கண்றாவி தினம் ~ சஹாரா தமிழ்

ads

சனி, 13 பிப்ரவரி, 2010

கண்றாவி தினம்

கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்மண்ணில் குமரர்க்குமாமலையும் ஓர் கடுகாம்-என்றான் பாவேந்தர் பாரதிதாசன். உண்மையான அன்பு, உள்ளார்ந்த காதல், இணை பிரியா தன்மையுடன் உள்ள நேசிப்பின் மகத்துவத்தைக் கூறி காதலியின் கடைக்கண் பார்வையைப் பெற்றால் மலையைக் கூட ஒரு கடுகாக எண்ணி, எவ்வாறெனில் மலையைப் போன்ற ஒரு கடினமான செயலைக்கூட கடுகினைப் போல் எளிதாகக் கருதி சடுதியில் முடிப்பான் என ஆக்கப்பூர்வ சிந்தனையுடன் பாரதிதாசன் பாடியுள்ளார்.

ஆனால் பெண்மையை, இளமையை, பண்பாட்டுப் பெருமையைக் கூறுபோடும் விதமாக காதலர் தினம் என்ற பெயரில் கன்றாவி தினத்தை மேற்கத்திய கலாச்சார சீரழிவை நம்நாட்டிலும் சில வேலையற்றது இறக்குமதி செய்து தொலைத்துள்ளனர்.விற்பனைக் கண்காட்சிகளை நடத்துவதைப் போல வாழ்த்து அட்டைகளும், காதல் ஈமெயில்களும் தடபுடலாய் பரிமாறிக் கொள்கின்றனர். கலாச்சார சீரழிவின் மொத்த குத்தகைதாரர்களான தொலைக்காட்சி சேனல்கள் காதலர் தினத்தை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தி கணிசமாய் காசு பண்ணி விடுகின்றன.

இளசுகள் கூடும் இடங்களில் பச்சை வண்ண உடை அணிந்து சென்றால் நான் ரெடி (இன்னும் எனக்கு காதலர் (அ) காதலி இல்லை) என்பதை உணர்த்தும் சிக்னலாம். இதை வைத்து புதிதாக தங்கள் காதல் ஜோடியை தேடிக் கண்டுபிடிக்கின்றனர். ரோஜாக்களின் மவுசு கூடுகிறது. மணக்கும் ரோஜா, மயக்கும் மல்லிகை, கசங்கும் காகிதப் பூ வரை விலை ஏற்றத்தில் இறக்கை கட்டி பறக்கும். இளைய தலைமுறை யினரின் சிந்தனையில் சிதிலங்களை ஏற்படுத்திவரும் இத்தகைய கொண்டாட்டங்கள் கண்டிக்கப்பட வேண்டும்.

கல்வி கற்க வேண்டிய வயதில், தனது எதிர்கால வாழ்க்கைப் பாதையை தெரிந் தெடுத்துக் கொள்ள வேண்டிய சரியான பருவத்தில் நற்குணங்களுடன், நன்னடத்தையுடன் தனது தாய் தந்தையரையும் சுற்றத்தாரை யும் பெருமைப்படுத்த வேண்டிய பருவத்தில், சில்லறைத்தனமான இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மனதை இளைய தலைமுறையினர் பறிகொடுத்து விடக்கூடாது.

நமக்குத் தெரிந்த எத்தனையோ இளைஞர்கள், இளைஞிகள் இந்தக் காதல் கன்றாவியால் தங்கள் எதிர்காலத்தைத் தெளிவாக தெரிந்தெடுக்கும் வாய்ப்பினை இழந்து துயரப்படுகிறோம் என்றும் மற்றும் இளைஞர் இளைஞிகள் காதல் செய்யும்போது வசந்த மாகத் தெரிந்த வாழ்வு பின்னர் இருண்டு வறண்டு காட்சி யளிக்கிறது என்றும் மனம் வெறுத்து சொன்னதைக் கண்ணால் பார்த்திருக்கிறோம். இன்னும் சிலர் எனக்கு அருமையான வாழ்க்கையை அமைத்துத்தர என் பெற்றோர் ஆயத்தமாக இருந்தனர். ஆனால் அவசரத் துடுக்கினால் அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டேனே எனக் கதறியவர்களும் உண்டு.

விபரம் அறியாது, விபரீதம் புரியாது காதல் கட்டுக் கதைகளை இளைஞர்கள் தங்களுக்குள் ஊக்குவிப்பதால் அந்தப் பகுதியிலுள்ள இளம்பெண்களின் இதயமும் நஞ்சாகிறது.

இளைஞன் ஒருவன் ஜம்பமாக, பந்தாவாக கல்லூரியில் தன்னை மஞ்சுளாவும், மரிக்கொழுந்தும் மாறி மாறி காதலிப்பதாக கதை விடுவதும், அதைக்கண்டு தானும் ஒரு மாரிமுத்துவையோ, மாயாண்டியையோ விரும்பினால் ஒன்றும் தவறல்ல எனும் விபரீத முடிவுக்கு அவனது சகோதரியோ அல்லது அடுத்த வீட்டு இளம் பெண்ணே வரும் அபாயத்தையும் எதிர்கொள்ள வேண்டிவரும். அருமை அருமையாய் வளர்த்தெடுத்த மக்களால் அவமானம் சுமக்கும் அவல நிலைக்கு பெற்றோர்கள் ஆளாகலாம்.

இன்னும் சிலர் காதலித்த பெண்ணை முஸ்லிமாக மாற்றித்தானே திருமணம் செய்து கொள்கிறோம். இவருக்கு ஏன் பொறாமை, போய்யா பொத்திக்கிட்டு என்று கோபத்துடன் குமுறுகிறார்கள்.

எத்தனை சமாதானங்கள் கூறினாலும் காதல் என்பது வெறும் இனக்கவர்ச்சி மட்டுமே என்பதை அடித்துக் கூற முடியும். சமுதாயத்தில் திருமணமாகாமல் காத்திருக்கும் ஏழைப் பெண்களின் தொகை விலைவாசி போல் உயர்ந்து வரும்போது குறைந்தபட்சம் தனக்கு ஏற்ற பெண்ணை இங்கே தேடி மணமுடிக்க வேண்டும். அதை விடுத்து இவனே இன்னும் சிலகாலம் கழித்து கறுப்பு வெள்ளைத் தாடியுடன் நீண்ட காலமாக திருமணமாகாமல் இருக்கும் தனது சகோதரிக்காக (அ) மகளுக்காக கவலைப்பட்டுக் கொண்டு 'இந்த சமுதாயம் ஏன் இப்படி இருக்கிறது' என்று புலம்பும் நிலை அவனுக்கும் வரும்.

சமுதாயத்தின் சரிபாதியாகத் திகழும் பெண்களின் பல்வேறு நலன் நாடும் விஷயங்களில் இதை நாம் எவ்வாறு மறந்தோம்.

காதல், காதலர் தினம் போன்றவற்றை கழிவுகளாகக் கருதி, திருமண இணை தேடும் விஷயத்தில் தெளிவினைப் பெறுவோம்.

--அபுசாலிஹ் --tmmk.in

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்