெயர்வில்தான் அக்கறை செலுத்துகின்றது. இதே வேளை, சர்வதேச சமூகமும் தமிழ் அகதிகளின் அவலம் நீக்க அள்ளிக் கொட்டிக்கொண்டிருக்கின்றது. இந்தியா - 500 கோடி, தமிழக முதல்வர் - 15 கோடி, ஜப்பான் - 11.7 கோடி, அமெரிக்கா – 5.6 கோடி டொலர் என வழங்கியுள்ளன. இவ்வாறே வேறு பல நாடுகளும், நிறுவனங்களும் நிதியைக் கொட்டியுள்ளன. யு.எஸ்.ஏய்டு - 15 மில்லியன் டொலரையும், ஆஸ்திரேலியா - 5.25 மில்லியன் டாலர், கனடா - 22.5 மில்லியன் டாலர், இங்கிலாந்து - மூன்று மில்லியன் பவுன் என உதவிப் பட்டியல் தொடர்கின்றது.

வட மாகாண முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் பிரச்சினையை சர்வதேசப்படுத்தாத எமது குறையால் இது ஏற்பட்டதா? அல்லது சர்வதேச சமூகத்தின் நீதி-நியாயமற்ற பார்வையினால் இந்தப் பாகுபாடு ஏற்பட்டதா? என்பது புரியவில்லை.

இருப்பினும் சமாதான காலத்திற்குப் பின்னர் ஏற்பட்ட போரின் போது இடம்பெயர்ந்தவர்களைத்தான் அரசு, அகதி என்ற நிலையில் வைத்துக் கவனிக்கின்றது. இந்த வகையில் புலிகளும், அரசும் சமாதானம் பேசும் போது தாயக பூமிக்குச் சென்று, பின்னர் போர் காரணமாக இடம்பெயர்ந்த சில முஸ்லிம் குடும்பங்களும் இந்த உதவிக்குள் ஈர்க்கப்பட்டுள்ளனர். மற்றப்படி 90 களில் வெளியேற்றப்பட்டவர்கள் இந்தக் கவனிப்புக்குள்ளாக மாட்டார்கள் என்பது முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் சொல்லொண்ணா இழப்பும், ஏமாற்றமுமாகும்.

முஸ்லிம் தலைவர்களின் கடமை
எனவே, 90 களில் வெளியேற்றப்பட்ட அனைவரும் அகதிகளுக்குரிய அத்தனை சலுகைகளையும் பெறும் வண்ணம் அவர்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பது முஸ்லிம் தலைவர்களின் தலையாய கடமையாகும்..

இதே வேளை, அரசு முழு உதவியையும் செய்யட்டும் அதன் பின் போகலாம் என்று எமது தாயக பூமியைத் தாரைவார்க்க முடியாது. முஸ்லிம்கள் அனைவரும் மீள்குடியேற்றத்தில் ஆர்வம் கொள்ள வேண்டும். சில சிரமங்களை அனுபவித்தாவது தமது உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.

இதற்காக உதவியும், ஒத்துழைப்பும் நல்குவது சமூகத் தலைமைகளினதும், சமூக நிறுவனங்களினதும் தலையாய கடமையாகும்.

90 களில் எமது சகோதரர்கள் வெளியேற்றப்பட்ட போது அவர்களை ஆதரித்து, அரவணைத்து, அனுசரித்தது போன்று, அவர்கள் தமது தாயக பூமியில் சுய கௌரவத்துடன் வாழவும், ஒத்துழைப்பதும், ஊக்கமளிப்பதும் எமது கடமையாகும். இந்த அடிப்படையில் முஸ்லிம் தனவந்தர்களும், சமூக அமைப்புக்களும் திட்டமிட்டு இந்த மீள்குடியேற்றத்திற்கும், அதற்கான கட்டமைப்புக்குமான ஆரம்ப அத்தியாவசிய அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க முன்வர வேண்டும்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்