அல் ஹலீல் – இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் பக்கபலத்துடன் அல் ஹலீல் நகரின் கிழக்கே அமைந்துள்ள அல் பகா கிராமத்தில் உள்ள பலஸ்தீன் விளைநிலங்களுக்குள் ஆயுதபாணிகளாகப் பிரவேசித்த ஆக்கிரமிப்பாளர்களான யூதக் குடியேற்றவாசிகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த திராட்சைக் கொடிகளைப் பிடுங்கியெறிந்து, பெரும் அட்டகாசங்களைப் புரிந்துள்ளனர் என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. கிர்யத் அர்பா எனும் யூதக் குடியிருப்பைச் சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்களில் ஒருபெரும் குழு சுமார் நான்கு தூனம் பரப்புள்ள பலஸ்தீன் விளைநிலத்தினுள் அத்துமீறி நுழைந்து நூற்றுக்கும் அதிகமான திராட்சைக் கொடிகளை வேரோடு பிடுங்கியெறிந்துள்ளனர் என்பது அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசம் கிர்யத் அர்பா, கர்ஸினா யூதக் குடியிருப்புகளைச் சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்களால் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உட்பட்டுவருகின்றது. எப்படியாவது இங்கு வாழ்ந்துவரும் பலஸ்தீனர்களை விரட்டிவிட்டு அப்பிரதேசத்தைக் கைப்பற்றித் தமது குடியிருப்போடு இணைத்துக்கொள்வதே இந்த ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கமாகும். இதேவேளை, கடந்த திங்கட்கிழமை (08.02.2010) அதிகாலை அல் ஹலீல், பெத்லஹேம், கல்கிலியா ஆகிய பிரதேசங்களில் திடீர் தேடுதல் நடவடிக்கை என்ற பெயரில் 10 பலஸ்தீனர்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை சுற்றிவளைத்துள்ளது.
செவ்வாய், 9 பிப்ரவரி, 2010
பலஸ்தீனரின் பயிர்நிலங்களை நிர்மூலமாக்கும் யூத ஆக்கிரமிப்பாளர்கள்
2:08 PM
நன்றி: PIC