தமிழ்நாடு அரசு சட்டமாக்கியுள்ள 2009 தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுப்பபட்டுள்ளன. இது தொடர்பாக மக்கள் உரிமை சார்பாக எழுப்பட்ட கேள்விகளுக்கு இங்கு பதில் அளிக்கிறார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்
கேள்வி: தமிழ்நாடு அரசு இயற்றியுள்ள கட்டாய திருமண பதிவுச் சட்டம் கொண்டு வரப்பட்டதின் பின்னணி என்ன?
பதில்: 2006ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி உச்சநீதிமன்றம் திருமதி ஷீமா எதிர் அஸ்வனி குமார் என்ற வழக்கில் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. நீதிபதிகள் அரிஜித் பசாயத் மற்றும் எஸ்.ஹெச். கபாடியா ஆகியோர் அடங்கிய பிரிவு இந்த தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பில் எவ்வாறு இந்தியாவில் நடைபெறும் ஒவ்வொரு பிறப்பும் இறப்பும் முக்கிய புள்ளிவிவரம் என்று கருதப்பட்டு பதிவுச் செய்யப்படுகிறதோ அதே போல் ஒவ்வொரு திருமணமும் பதிவுச் செய்யப்பட வேண்டும் என்றும் இதற்காக மாநில அரசுகள் மூன்று மாதங்களுக்குள் சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் மத்திய அரசும் இது குறித்து சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. மீண்டும் சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் கட்டாய திருமண பதிவுச் சட்டத்தை இயற்ற மீண்டும் மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியது. இதன் விளைவாகவே தமிழக அரசு திருமணங்களை பதிவுச் சட்டத்தை சமீபத்தில் இயற்றியுள்ளது.
கேள்வி: இந்த புதிய சட்டத்தின் காரணமாக இனி முஸ்லிம் தனியார் சட்டத்தின் படி திருமணம் செய்துக் கொள்ள இயலாதா? இந்த புதிய சட்டம் பொது சிவில் சட்டத்திற்கு வழிவகுக்காதா?
பதில்: தமிழக அரசு இயற்றியுள்ள இந்த சட்டத்தின் காரணமாக முஸ்லிம் தனியார் சட்டத்தின் அடிப்படையில் திருமணம் நடைபெறுவதற்கு எவ்வித தடையும் இல்லை. தமிழக அரசு இயற்றியுள்ள இந்த சட்டத்தின் படி பல்வேறு மதத்தினர் அவர்களது தனியார் சட்டங்களின் படியும், தங்கள் பழக்க வழக்கங்கள் அடிப்படையிலும் திருமணம் செய்து விட்டு அது குறித்த தகவல்களை மட்டுமே இச்சட்டத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்படும் பதிவாளரிடம் தெரிவித்து பதிவுச் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இச்சட்டத்தின் பிரிவு 22 மிக தெளிவாக ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு முரணாக இல்லாமல் கூடுதலாகவே இச்சட்டத்தை கருதவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. எனவே தற்போது முஸ்லிம் தனியார் சட்டப்படி நடைபெறும் திருமணங்கள் வழக்கம் போல் நடைபெறுவதற்கு இந்த புதிய சட்டத்தின் காரணமாக எந்த தடையும் இல்லை. திருமணம் முடிந்த பிறகு இச்சட்டம் குறிப்பிட்டுள்ள படிவத்தில் அது குறித்த தகவல்களை திருமண பதிவாளரிடம் சமர்பித்து அதனை பதிவுச் செய்துக் கொள்ள வேண்டும். எனவே இது முஸ்லிம் தனியார் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணானது என்றோ அல்லது பொது சிவில் சட்டத்தை திணிப்பதற்கான முன்னோட்டம் என்றோ கருதுவது தவறனாதாகும். மிகத் தெளிவாக திருமணத்தை பதிவுச் செய்வதற்காக பதிவாளரிடம் சமர்பிக்க வேண்டிய படிவம் 1ல் இத்திருமணம் அவரவர் மதம் சார்ந்த சட்டங்களின் கீழோ அல்லது வேறு சட்டங்களின் கீழ் முன்னரே பதிவு செய்யப் பட்டுள்ளதா என்று ஒரு வினாவும் அதற்கு ஆம் என்று பதில் அளித்தால் திருமணப் பதிவுச் சான்றிதழ் அல்லது திருமணப் பதிவேட்டின் பகுதி நகலை இணைத்திடுமாறு கூறப்பட்டுள்ளது. எனவே முஸ்ம்களை பொறுத்த வரையில் நடைபெற்ற நிக்காஹ் தொடர்பான ஆவணம் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அவரவர் மதம் சார்ந்த சட்டங்களில் திருமணம் நடத்தி வைக்க வரையறுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்ற உறுதிமொழியையும் தம்பதியினர் பதிவாளரிடம் அளிக்க வேண்டும். எனவே முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு விரோதமானதாக இச்சட்டத்தை கருத இயலாது.
கேள்வி: புதுமணத் தம்பதியினர் திருமண சார்பதிவாளர் முன்பு நேரில் ஆஜராகி தங்கள் திருமணத்தை பதிவுச் செய்துக் கொள்ள வேண்டும் என்று என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். இது உண்மையா?
பதில்: தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தின் விதி 5ன் படி குறிப்பிட்ட படிவத்தில் திருமணம் தொடர்பான தகவல்களை அளிக்கவோ அல்லது அனுப்பவோ வேண்டும் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் திருமணத்தை பதிவுச் செய்வதற்காக சிறப்பு திருமணச் சட்டத்தின் விதிமுறை போல் தம்பதியினர் பதிவாளர் முன்பு நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை. திருமணத்தையும் அவரது முன்னிலையில் நடத்த வேண்டிய அவசியமும் இல்லை. எனவே இச்சட்டம் திருமணத்தை நடத்தி வைக்கும் ஜமாஅத்களின் உரிமையை பறிக்கவும் இல்லை. திருமணம் நடத்தி வைத்த ஜமாஅத் அதற்காக அளித்துள்ள சான்றை (தப்தர் பதிவேடு நகலை) மணமக்கள் சமர்பிக்க வேண்டும் என்று தான் இச்சட்டம் குறிப்பிட்டுள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.
கேள்வி: திருமணத்தைப் பதிவுச் செய்வதற்கான வழிமுறை என்ன?
பதில்: ஒரு முஸ்லிம் திருமணம் தற்போதைய வழக்கம் போலவே நடைபெற வேண்டும். அதாவது ஜமாஅத்தார் முன்னிலையில் ஜமாத் அல்லது அமைப்பு வைத்திருக்கும் திருமண பதிவேட்டில் திருமணம் குறித்த விவரங்கள் பதிவுச் செய்யப்படும். கதீப் ஒருவரால் திருமணம் நடத்தப்படும். இரண்டு சாட்சிகள், பெண்ணுக்குரிய வ, மணமக்களின் ஒப்புதல் ஆகியவற்றுடன் திருமணம் நடைபெறும். இவ்வாறு தற்போதைய நடைமுறையில் திருமணம் நடைபெற்று முடிந்த பிறகு 90 நாட்களுக்குள் இத்திருமணத்தை அரசு பதிவுச் செய்துக் கொள்வதற்காக உரிய படிவங்கள் 1 மற்றும் 11 (குறிப்பாவணங்கள்) நிரப்பி அதன் இரண்டு நகல்களை திருமண பதிவாளரிடம் நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். இவ்வாறு பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படும் குறிப்பாவணத்தில் மணமக்கள், திருமணத்தை நடத்தி வைத்தவர், இரு சாட்சிகள் ஆகியோர் கையொப்பமிட்டு ரூ100 கட்டணத்துடன் அனுப்ப வேண்டும்.
குறிப்பாவணத்துடன் பின் வரும் ஆவணங்கள் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
1. மணமக்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளங்களை நிரூபிக்கும் அடையாள அட்டை: (இதற்காக வாக்காளர் அடையாள அட்டை நகல் அல்லது பாஸ்போர்ட் நகல் அல்லது குடும்ப அட்டையின் நகல் வங்கிகள் அல்லது தபால் அலுவலகங்கள் வழங்கிய பாஸ் புக் என 10 ஆவணங்களில் ஏதாவது ஒன்றின் நகல் இணைக்கப்பட வேண்டும்)
2. மணமக்கள் மற்றும் சாட்சிகளின் வயதை நிரூபிக்கும் பின் வரும் மூன்று ஆவணங்களில் ஏதாவது ஒன்றின் நகல்
அ. பிறப்புச் சான்றிதழின் நகல்
ஆ. பள்ளி அல்லது கல்லுôரியை விட்டுச் செல்லும் போது அளிக்கப்படும் சான்றிதழ்
இ. மணமக்களின் வயதை உறுதிப்படுத்தும் ஆதாரம்
3. திருமண அழைப்பிதழ் அல்லது திருமணம் நடைபெறும் இடத்தை குறிப்பிடும் ஏனைய ஆதாரம்
குறிப்பாவணம் வரப்பெற்றவுடன், பதிவாளர் அதனை ஆய்வு செய்வார். அவ்வாறு ஆய்வு செய்யும் போது, குறிப்பாவணத்தில் குறைபாடு உள்ளது அல்லது போதுமான தகவல்கள் அளிக்கப்படவில்லை அல்லது ரூ100 கட்டணம் இணைத்து அனுப்படவில்லை என்று கண்டறியப்பட்டால் குறைகளை சரி செய்வதற்காக மணமக்களுக்கு அவற்றை திருப்பி அனுப்ப வேண்டும். அவர்கள் அக்குறிப்பாணையை பெற்ற நாளிருந்து 7 நாட்களுக்குள் அதனை சரி செய்து திருப்பி அனுப்ப வேண்டும். இதன் பின் குறிப்பாவணத்தை சரிபார்த்து தரப்பினர்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளங்கள் குறித்து அளிக்கப்பட்ட ஆவனங்கள் குறித்து மனநிறைவடைந்த பிறகு அத்திருமணத்தை பதிவுச் செய்து சான்றிதழ் வழங்குவார்.
கேள்வி: எத்தகைய காரணங்களுக்காக ஒரு திருமணத்தை பதிவுச் செய்ய பதிவாளர் மறுக்கலாம்?
பதில்: மணமக்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளம் தொடர்பான ஆவணங்கள் சரியாக அமையவில்லை என்றாலோ, குறிப்பாவணத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் உண்மைக்கு புறம்பாக இருந்தாலோ உரிய விசாரணைகளை மேற்கொண்ட பிறகு திருமணத்தை பதிவுச் செய்ய பதிவாளர் மறுக்கலாம்.
கேள்வி: 2009 தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்படாத திருமணங்கள் செல்லாதா?
பதில்: இச்சட்டத்தின் 23ம் பிரிவு மிக தெளிவாக இச்சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்படவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இம்மாநிலத்தில் நடைபெற்ற எந்தவொரு திருமணத்தையும் செல்லாது என்று கருத முடியாது என்று குறிப்பிடுகின்றது. எனவே இச்சட்டம் கட்டாய திருமண பதிவுச் சட்டம் என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் இச்சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்படும் திருமணம் மட்டுமே செல்லும் என்ற நிலை இல்லை. எனவே விரும்பியவர்கள் இச்சட்டத்தின் கீழ் திருமணத்தை பதிவுச் செய்து அதன் பலன்களை அனுபவிக்கலாம் அல்லது பதிவுச் செய்யாமலும் இருக்கலாம். இச்சட்டத்தின் படி திருமணத்தை பதிவுச் செய்யாவிட்டாலும் அத்திருமணம் சட்டத்தின் பார்வையில் செல்லத்தக்க திருமணமாக தான் கருதப்படும்.
கேள்வி: இச்சட்டத்தின் கீழ் திருமணத்தை பதிவுச் செய்யாவிட்டால் என்ன தண்டனை கிடைக்கும்?
பதில்: இச்சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யாவிட்டால் விசாரணைக்கு பிறகு அது நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ரூ1000 அபராதம் விதிக்கப்படும். இது தவிர வேறு எந்தவொரு தண்டனையும் கிடையாது.
கேள்வி: தலாக், குலா பற்றி இந்த சட்டம் சொல்வது என்ன?
பதில்: இந்த சட்டத்தில் தலாக் மற்றும் குலா பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. தலாக் மற்றும் குலா தற்போது உள்ள நடைமுறையில் தான் நடைபெறும். பிறப்பு மற்றும் இறப்பை பதிவுச் செய்வது போல் திருமணத்தை மட்டுமே இச்சட்டம் பதிவுச் செய்யும். திருமண பிணக்குகளை தீர்த்து வைக்கும் எந்தவொரு விதிமுறையும் இச்சட்டத்தில் குறிப்பிடவில்லை.
கேள்வி: தமிழகத்தில் மட்டும் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதா?
பதில்: இல்லை. ஏற்கெனவே நான்கு மாநிலங்களில் இத்தகைய சட்டம் நடைமுறையில் உள்ளது. மராட்டியம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு பொருந்தும் பம்பாய் திருமணப் பதிவுச் சட்டம் 1953, கர்நாடக திருமண சட்டம் 1976, ஹிமாச்சல பிரதேச திருமணப் பதிவுச் சட்டம் 1996, ஆந்திர பிரதேச கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் 2002. இது மட்டுமின்றி அசாம், மேற்கு வங்காளம், பீகார், ஒரிசா மற்றும் மேகாலயாவில் முஸ்ம்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் திருமணத்தை பதிவுச் சட்டம் நடைமுறையில் உள்ளது.
சந்திப்பு: புஹாரி tmmk.in
திங்கள், 21 டிசம்பர், 2009
கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் எதிர்க்கப்பட வேண்டுமா? பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்
10:47 PM