ஒரு நிமிடம்............... ~ சஹாரா தமிழ்

ads

சனி, 3 ஏப்ரல், 2010

ஒரு நிமிடம்...............










அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்...

நிழற்படத்தை நினைவில் கொள்ளாத இந்தியர்கள் வெகு குறைவு. குஜராத்தில் முஸ்லிம்களை சங்க் பரிவார குண்டர் கும்பல் 2002இல் கொன்று குவித்ததில் இவரது முகம் பரவலாக அறிமுகமானது.

இவர் யார்? இந்தப் படத்தின் பின்னணி என்ன? என்பனவற்றை விரிவாக அலசி 'உயிர்மை' இதழில் ஒவ்வொரு இந்தியரும் அறிய வேண்டிய ஓர் ஆக்கம் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் கெ. மோகன்லால் நேர்கண்டு எழுதியதைத் தமிழில் ஸ்ரீபதி பத்மநாமா வழங்கியுள்ளார். அவர்கள் அனைவருக்கும் நமது உளமார்ந்த நன்றிகள்! - சத்தியமார்க்கம்.காம்

"நான், குத்புதீன் அன்சாரி! சமீபத்தில் ஓர் அடையாளச் சின்னமாக ஆனேன் -

டெல்லிக்கு இந்தியா கேட் போல; ஜெய்ப்பூருக்கு ஹவா மஹால் போல; கொல்கத்தாவுக்கு ஹவுரா பாலம் போல; மும்பைக்கு கேட் வே ஆஃப் இந்தியா போல; அகமதாபாதுக்கு ஓர் அடையாளச் சின்னம் இருக்கவில்லை. அடையாளச் சின்னம் இல்லாத நகரங்களுக்கு முகம் இல்லை. தனிப்பட்டுத் தெரிய ஓர் அடையாளமில்லாமல் அகமதாபாத் இருந்தபோதுதான், நான் அந்தக் குறையை நீக்கினேன். நுரைக்கின்ற கண்ணீரும் பத்திரிகைக் காகிதத்தில் உறைந்துவிட்ட என் அலறலும் கை கூப்பியடி நிற்கும் என் கெஞ்சலும் நெருங்கிவிட்ட மரணத்தை உங்களுக்குக் காட்டின. நான் அகமதாபாத்தின் அடையாளச் சின்னமானேன்."
(என்.எஸ்.மாதவனின் 'அலறல்' சிறுகதையிலிருந்து)

அன்சாரியைத் தேடி ஒரு பகல்

குத்புதீன் அன்சாரி என்பது அந்தக் கும்பிடும் கைகளுக்குச் சொந்தக்காரரின் பெயர். ஒரு ஏழைத் தையல்காரர். மும்பையிலும் மாலேகாவிலும் கொல்கத்தாவிலும் அகதியாக அலைந்த பிறகு சொந்த ஊருக்குத் திரும்பி வந்து, அந்த நகரத்திலெங்கோ ஒளிந்து வாழ்பவர். அகமதாபாத்தை அடைந்தபோது கையிலிருந்த தகவல்கள் இவ்வளவுதான்.

அன்சாரி எங்கே, எப்படி வாழ்கிறார் என்று பலரிடமும் விசாரித்தேன். சரியான தகவல் யாருக்கும் தெரியவில்லை. மக்கள் கூட்டத்துக்கும் ஊடகங்களுக்கும் பயந்து ஏதாவதொரு முஸ்லிம் காலனியின் பாதுகாப்பில் இருக்கலாம் என்பதுதான் பல பேருடைய கருத்து. அந்தப் பாவப்பட்ட மனிதனை இன்னும் தொந்தரவு செய்யத்தான் வேண்டுமா என்று சிலர் படபடப்புடன் கேட்டார்கள். முஸ்லிம் காலனிகளில் விசாரித்தால் கண்டுபிடிக்க முடியலாம் என்று சிலர் தெரிவித்தார்கள். ஆனால் யாருக்கும் அன்சாரி எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை.

தன்னைப் பார்க்க வருபவர்களிடமிருந்து விலகி இருக்கத்தான் அன்சாரியும் குடும்பமும் வசிப்பிடத்தைப் பற்றிய தகவல்களை மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று எல்லோரும் கூறினார்கள். இனி ஒருவேளை இடத்தைக் கண்டுபிடித்தாலுமே அன்சாரியைப் பார்ப்பதற்கு அங்கிருப்பவர்கள் அனுமதிக்க வழியில்லை. அந்நியர்கள் அங்கே செல்வதே ஆபத்தானது.

அன்சாரியைக் கண்டுபிடிக்க அகமதாபாத்திலிருக்கும் பத்திரிகையாளரான பால்ஜான் உதவி செய்வதாக ஏற்றுக்கொண்டார். அகமதாபாத் நகரத்தை நன்றாக அறிந்த மூத்த சக ஊழியரான சயீத் கானிடம் அவர் உதவியை நாடினார். அன்சாரியைத் தேடிக் கண்டுபிடிக்க ஒரு முஸ்லிமுக்கு எளிதாயிருக்கும் என்று பால் ஜான் கூறினார். சயீத் பலரிடமும் விசாரித்தார். அப்படிக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அன்சாரி இருக்கலாம் என்று எதிர்பார்த்து ரஹ்மத் நகருக்கும் ஜொஹாபுரா காலனிக்கும் இரண்டு பேரை அனுப்பினார் சயீத். அவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி அகமதாபாத் நகரத்தின் மேற்குப் பகுதியான ரகியாலில் ஏதோ ஓர் இடத்தில்தான் அன்சாரி வசிக்கிறார் என்பது தெரிந்தது.

கலவரத்தில் முற்றிலும் சிதைந்துபோன இடங்களில் ஒன்று ரகியால். அடுத்த நாள் அந்தப் பகுதிகளில் சுற்றினால் அன்சாரியைக் கண்டுபிடித்து விடலாம் என்று சயீத் நம்பிக்கையோடு சொன்னார். "ஆனால் அன்சாரி பேசுவார் என்றோ புகைப்படம் எடுக்க ஒத்துக்கொள்வார் என்றோ நம்ப வேண்டாம். கேரளத்திலிருந்து வருகின்ற ஒரு சமூக சேவகன் என்று சொன்னால் போதும். கேமராவோ காகிதமோ கண்ணில்பட்டால் பிரச்னையாகலாம். பேரையும் கூற வேண்டாம்".

"2002 கலவரங்களுக்குப் பிறகு பீதியும் சந்தேகமும் பாதுகாப்பின்மையும்தான் குஜராத் முஸ்லிம்களைச் சூழ்ந்திருக்கிறது. அதனால் அந்நியர்களைக் கண்டால் அவர்கள் சந்தேகப்படுவார்கள், பயப்படுவார்கள். அதனால் காரில் போவதும் சரியாக வராது. பைக்கில் போய் விசாரிக்கலாம்" என்றார் சயீத். பெரும்பாலும் முஸ்லிம்கள் மடடுமே வசிக்கிற பகுதி ரகியால். சமூகங்களுக்கிடையில் லட்சுமண ரேகை வரைந்து வசிப்பது குஜராத்துக்கே உரிய சிறப்பியல்பு. பல முஸ்லிம் காலனிகள் அகமதாபாத்தில் இருக்கின்றன.

அவற்றில் மிகப் பெரிய காலனியான ஜொஹாபுராவில் மூன்றரை லட்சம் பேர் வசிப்பதாகக் கணக்கு.

அடுத்த நாள் காலையிலேயே கிளம்பினோம். சுட்டெரிக்கும் பகல். எத்தனை நிலத்தை அழித்தாலும் அத்தனையையும் எதிர்கொண்டு வாழமுடியும் என்று நிரூபித்தவர்கள் ரகியாலின் மனிதர்கள். பழைய பயங்கர சம்பவங்களையெல்லாம் மறக்க முயன்று அவர்கள் வாழ்கிறார்கள். கோபத்தையும் ரோஷத்தையும் அடக்கிப் பிடித்திருப்பதன் அடையாளங்களை அவர்களின் முகங்களிலும் சலனங்களிலும் பார்க்கலாம். அகமதாபாதின் தொழிற்பகுதியான இங்கே சிறு வியாபாரங்களும் வொர்க்-ஷாப்புகளும் பான் கடைகளும் நடத்தி வாழ்க்கையைக் கழிக்கின்ற இவர்கள் ஏழு வருடங்களுக்கு முன்பு எல்லாவற்றையும் இழந்தவர்கள்.

குஜராத்தியில் 'சாலி' என்றழைக்கப்படுகின்றன இந்தச் சேரிகள். உள்ளே நுழைந்தால் தையல் இயந்திரங்களின் ஒலி.

ஏகப்பட்ட தையல்கடைகள். பிரம்மாண்ட பிராண்டுகளெல்லாம் இங்கேதான் தயாராகின்றன. அன்சாரி தையல்காரர் என்பதால் பெரும்பாலும் தையல் கடைகளிலேயே விசாரித்தோம். எங்கும் ஒரு கேள்வி உயர்ந்தது: எதற்காக அன்சாரியைத் தேடுகிறீர்கள்? நம்பத்தகுந்த காரணங்களைக் கூறியபடி முன்னேறினோம்.

பைக்கில் கூடப் பயணிக்க முடியாத குறுகிய சந்துகளினூடே சயீதைப் பின் தொடர்ந்தேன். தகர்ந்த வீடுகளெல்லாம் இப்போதும் அப்படியே கிடக்கின்றன. வழி முழுக்க ஜனக்கூட்டம். அந்நியரைப் பார்க்கும்போது அவர்கள் வெளியே வந்து நிற்கிறார்கள். எங்கே போகிறோம் என்று உற்றுக் கவனிக்கிறார்கள். சிலரின் முகத்தில் பயம். சிலரின் முகத்தில் சந்தேகம்.

யாரையும் கவனிக்க வேண்டாமென்றும் பழக்கமான யாரையோ தேடிப் போவதைப்போல பேசிக்கொண்டே நடக்கலாம் என்றும் சயீத் சொன்னார்.

தேடலின் முடிவில் மதிய நேரத்தில் அந்த வீட்டை அடைந்தோம். கதவின்முன் நின்று வீட்டிலிருப்பவர்களை உரக்க அழைத்தோம். அடுத்த வீடுகளில் வசிப்பவர்கள்தான் முதலில் வந்தார்கள். அவர்கள் என்ன நடக்கிறது என்று கூர்ந்து கவனிக்கத் துவங்கினார்கள். சிறிது நேரம் கழித்து மெலிந்த ஒரு பெண்ணும் பத்து வயது மகளும் வெளியே வந்தார்கள். அன்சாரியின் மனைவி தஹேரா. மகள் ருக்கியா.

அன்சாரி அங்கே இல்லை. சிறிது தூரத்தில் தையல்கடை நடத்தி வருகிறார். அங்கே செல்வதற்கான வழியை தஹேரா சொன்னார். பழக்கமானவர்கள் என்று தோன்றியதால் கவனித்துக் கொண்டிருந்த பலரும் வீட்டுக்குள் திரும்பினார்கள். அன்சாரியைப் பற்றிய விவரங்களை தஹேராவிடம் விசாரித்தோம். இப்போதும் ஆட்கள் பார்ப்பதற்கு வருவதுண்டு என்று அவர் தயங்கித் தயங்கிக் கூறினார். பின்னும் நிறைய கேள்விகள் கேட்டோம். ஆனால் எதற்கும் பதில் இல்லை. வீட்டுக்கு வெளியே நின்றே பேசினோம். உள்ளே அனுமதியில்லை. உட்கார வசதி வேண்டாமா?

கிளம்பத் துவங்கியதும் ஒரு நிமிடம் இருக்கச் சொல்லிவிட்டு உள்ளே போய் தண்ணீரோடு வந்தார். கோடைக்காலமானதால் கேட்காமலேயே தண்ணீர் தருவது வழக்கம். திரும்பி நடக்கும்போது யாரும் பார்க்கவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு செல்பேசியில் அன்சாரியின் வசிப்பிடத்தைப் படம் பிடித்துக் கொண்டேன்.

ரெட் அன்ட் ப்ளு டெய்லர்ஸ்

அன்சாரியைக் கண்டுபிடிக்க நாங்கள் முயற்சி செய்யும் நாளிலேயே ஒரு பிரபல ஆங்கில நாளிதழில் அன்சாரியின் படம் அச்சடிக்கப்பட்டிருந்தது. சில நாட்கள் முன்புதான் குஜராத் அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் விமர்சித்திருந்தது. அதைக் குறித்து நாளிதழில் நடந்துவந்த வாதங்களில்தான் அன்சாரியின் கைகூப்பிய படம் வெளி வந்திருந்தது. இரண்டு நாட்கள் முன்பும் அந்தப் படம் காணப்பட்டதாக சயீத் தெரிவித்தார்.

'குஜராத் கலவரத்தின் முகம்' என்பதாக அன்சாரியைக் குறிப்பிடுவது எதனால் என்பது புரிந்தது. எதனால் அன்சாரி கேமராக்களின் முன்னாலிருந்து ஓடி ஒளிகிறார் என்பதும். ஒவ்வொரு முறையும் அந்தப் புகைப்படம் அச்சிடப்படும்போது அன்சாரி அச்சமடைகிறார்.

தஹேரா காட்டிய வழியில் அன்சாரியின் கடையைக் கண்டுபிடிப்பதற்கான பயணம் துவங்கியது. போகிற வழியில்தான் 'பெஸ்ட் பேக்கரி'யைப் பார்த்தோம். அது ஒரு சிறு பேக்கரி. வடோதராவில் சஹீரா ஷேக்கின் வீட்டாரோடு சேர்த்துப் பதினான்கு பேரை எரித்துக் கொன்ற பெஸ்ட் பேக்கரியின் நினைவாக இதற்கும் பெயரிட்டிருக்கிறார்கள் போல. கலவரத்துக்குப் பிறகு பயந்துபோய் பேச்சிழந்துவிட்ட பாவப்பட்ட மனிதர்களின் மனதிலிருந்து அதன் தீவிரம் மறையவில்லை என்பதன் சாட்சியாக இருக்கிறது அந்தப் பெயர்.

கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிசப்தமாக வாழும் அந்த மனிதர்களுக்கிடையே மும்பையிலிருந்து பிரபல மனித உரிமை ஊழியரான டீஸ்டா செதெல்வாத் அடிக்கடி வந்து செல்கிறார். நீதிமன்றம் மூலம் தைரியமாக நீதிக்காகப் போராட வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு போதிக்கிறார். டீஸ்டாவையும் சக ஊழியர்களையும் பார்க்கும்போது மட்டுமே இவர்கள் மனம் திறக்கிறார்கள். தகவல்களையெல்லாம் டீஸ்டா ரகசியமாய்க் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. டீஸ்டா மற்றும் சக ஊழியர்களின் தீவிரமான முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கத் துவங்கிவிட்டது என்பதுதான் சமீபத்தில் நீதிமன்றங்களிலிருந்து கிடைத்த அனுகூலமான உத்தரவுகள்.

நிறைய தூரம் பயணம் செய்தபிறகு வரிசை வரிசையாய்க் கடைகள் நிறைந்திருந்த சாலையோரம் வண்டியை நிறுத்தினோம். அன்சாரியின் கடை. சிவப்பு மற்றும் நீல வண்ணங்கள் அடித்த தையல் கடை. ரெட் அன்ட் ப்ளு டெய்லர்ஸ். இங்கேதான் அன்சாரி இருக்கிறார். நாலைந்து பேர் தையல் பணியில் மூழ்கியிருக்கிறார்கள்.

வெளியே இருந்து பார்க்கும்போது அந்தக் குழுவில் அன்சாரி இல்லை. "குத்புதீன் இல்லையா?" என்ற கேள்வியோடு கடைக்குள் நுழைகிறோம். உள்ளே சென்றபோது 'எல்' வடிவமான கடையின் ஒரு மூலையில் குத்புதீன் அன்சாரி.

அன்சாரி படபடப்புடன் எழுந்து வந்தார். அந்நியரைக் கண்டவுடன் ஒரு நிமிடம் திகைத்தார். முகம் சட்டென கறுத்தது. புகைப்படத்தின் மூலம் பழக்கமான அந்த முகத்தில் இப்போது சின்ன மாற்றங்கள் மட்டும். பருமன் அதிகமாகியிருக்கிறது. லேசாக நரை விழுந்திருக்கிறது. "நான் சயீத். பத்திரிகையாளன்" அன்சாரியின் தோளில் தட்டி சயீத் சொன்னார்.

அன்சாரி கைகூப்பினார். சட்டென அந்தப் புகைப்படம் மனதில் வந்தது. ஆட்களை மாறிமாறிப் பார்க்கும்போது கண்ணின் மணிகள் வேகமாக இயங்குகின்றன. பயமும் கூடவே இஷ்டமின்மையும் அந்த முகத்தில் தெரிகின்றன.

"கேரளத்திலிருந்து வந்த இந்த நண்பருடன் சில இடங்களைப் பார்த்துவிட்டு வரும் வழியில் இங்கே வந்தோம்" என்றார் சயீத். நம்பிக்கையின்றி அன்சாரி தயங்கித் தயங்கிக் கேட்டார், "எங்கெல்லாம் சென்றீர்கள்?". "நரோதா பாட்யா, குல்பர்காஞ். கலவரம் நடந்த முக்கிய இடங்களை நண்பருக்குக் காண்பிப்பதற்காகக் கூட்டி வந்தேன்". பேய்த்தனமான மனிதக் கொலைகள் நடந்த இந்த இடங்களின் பெயர்களைக் கேட்டபோதே அன்சாரியின் முகம் மீண்டும் இருளடைந்தது.

தீஸ்தா செடல்சாவ்அன்சாரியின் பயத்தைப் போக்க டீஸ்டாவுடனான நட்பு பற்றியும் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செயல்படுகிறவர்களுடனான நெருக்கம் பற்றியும் பேசினோம். டீஸ்டாவைப் பற்றிப் பேசும்போது அன்சாரியின் கண்கள் ஒளிர்கின்றன. இப்போதுதான் அன்சாரியின் கூப்பிய கைகள் தாழ்கின்றன. அன்சாரி கைகொடுத்தார்.

"குடிக்கத் தண்ணீர் தரட்டுமா" என்று கேட்டபோது அன்சாரியின் பயம் விலகிவிட்டது தெரிந்தது. குடத்திலிருந்து தண்ணீரை எடுத்து வந்தார். பிறகு தொழிலாளிகளில் ஒருவரை அழைத்து ஐம்பது ரூபாய் கொடுத்து குளிர்பானம் வாங்கிவரச் சொல்லி அனுப்பினார்.

அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள அன்சாரியிடம் அனுமதி கேட்டோம். வேண்டாம் என்று சொல்லவில்லை. அன்சாரியின் முகத்தில் தெரிந்த சந்தேகத்தைப் பார்த்து, புகைப்படத்தைத் தவறாகப் பயன்படுத்தமாட்டோம் என்று உறுதி கொடுத்த பிறகுதான் படமெடுத்தோம்.

புகைப்படத்தை அன்சாரி அந்தளவு வெறுக்கிறார். இனி ஒரு கலவரம் உண்டானால் வெறியர்களின் ஹிட் லிஸ்ட்டில் முதல் ஆளாக அன்சாரி இருக்கலாம் என்று இங்கே இருப்பவர்கள் பயப்படுகிறார்கள். அன்சாரியின் புகைப்படம் வெறியர்களுக்கு அந்த அளவுக்குப் பிரச்னைகளைக் கொடுத்திருக்கிறது. இந்தியர்கள் இருக்கும் இடங்களிலெல்லாம் அந்தப் புகைப்படம் உலவியது. அதனால்தான் அன்சாரியையும் குடும்பத்தையும் சமூகத்தின் கண்களிலிருந்து மறைத்து வைக்க அவரை நேசிப்பவர்கள் படாதபாடு படுகிறார்கள்.

சஹீரா ஷேக், பில்கீஸ் பானு போன்ற பாதிக்கப்பட்ட பெண்களைக்கூட தைரியம் அளித்து வெளியே அழைத்து வந்து நீதிமன்றங்களில் போராடச் செய்யும் டீஸ்டாகூட அன்சாரியை சமூகத்தின் கண்களிலிருந்து மறைத்து வைக்கத்தான் முயல்கிறார். அன்சாரியைப் பற்றிக் கேட்டால், "அந்த அப்பாவியைத் தயவுசெய்து விட்டு விடுங்கள்" என்றுதான் டீஸ்டா பதிலளிக்கிறார்.

குளிர்பானத்தை எல்லாருக்கும் தம்ளரில் ஊற்றித் தந்து ஸ்டூல்களை இழுத்துப் போட்டு அமரச் செய்து, சந்தேகம் தீராத முகத்துடனே அருகில் அமர்கிறார் அன்சாரி.

பற்றி எரியும் மனிதன்

அகமதாபாத் நகரத்தில் கோம்திபூரில் ரஹ்மத் நகரில் பிறந்தார் அன்சாரி, ஒரு தையல்காரனின் மகனாக. சிறுவனாயிருக்கும்போதே தையல் வேலையைத் துவங்கியதால் படிக்க முடியவில்லை. தையல் வேலையில் நல்ல நிபுணனாயிருந்தார். பெண்களுக்கான ஆடைகள் தைப்பதில் புகழ்பெற்றவராயிருந்தார். வீட்டருகில் உள்ள கௌரி தியேட்டரில் சினிமா பார்ப்பது பொழுதுபோக்கு.

ஆனாலும் அன்சாரிக்குப் அதிகப் புகழ் பெற்றுத் தந்தது, பட்டம் விடுதல்தான். விசாலமான அகமதாபாத் மைதானங்களில் மாலைவேளைகளில் பட்டம் விடுதல் பரபரப்பாகத் துவங்கிவிடும். கோடைக் காலத்தில்கூட காற்று நன்றாக வீசுவதால் உயரங்களை அடைந்து பறக்கிற ஏராளமான பட்டங்களைப் பார்க்கலாம். சாதாரணமாக அமைதியானவர் என்றாலும் பட்டம் விடும் போது கறாரான ஆசாமி அன்சாரி. மிக உயரத்தில் பட்டத்தைப் பறக்கவிட்டு வெற்றி வீரனானதும் கீழே பறக்கிற ஒவ்வொரு பட்டத்தையும் சாமர்த்தியமாக அறுத்து வீழ்த்துவார். கூடாது என்று கெஞ்சுபவர்களிடம் அவர் கூறுவார்: "இது விளையாட்டு. இங்கே விட்டுக்கொடுத்தல் கிடையாது".

1983ல் தந்தை இறந்தவுடன் அன்சாரியும் சகோதரன் சிராஜ்தீனும் சேர்ந்து தையல் கடைப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்கள். அண்மையிலேயே இருந்த தஹேராவுடன் திருமணம் நடந்தது 15 வருடங்களுக்கு முன்பு. தையல் வேலையில் வாழ்க்கை நடத்துவதற்கான தொகை அவருக்குக் கிடைத்துவந்தது, மாதம் 4000 ரூபாய் வரைக்கும்.

'சாலி'யில் ஓர் அறையும் சமையலறையும் கொண்ட வீட்டில் அம்மா பிஸ்மில்லாபானுவும் உடனிருந்தார். சகோதரன் சிராஜ், அன்சாரி அருகிலேயே இன்னொரு வீட்டில். பட்டம் விடுதலும் சினிமா பார்த்தலும் தவிர அன்சாரிக்கு வேறெதுவும் தெரியாது. 2002 மார்ச் முதல் தேதிவரை கோம்திபூரிலுள்ள ரஹ்மத் நகர் காலனிக்கு வெளியே யாரும் அன்சாரியை அறிந்திருக்கவில்லை. தவணை முறையில் வாங்கிய ஒரு டி.வி.தான் ஒரே பொழுதுபோக்கு சாதனம். எப்போதாவது குடும்பத்தை ஆட்டோ ரிக்க்ஷாவில் வெளியே அழைத்துப்போய் பிடித்தமான உணவுகள் வாங்கிக் கொடுப்பார். இளம் பச்சை நிறமுள்ள கண்கள் மட்டுமே அவருக்கிருந்த ஒரே சிறப்பு அடையாளம்.

பிப்ரவரி 28 அன்று மாலை நெருங்கியபோது காலனியில் ஒரே பரபரப்பு. கோத்ராவில் ஒரு ரயில் பெட்டி எரிந்து அயோத்தியிலிருந்து வந்த நிறையப் பேர் இறந்துவிட்டார்கள் என்று யாரோ சொன்னார்கள். பல இடங்களிலும் ஒலிபெருக்கிகள் அலறுகின்றன. இந்த மாதிரி நேரங்களில் ஆட்கள் குடும்பத்தை இழுத்துக்கொண்டு எங்கெல்லாமோ ஓடுவார்கள் என்று அவர் கேள்விப்பட்டிருக்கிறார். விஷமிகள் வாசலை அடைவதுவரை காத்துக்கொண்டிருப்பது முட்டாள்தனம். பலரும் அங்குமிங்கும் ஓடுவதைப் பார்த்தார் அன்சாரி.

வீட்டை அடைந்தபோது அம்மா மற்றும் மனைவியின் முகங்கள் பயத்தால் இருளடைந்திருப்பதைப் பார்த்தார். மகளைத் தவிர யாரும் அன்றிரவு உறங்கவில்லை. நேரம் புலர்ந்தது. இரவு ஒன்றும் நிகழவில்லை. ஆனாலும் கதவு ஜன்னல்களை யாரும் திறக்கவில்லை. கடைசியில் மகளின் பிடிவாதத்துக்காக வெளியே வந்தார்.

உயிரோடு எரிப்புநேரம் மூன்று மணியாகியிருக்கும். அலறல்களும் ஆவேசக் கூக்குரல்களும் அழுகைச் சத்தங்களும் கேட்கத் துவங்கின. வேண்டாதது எதுவோ நடக்கப்போகிறது என்று எதிர்பார்த்துத்தான் அன்சாரி வீட்டின் மேல் மாடியில் போய் நின்று காப்பாற்ற யாராவது வருவார்களா என்று தேடினார்.

வரிசையாகக் கட்டப்பட்ட அந்த வீடுகளில் மேல்தளம் இருந்தது. கோடைக் காலங்களில் உறங்குவது அங்குதான். அங்கிருந்து பார்த்தபோது வீடுகளுடன் பற்றி எரிகிற மனிதர்களையும் அன்சாரி பார்த்தார். 'இனி அதிக நேரமில்லை. சீக்கிரமாகவே நானும் என் மனைவியும் மகளும் அம்மாவும்...' வெறியர்களுடன் கூடவே அவர்களைக் கட்டுப்படுத்த முயல்கின்ற போலீசையும் அவர் கண்டார். அது ராப்பிட் ஆக்க்ஷன் ஃபோர்ஸ்.

"உயிரைக் காப்பாற்றுங்கள்" என்று கூவியபடி அன்சாரி அவர்களை நோக்கிக் கைகூப்பினார்.

அப்போது அதிரடிப் படையின் கூடவேயிருந்த ராய்ட்டர்ஸின் அர்கோ தத்தா என்னும் புகைப்படக்காரரின் கேமரா பலமுறை மின்னியதை அன்சாரி பார்க்கவில்லை. அதிரடிப்படை, வெறியர்களை விரட்டியடிப்பதைப் பார்த்தார். அருகிலிருக்கும் வீடுகளிலிருந்து மிஞ்சியிருந்த ஆட்களை அதிரடிப்படை அவர்களின் வண்டியில் ஏற்றி வேறெங்கோ அழைத்துச் செல்லத் துவங்கியது. ஒரு வண்டியில் அன்சாரிக்கும் இடம் கிடைத்தது. மனைவியும் மகளும் அம்மாவும் வேறொரு வண்டியில் ஏறிவிட்டார்கள் என்ற தகவல் அவரை ஆசுவாசப்படுத்தியது.

சொந்தமாக இருந்த ஒற்றையறை வீடு, டிவி, தையல் இயந்திரம் எல்லாம் இழந்தாகிவிட்டது. உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு ஷாஹெயாத் அகதிகள் முகாமுக்குச் சென்றார் அன்சாரி.

அகதிகள் முகாமில் பனிரெண்டு நாட்கள் கழிந்தபோதுதான் தன் படம் பத்திரிகையில் பிரசுரமான தகவலை யாரோ சொன்னார்கள். எவ்வளவோ பேரின் படம் பத்திரிகையில் வருவதுதானே என்றுதான் அன்சாரி அப்போது நினைத்தார். ஆனால் படத்தைப் பார்த்தபோது திடுக்கிட்டுப் போனார். ஓர் அப்பாவி மனிதனுக்கு ஏற்பட்ட அவலத்தைப் பார்த்துத்தான் அவர் முதலில் திடுக்கிட்டார். பிறகுதான் இது, தான்தானே என்று ஆச்சர்யத்தோடு நினைத்தார். எந்தப் பத்திரிகை என்பது இப்போது நினைவில் இல்லை.

அந்த சம்பவத்தைப் பற்றி விவரிக்கையில் எந்த உணர்ச்சி மாற்றங்களும் இல்லாமல் அமர்ந்திருந்தார் அன்சாரி. "என் நிலைமை உங்களுக்கெல்லாம் தெரிந்ததுதானே. இப்போது ஆறு பேரை வைத்து தையல் வேலைகள் செய்கிறேன். குழந்தைகள் பள்ளிக்குப் போகிறார்கள். இழந்ததையெல்லாம் திரும்பப் பெற பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு எந்த மதத்திடமும் பகையில்லை. எனது தொழிலாளிகளில் இந்துக்களும் இருக்கிறார்கள். அவர்கள் வேறொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நினைப்பைக்கூட அவர்களிடம் உருவாக்குவது எனக்கு இஷ்டமில்லை. எனக்கு யாரிடமும் விரோதம் கிடையாது" -அன்சாரியின் களங்கமற்ற வார்த்தைகள்.

அது ஒரு பொற்காலம்

குஜராத் பற்றி அன்சாரி கூறினார்: "குஜராத் ஒரு பூந்தோட்டத்தைப்போல ரம்மியமானதாயிருந்தது. ஆனால் திடீரென்று எல்லாம் வாடி உதிர்ந்து போனது. இனி ஒருபோதும் அத்தகைய சம்பவங்கள் நிகழக் கூடாது என்றுதான் நான் கடவுளிடம் எப்போதும் பிரார்த்திக்கிறேன். அதிர்ஷ்டவசமாக இங்கே அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது. யாரைப் பற்றியும் எதுவும் நான் சொல்லப் போவதில்லை. எனக்கு யாரிடமும் கோபமுமில்லை. இங்கே எல்லாம் சமாதானமாய்த்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த முகத்தை வைத்துக் கொண்டு என்னால் இங்கே வாழ முடியவில்லை என்பது மட்டுமே என் துயரம்".

அரசியல் பற்றிப் பேசவேண்டியதில்லை என்று சொன்னபோதே அன்சாரி ஆசுவாசமடைந்தார். எதிரிகளைப் பற்றிச் சொல்லவும் அவருக்கு ஏதும் இருக்கவில்லை. நிஜத்தில் யார் எதிரிகள்? என்பதைப் பற்றியும் இந்த அப்பாவி மனிதனுக்குத் தெளிவு இல்லை. எப்படியெல்லாமோ தன் வாழ்க்கை தனிப்பட்டுவிட்டது என்பது மட்டுமே தெரியும்.

அன்சாரிக்கும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. ஏழு வருடங்களுக்கு முன்னிருந்த இளைஞன் பிற்பாடு ஏற்பட்டுவிட்ட 'தப்பியோட்டங்களால்' களைப்படைந்துவிட்டார். முகத்தின் களங்கமின்மை மட்டும் அப்படியேயிருக்கிறது. காதில் பென்சிலும் கழுத்தில் டேப்புமாக அமர்ந்திருக்கிறார் இந்த சூப்பர்வைசர். ஆறு தையல் இயந்திரங்கள் இருக்கின்றன. கடையில் தைப்பது ஒரு பிரபலமான பிரான்டட் சட்டையை. ஒரு சட்டைக்கு அன்சாரிக்கு 50 ரூபாய் கிடைக்கும். மார்க்கெட்டில் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் விலை மதிப்புள்ளது அந்தச் சட்டை. "சட்டையின் பெயரை வெளியே சொல்லி என் கான்ட்ராக்டை இழக்கவைக்காதீர்கள்" என்று அன்சாரி ஞாபகப்படுத்தினார்.

அந்தப் புகைப்படத்தைப் பற்றி மீண்டும் அன்சாரியிடம் கேட்டோம். கையில் வாளையும் மண்ணெண்ணெய் டின்களையும் பிடித்துக்கொண்டு நிற்கிற வெறியர்களிடம் "என்னையும் என் குடும்பத்தையும் விட்டுவிடுங்கள்" என்று கெஞ்சும் அன்சாரி.

அந்த ஒரே ஒரு புகைப்படத்தால் தன் வாழ்க்கையே கையை விட்டுப்போன கதையை அன்சாரி சொன்னார்: "இப்படியொரு புகைப்படத்தால் யாராவது உலகத்தில் இந்த அளவுக்குப் பிரபலம் அடைந்திருப்பார்களா? அதற்காக ஊரை விட்டுப் போக நேர்ந்திருக்குமா? அந்தப் புகைப்படத்தால் எனக்கு எந்த நன்மையும் உண்டாகவில்லை. நான் எல்லாருக்கும் எதிரியானேன். வாழ்வதற்காக முன்போலவே கஷ்டப்பட்டுத்தான் ஆகவேண்டியிருக்கிறது. அதை வைத்து யாருக்குப் பிரயோஜனம் என்பது எனக்குத் தெரியாது"

கலவரத்திற்கிடையில் தப்பிய அன்சாரியும் குடும்பமும் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அகதிகள் முகாமில் வாழ்ந்தார்கள். ராணுவம் வந்துவிட்டது என்றும் நகரம் அமைதியாகிவிட்டது என்றும் தகவல்கள் வந்தபோது பல குடும்பங்களும் திரும்பப் போய்விட்டன. வீட்டுக்குத் திரும்பிவிட அன்சாரியும் விரும்பினார்.

குடும்பத்தோடு ரஹ்மத் நகருக்குத் திரும்பி வந்தபோதுதான் எல்லாவற்றையும் இழந்துவிட்டது தெரிந்தது. ஆனாலும் மற்றவர்களைப் போலவே அவரும் புதுவாழ்க்கைக்கான வழிகளை யோசித்தார்.

ஆனால் அதற்குள் அவர் 'கலவரச் சின்னம்' ஆகிவிட்டிருந்தார். அப்போதெல்லாம் தன் 'புகழை'ப் பற்றி அன்சாரிக்குத் தெரியாது. நாட்கள் நகர்ந்தபோது தனக்கு ஏதோ பிரச்னை நிகழ்ந்துவிட்டதாகக் கொஞ்சம் கொஞ்சமாக அன்சாரிக்குப் புரியத் துவங்கியது. ஆட்கள் உற்றுப் பார்க்கிறார்கள். அயல்வீட்டார்களிடம் ஒரு நெருக்கமின்மை. வெளியே இறங்கினால் நாற்பக்கமிருந்தும் கண்கள் தன்மேல் பதிகின்றன. ஊடகக்காரர்கள் தேடி வருகிறார்கள். அவருக்குப் பதைபதைப்பு.

ஆனாலும் தையல் வேலையை மீண்டும் தொடங்கினார். திறமையான தையல்காரர் அவர். சுரிதார்களிலும் பெண்களுக்கான வண்ண ஆடைகளிலும் வைத்துத் தைப்பதற்காக சின்ன முத்துகள், கண்ணாடிகள், வண்ண நூல்கள் ஆகியவற்றை அன்சாரியே மார்க்கெட்டில் போய்த் தேர்ந்தெடுத்து வாங்கி வருவார். அவைதான் அவருடைய ஆடைகளை ஜொலிக்க வைத்துக்கொண்டிருந்தன. ஆனால் மார்க்கெட்டுக்கும் போய்வர முடியாத நிலை ஏற்பட்டபோதுதான் அவருக்குப் பயம் துவங்கியது. எங்கும் உற்று நோக்கும் பார்வைகள். தான் தைத்த துணிகளை முன்னர் அவரே மார்க்கெட்டுக்குக் கொண்டுபோய் நல்ல விலைக்கு விற்று வந்தார். இப்போது அதற்கும் வழியில்லை.

'நீ எங்களையும் கொலையாளிகளிடம் கொடுத்து விடுவாயா' என்கிற பார்வை அயல்வாசிகளிடமும் உறவினர்களிடமும் காணப்படத் துவங்கியது. அதற்குப் பிறகு வீட்டிலும் சுற்றுப்புறத்திலும் மட்டுமாக வியாபாரம் சுருங்கத் துவங்கியது. வருமானம் நேர் பாதியாகச் சுருங்கியது.

கலவரம் முடிந்து அப்போது இரண்டு மாத காலம் ஆகிவிட்டிருந்தது. குஜராத்தில் எங்கும் அமைதி திரும்பிவிட்டது. எல்லோரும் எல்லாவற்றையும் மறக்க முயல்கிறார்கள். ஆனால் சுற்றிலும் பார்க்கையில் தன்னால் மட்டும் முன்போல வாழ இயலாது என்பது அன்சாரிக்குப் புரிகிறது. வெளியுலகத்தில் என்ன நடக்கிறது என்ற புரிதல் அவருக்கு இருந்திருக்கவில்லை. உலகெங்குமுள்ள இந்தியர்களின் மனதில் தன் முகம் பதிந்துவிட்டிருக்கிறது என்பதை உலகஞானம் குறைவான அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை. அதனாலேயே பிற்பாடு நிகழ்ந்த சம்பவங்கள் அவரைத் திகைப்படையச் செய்தன.

இந்தியாவிலுள்ள பத்திரிகை நிறுவனங்கள் அனைத்துமே குஜராத் கலவரத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமென்றால் முதலில் வைக்க வேண்டிய படமாக அந்தப் புகைப்படத்தை தனியே எடுத்து வைத்திருந்தன. அது அன்சாரிக்குத் தெரிந்திருக்கவில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் அவரால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. ஊடகங்கள் மூலமாகவும் இணையம் மூலமாகவும் அவருடைய படம் எல்லா இடங்களையும் சென்று அடைந்துவிட்டிருந்தது. அந்தப் படத்தைப் பற்றிய விரிவான விவாதங்கள் பல இடங்களிலும் நடந்தன.

என் முகம் என் எதிரி

சொந்த வீட்டிலேயே 'ஒளிந்து' வாழமுடியாது என்ற நிலை வந்தவுடன் ஊரை விட்டுப் போக அன்சாரி தயாரானார். அகமதாபாத்தை அளவில்லாமல் நேசிக்கிற அன்சாரிக்கு சொந்த மண்ணை விட்டுப்போக இஷ்டமேயில்லை. ஆனாலும் பட்டினி கிடக்கும் நிலை வந்தபோது வெளிமாநிலங்களில் வசிக்கும் உறவினர்களை அணுகலாம் என்று கருதினார். அப்படியாக மகாராஷ்டிராவிலுள்ள மாலெகாவுக்குச் செல்ல முடிவெடுத்தார்.

அன்சாரியின் சகோதரி குடும்பத்தோடு அங்கே வசித்து வருகிறார். அங்கே சென்றவுடனேயே ஒரு பெரிய தையல் கடையில் வேலையில் சேர முடிந்தது. தையல் வேலையில் அவருக்கு உள்ள திறமைதான் அதற்குக் காரணம்.

இரண்டு வாரங்கள் பிரச்னைகள் ஏதுமின்றிக் கழிந்தன. ஆனால் பதினைந்தாம் நாள் ஒரு உருது நாளிதழில் குஜராத் கலவரத்தைப் பற்றிய செய்தியொன்றில் அன்சாரியின் படம் வெளியானது. சக ஊழியர்களில் ஒருவர் அன்று கையோடு பத்திரிகையைக் கொண்டு வந்திருந்தார். கை கூப்பிய அன்சாரியின் படத்தைப் பார்த்துக் கடை உரிமையாளர் அதிர்ந்து போனதை அன்சாரி பார்த்தார். தன் தொழிற்கூடத்தையே எரித்து விடக்கூடிய ஒரு வெடி குண்டுதான் கடந்த பதினைந்து நாட்களாக அங்கே வேலை செய்துகொண்டிருக்கிறது என்று அவருக்குத் தோன்றியது. அவர் கைகூப்பினார் அன்சாரியைப் பார்த்து - "தயவு செய்து விட்டுவிடுங்கள்". அன்றிலிருந்து அன்சாரி மீண்டும் வேலையற்றவரானார்.

அடுத்தது மும்பையிலிருக்கும் உறவினர்களை நோக்கிப் பயணம். மும்பையில் வண்டியை விட்டு இறங்கும்போது ஒரு வெற்றிவீரனின் முகம் தனக்கு இருந்ததாக அன்சாரி நினைவு கூர்கிறார். இங்கே நான் சுதந்திரமானவன். யாருக்கும் என்னைத் தெரியாது. தன்னைத் தெரியாத மக்கள் கூட்டத்தினிடையே நுழைந்து நடந்தபோது சுவாசம் திரும்பக் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி தோன்றியது. மும்பையில் ஒரு கார்மென்ட் பாக்டரியில் வேலை கிடைத்தது.

நல்ல அனுபவமுள்ள வேலை. முடிந்த அளவு யாரிடமும் நெருங்கிப் பழகாமல் வேலை பார்த்து வந்தார். மனைவியையும் குழந்தைகளையும் பிரிந்திருக்கும் வருத்தம் இருந்தது. ஆனால் தன்னை யாரும் அடையாளம் காணாமல் காலம் கடந்து செல்வதில் மகிழ்ச்சியும் இருந்தது.

அகமதாபாத்தில் வீட்டை அடுத்துள்ள கௌரி தியேட்டரில் அடிக்கடி சினிமா பார்ப்பார். மும்பைக்கு வந்தபோது அந்தப் பழக்கம் குறைந்து விட்டிருந்தது. அப்படியிருக்கையில் ஒருநாள் அன்சாரி சினிமாவுக்குப் போனார். சினிமாவுக்கு முன் விளம்பரமும் செய்திப்படங்களும் துவங்கின. அதில் ஒரு டாக்குமென்டரி குஜராத் கலவரத்தைப் பற்றியது என்பது புரிந்து திடுக்கிட்டார் அவர். 'நாமெல்லாம் இந்தியர்கள்' என்பது அந்த டாக்குமென்டரியின் பெயர். பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதோ தன் அவலப் புகைப்படம் திரையில் தோன்றுகிறது.

சுற்றியிருப்பவர்கள் சந்தேகத்தோடு பார்ப்பது அந்த இருட்டிலும் அவருக்குத் தெரிந்தது. சினிமா பார்க்காமல் அவர் உடனே வெளியே ஓடினார்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவருக்கு மீண்டும் கவலை அதிகமானது. மனைவி மக்களைப் பற்றி நினைத்தபோது கவலை இரட்டிப்பானது. சொந்த ஊருக்கே திரும்பிப் போக முடிவெடுத்தார் மீண்டும் அகமதாபாத்துக்கு.

அகமதாபாத் சென்ற பிறகு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். எப்போதாவது வெளியில் போனாலே பார்வைகள் உறுத்துகின்றன. 'நீ இங்கே இருப்பது எங்களையும் பயப்பட வைக்கிறது' என்பது அந்தப் பார்வைகளின் அர்த்தம். 'என் முகம்தான் என் எதிரி' -தனக்குத்தானே சொல்லிக் கொள்ளத் துவங்கினார்.

நெடுங்காலம் இருட்டறையில் கழிந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டால் பயப்படுவதைப் போலானது அன்சாரியின் நிலைமை. ஆட்களைக் கண்டால் பயம். மக்கள் கூட்டம் கூடும் பயங்கரக் கனவுகள். கலவரத்தால் அன்சாரி மன ரீதியாக பாதிக்கப்பட்டு விட்டதாக உறவினர்களும் அயலாரும் கருதினர்.

ஒரு நாள் மனைவி அம்மா குழந்தைகளோடு அவர் ஒரு பூங்காவுக்குச் சென்றார். பூந்தோட்டங்களும் தடாகங்களும் நிரம்பியிருந்த நகரம் அது ஒரு காலத்தில். ஷாஹ்பாத் இப்போதும் அழகாகத்தான் இருக்கிறது. ஷாஜஹானின் பூந்தோட்டம் என்று அர்த்தம். தடாகங்களும் பூந்தோப்புகளும் அழிந்து போய்விட்டாலும் பூந்தோட்டங்கள் இப்போதும் இருக்கின்றன.

பூங்காவுக்குப் போனபோது ஆட்கள் தன்னைக் கவனிப்பதை அன்சாரி கண்டார். சிறிது நேரத்தில் கிட்டத்தட்ட நாற்பது பேர் சுற்றி நின்றனர். உடனே குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு ஆட்டோ ரிக்க்ஷாவில் வீட்டிற்கு விரைந்துவிட்டார்.

தன் சொந்த நகரத்திலேயே தனிமைப் படுத்தப்படுவதை அன்சாரி உணர்ந்து கொண்டார். இதற்கிடையில் வீட்டுக்கு அருகில் இருந்த ஒருவர் அன்சாரியின் ஏழு வயது மகளைப் பார்த்து இப்படிக் கேட்டிருக்கிறார்: "உன் அப்பாவின் அழுமூஞ்சியை நாங்கள் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கவேண்டுமா?"

எங்கேயாவது ஓடிப்போக வேண்டுமென்று அவருக்கு மீண்டும் தோன்றியது.

வங்காளத்தில் வனவாசம்

Communalism Combatடீஸ்டா செதெல்வாத் என்ற பெயரையோ 'கம்யூனலிஸம் கோம்பேட்' (Communalism Combat) என்ற பெயரையோ அன்சாரி கேள்விப் பட்டிருக்கவில்லை. டீஸ்டா செதெல்வாதும் அவர் நடத்துகின்ற கம்யூனலிஸம் கோம்பாட் என்ற மாத இதழும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி தேடிக் கொடுக்க சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும்போது அன்சாரி மாலெகாவிலும் மும்பையிலும் வாழ்க்கைப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்.

இந்தியாவின் மதச்சார்பின்மையைப் பாதுகாக்க எந்தவிலை கொடுத்தும் போராடுவோம் என்று உறுதியுடன் இருக்கும் டீஸ்டாவைச் சந்தித்ததுதான் அன்சாரியின் வாழ்க்கையில் முக்கியத் திருப்புமுனையானது. கலவரத்தில் பாதிக்கப்பட்ட சஹீரா ஷேக், பில்கீஸ் பானு போன்றவர்களைப் பாதுகாத்து, அவர்களுக்காக நீதிமன்றம் மூலம் வீரத்தோடு போராடி வந்தார் டீஸ்டா.

அன்சாரியின் அவலத்தை மற்றவர்களிடமிருந்து அறிந்துகொண்ட டீஸ்டா, தானே அன்சாரியைத் தேடிப் போனார். அவரிடம் அன்சாரி தன் நிலையை எடுத்துக் கூறினார். "ஒரு குற்றமும் செய்யாத என்னால் நிம்மதியாகத் தொழில் செய்து வாழ முடியவில்லை. சமூகத்தைப் பயமுறுத்தும் அளவுக்கு நான் எதுவும் செய்யவில்லை. ஆனாலும் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்".

'கம்யூனலிஸம் கோம்பாட்' என்ற தனது பத்திரிகையில் அன்சாரியின் அவல வாழ்க்கையைக் குறித்து டீஸ்டா எழுதினார். நிறைய எதிர்வினைகள் வந்தன.

ஸலீம்அவற்றில் ஒன்று மிக முக்கியமானது. வங்காளத்திலிருந்து சி.பி.எம். தனது கரத்தை நீட்டியிருந்தது. வங்காள அமைச்சரான முகமது சலீம், டீஸ்டாவை அழைத்தார். "வங்காள அரசு அன்சாரிக்கு அடைக்கலம் தரத் தயார்" என்று தெரிவித்தார். "குடும்பத்தோடு வரச் சொல்லுங்கள். வீடும் தொழிலும் ஏற்படுத்தித் தருகிறோம்" என்று சலீம் தெரிவித்தார்.

டீஸ்டா அன்சாரியிடமே முடிவெடுக்கச் சொன்னார். எங்கேனும் ஓர் அடைக்கலத்தை எதிர்பார்த்திருந்த அன்சாரி உடனே சம்மதம் தெரிவித்தார்.

கொல்கத்தாவுக்குப் போவதற்கு முன்னால் அன்சாரியை மும்பைக்கு அழைத்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் டீஸ்டா. 'இந்த மனிதனை இனி மேலும் தொந்தரவு செய்யாதீர்கள்' என்று ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்பது டீஸ்டாவின் முடிவு.

கைகூப்பியபடி உள்ளே நுழைந்த அன்சாரி திகைத்துப் போனார். அங்கே நூற்றைம்பதுக்கு மேற்பட்ட ஊடகக்காரர்கள் அவருக்காகக் காத்திருந்தார்கள். ரகசியமாக வைக்க ஆசைப்பட்ட தன் வாழ்க்கை மீண்டும் வெளிச்சத்துக்கு வருகிறது.

வங்காள அமைச்சர் உதவிக்கரம் நீட்டிய செய்தியைத் தெரிவித்து டீஸ்டா கூறினார்: "அன்சாரி கொல்கத்தாவுக்குப் போகும் செய்தியைத் தெரிவிக்க மட்டுமே உங்களை அழைத்திருக்கிறேன். தயவுசெய்து மற்ற தகவல்கள் எதையும் நீங்கள் எழுதக் கூடாது..."

'உங்களை அரசியல் ரீதியாக உபயோகிக்கிறார்களா?' என்ற கேள்விதான் அந்த சந்திப்பில் மிக உரத்துக் கேட்கப்பட்ட கேள்வி. 'அப்படி நடக்காது என்று எதிர் பார்க்கிறேன்' என்று பதிலளித்தார் அன்சாரி.

"ஊடகங்கள் என்மேல் பெரிய பாரத்தை ஏற்றி வைத்திருக்கின்றன. நீங்கள் என்னை குஜராத்தின் முகமாக வெளிப்படுத்துகிறீர்கள். எங்கே சென்றாலும் மக்கள் என்னைக் கண்டுகொள்கிறார்கள். அது என்னைப் பயமடையச் செய்கிறது" அன்சாரி வேதனையுடன் கூறினார்.

'ஒரு வருட காலத்துக்கு வீடும் வேலையும் அளிக்கத் தயார்' என்று வங்காள அரசு தெரிவித்திருந்தது. அப்படியாக இந்தியாவின் கிழக்கு மூலையிலிருந்து மேற்கிந்தியாவின் அடைக்கல நகரத்துக்கு அவர் கிளம்பினார்.

ஆகஸ்ட் ஒன்பது 2003. கீதாஞ்சலி எக்ஸ்பிரசில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கொல்கத்தாவை அடைந்தார் அன்சாரி. ஹவுரா நிலையம் நெருங்கும்போது அன்சாரி கதவருகில் நின்று கொல்கத்தாவைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தார். பிளாட்பார்ம் வந்தபோது அவர் மீண்டும் திகைத்துப் போனார். ஏகப்பட்ட பேர் கேமராவை ஃபோகஸ் செய்தபடி காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரயில் நின்றபோது கேமராக்களின் கூட்டு வெளிச்சத்தில் அன்சாரி ஸ்தம்பித்து நின்றார்.

மனைவி தஹேரா, மகள் இவர்களுடன் கைக்குழந்தையான மகன் சிஹானை தோளில் சுமந்தபடி அன்சாரி கீழே இறங்கினார். வரவேற்க ஏராளமான பேர் காத்திருந்தார்கள். பத்திரிகையாளர்களிடம் அன்சாரி சொன்னார்: "நிறைய கனவுகளுடன் இங்கே வந்திருக்கிறேன். குஜராத்தில் நிகழ்ந்த மாதிரி இங்கே எதுவும் நிகழாது என்று நம்புகிறேன்".

பார்க் சர்க்கசிலுள்ள தில்ஜாலா சாலையில் அன்சாரி குடும்பத்தினருக்கு இரண்டு அறைகள் கொண்ட ஃப்ளாட்டை அரசு ஒதுக்கியிருந்தது. ஏராளமான முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி அது. அரசு வாகனத்தில் அங்கே சென்றபோது அங்கே காத்திருந்தவர்கள் 'குத்புதீன் அன்சாரியே வருக வருக' என்று கோஷம் எழுப்பினார்கள். வீடு பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அடக்க முடியாத கண்ணீருடன் உள்ளே நுழைந்தார் அன்சாரி.

வங்காள அரசு மகளுக்குப் பள்ளியில் இடம் கொடுத்தது. சில தையல் இயந்திரங்களையும் அளித்தது. அண்மையில் வசித்தவர்கள் அவரிடம் பாசத்தோடு பழகினார்கள். அந்தமுறை ராக்கிவிழா வந்தபோது எல்லோரும் அன்சாரியை அழைத்தனர்.

இதற்கிடையில் அன்சாரியின் வருகையை அரசியலாக்குவதற்கான முயற்சியைப் பார்த்து முகமது சலீம் சொன்னார்: "அன்சாரிக்கு அமைதியான வாழ்க்கை அளிப்பது மட்டுமே எங்களின் நோக்கம். வேறெங்கும் அது அவருக்குக் கிடைக்காததால்தான் நாங்கள் அவரை அழைத்தோம். இதில் எந்த அரசியலும் கிடையாது. அன்சாரி எங்கே வசிக்கிறார், என்ன செய்கிறார் என்பதையெல்லாம் கேட்காதீர்கள்" என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

'அன்சாரிக்கு நல்வரவு' என்ற தலைப்பில் ஸ்டேட்மேன் பத்திரிகை தலையங்கம் எழுதியது. 'மகாத்மா காந்தியின் மண்ணைக் கேவலப்படுத்தியவர்கள் குஜராத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஊராரும் முதலாளிகளும் விலக்கிய அன்சாரிக்கு உதவிக்கரம் நீட்டியதில் கொல்கத்தாவாசிகள் பெருமை அடைகிறார்கள். இதற்காக முயற்சி எடுத்த டீஸ்டாவுக்கும் கம்யூனலிஸம் கோம்பாட்டுக்கும் எங்கள் வந்தனம்' - இப்படி எழுதியது ஸ்டேட்மேன் பத்திரிகை.

ஆனால் ஓர் அப்பாவி அகதிக்கு உதவி செய்வதே வங்காள அரசாங்கத்தை விவாதங்களுக்கு இட்டுச் சென்றது. 'குஜராத்தை அவமானப்படுத்தவே வங்காள அரசு அன்சாரிக்கு வீடும் வேலையும் கொடுத்தது' என்று குஜராத் அரசு அறிக்கை வெளியிட்டது.

இன்னொரு மாநில அரசுடன் மோதல் கூடாதென்பது வங்காள அரசின் நிலைப்பாடு. அதனால் விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க சி.பி.எம். மாநிலச் செயலாளர் அனில் பிஸ்வாஸ் ஓர் அறிக்கையை வெளியிட்டார்: 'வங்காள அரசு அன்சாரிக்கு வீடும் வேலையும் அளிக்கவில்லை. அன்சாரியின் சில நண்பர்கள் அவர்களின் கொல்கத்தா நண்பர்களைத் தொடர்புகொண்டு அன்சாரிக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டுமென்று கோரினார்கள். வீடு தேடுதல் போன்றவற்றில் கட்சித் தொண்டர்கள் ஈடுபட்டனர் என்பது உண்மைதான். ஆனால் அரசாங்கத்திற்கு எதிலும் தொடர்பில்லை. அதேநேரம் ஓர் இந்தியக் குடிமகனுக்கு எங்கு வேண்டுமானாலும் வசிக்கவும் தொழில் செய்யவும் உரிமை உண்டு'.

ஆனால் வங்காளத்தின் பி.ஜே.பி. தலைவர் ததாகத் ராய், அன்சாரியின் வருகையிலும் அவரை அங்கே வசிக்கச் செய்வதிலும் அரசியல் விளையாட்டுகள் இருக்கிறதென்று மீண்டும் குற்றம்சாட்டினார். 'இந்த மாதிரி ஏகப்பட்ட 'இந்து அன்சாரிகள்' காஷ்மீரில் இருக்கிறார்கள். அவர்கள் யாரையும் ஏன் கம்யூனிஸ்ட் கட்சி இங்கே அழைத்து வசிக்கச் செய்யவில்லை?' இதுதான் அவருடைய கேள்வி. 'அடைக்கலம் கொடுத்தது ஒரு மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே. இவரைப்போல் நிறையப்பேர் இருந்தாலும் எல்லோருக்கும் அடைக்கலம் கொடுப்பது நடைமுறை சாத்தியமில்லாதது' என்று அனில் பிஸ்வாஸ் பதில் கூறினார்.

கொல்கத்தாவில் காங்கிரஸ் தலைவர்களும் அன்சாரியின் வீட்டுக்கு வருகை தந்தனர். அவர்கள் அன்சாரியின் கையில் ராக்கி கட்டினார்கள். இது ஒரு மனிதாபிமான நடவடிக்கை மட்டுமே என்றும் அரசியல் சாயம்பூசி இந்த அப்பாவி மனிதனை மீண்டும் தொந்தரவு செய்யவேண்டாம் என்றும் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள்.

பிரபல நடிகையான ரூபா கங்குலி அன்சாரியின் வீட்டுக்கு வந்து கையில் ராக்கி கட்டி 'அன்சாரி தன் மூத்த சகோதரன் என்றும் என்ன தேவை இருந்தாலும் 'தீதி'யான தன் உதவியை நாடலாமென்றும் அன்சாரியிடம் சொன்னார். அன்சாரியின் கண்கள் நிறைந்து வழிந்தன. அதுகண்டு மகளும் அழுதாள்.

மம்தா பாணர்ஜிசந்திக்க வரும் அனைவரும் அன்சாரியை ஆசுவாசப் படுத்தினார்கள். அன்சாரியின் வருகையை யாரும் அரசியலாக்கக் கூடாது என்று அறிக்கை வெளியிட்டார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாமே அரசியலாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. 'ராக்கி பந்தன்' நாளில் அன்சாரியைச் சந்திக்க வந்தவர்களில் திருணாமூல் காங்கிரசின் தீப்பொறித் தலைவி மம்தா பானர்ஜியும் இருந்தார். 'கம்யூனிஸ்ட் கட்சி மத நல்லிணக்கத்தை வைத்து அரசியல் விளையாட்டு விளையாடுகிறது' என்று அவர் குற்றம் சாட்டினார். அதேநேரம் அன்சாரி கொல்கத்தாவிலேயே இருக்கவேண்டும் என்றும் அவரைச் சந்தித்தது அரசியலுக்காக அல்ல; மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.

விவாதங்கள் கட்டுக்கடங்காமல் போனவுடன் வங்காள அரசும் சிறிது பின்வாங்கிக் கொண்டது.

தன்னை மையப்படுத்தி அரங்கேறிய அரசியல் விவாதங்கள் எதையும் அன்சாரி அறிந்திருக்கவில்லை. வங்காள அரசிடமும் கம்யூனிஸ்ட் கட்சியிடமும் இப்போதும் அளவு கடந்த நேசம் அவருக்கு. 'கலவரத்தில் எத்தனையோ பேர் வாழ்க்கையைத் தொலைத்தார்கள். அதிலிருந்து தப்பித்தது மட்டுமல்ல, இத்தனை பேர் உதவியும் கிடைத்தது. நான் பெரிய அதிர்ஷ்டசாலி'.

ஒரு வருடம் முடிந்தபோது மத்தியில் ஆட்சி மாறியது. காங்கிரஸ் ஆட்சி வந்தவுடன் திரும்பிப் போவதற்கான தைரியம் வந்தது. அம்மாவின் உடல்நிலையும் மோசமானதால் திரும்பிவிடலாம் என்றே முடிவெடுத்தார்.

இந்த விஷயத்தைச் சொன்னபோது முகமது சலீமும் ஒத்துக்கொண்டார்: 'குஜராத் இப்போது அமைதியாயிருக்கிறது. உங்கள் விருப்பம் அதுதானென்றால் நாங்கள் தடுக்கவில்லை'.

அப்படியாக 18 மாத வனவாசம் முடிவுக்கு வந்தது. திரும்பி வருகையில் வங்காள அரசு இன்னும் சில தையல் இயந்திரங்களையும் அளித்தது. அதைக் கொண்டு வந்துதான் அகமதாபாத்தில் கடை துவங்கினார்.

படிக்காதவனும் எழுத்தாளரும்

ஏதாவது அரசியல்வாதியோ அரசியல் கட்சியோ அரசியலுக்கு வர கட்டாயப்படுத்தியதா?' என்று அன்சாரியிடம் கேட்டோம். 'இல்லை' என்று பதில் வந்தது. 'அரசியல்வாதிகள் யாரும் என்னைத் தேடிவரவில்லை. அரசியல்வாதிகள் என்னை உபயோகப்படுத்திக் கொண்டார்களா என்று எனக்குத் தெரியாது. அரசியல்வாதிகளிடமிருந்து விலகி நிற்கவே நான் எப்போதும் விரும்பினேன். மற்றவர்களிடமிருந்துகூட விலகி நிற்கவே நான் எப்போதும் முயன்றேன்.'

ஆனால் அன்சாரியைக் காப்பாற்றியவர்களும் விமர்சித்தவர்களும் மீண்டும் அரசியல் விவாதங்களைத் தொடர்ந்து கொண்டே இருந்தனர். கிழக்கும் மேற்கும் இருக்கும் இரண்டு மாநிலங்களும் அவற்றின் கட்சிகளும் படிப்பறிவில்லாத ஓர் அகதியின் வாழ்க்கையைப் பிற்பாடு வந்த சம்பவங்களுடன் கோர்த்தார்கள். குஜராத்தையும் நரேந்திர மோடியையும் கேவலப்படுத்தவே வங்காள அரசு அன்சாரியைக் கொண்டு போனது என்று பி.ஜே.பி. கருதியது. அந்த சமயத்தில்தான் கொல்கத்தாவில் தஸ்லிமா நஸ்ரினை மையப்படுத்தி விவாதங்கள் எழுந்தன. கொல்கத்தாவில் தஸ்லிமா நஸ்ரினுக்கு வங்காள அரசு கட்டுப்பாடுகள் விதித்தது, தேசிய அளவில் கவனத்தை ஈர்

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்