சர்வதேச அளவில் தடுக்கப்பட வேண்டிய...... ~ சஹாரா தமிழ்

ads

ஞாயிறு, 30 மே, 2010

சர்வதேச அளவில் தடுக்கப்பட வேண்டிய......

மனித உரிமை மீறல் என்பது சர்வதேச அளவில் தடுக்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. நாகரிக சமுதாயத்தின் மீதுள்ள மிகப்பெரிய கறை இதுவாகத்தான் இருக்கும். ஒரு மனிதன் தன்மானத்துடன் செயல்படவும் அவனது அடிப்படை உரிமைகள் மறுக்கப்படாமல் வாழவும் வழிவகுப்பதுதான் மனித உரிமைக்கான அடிப்படை இலக்கணம். இது காவல்துறையாலோ ராணுவத்தாலோ அரசாலோ மறுக்கப்படுவது என்பது தடுக்கப்பட்டே தீர வேண்டும்.

உலகமயமாக்கலில் விளையும் நன்மை என்று குறிப்பிட முடியுமானால் அது உலகளாவிய அளவில் மனித உரிமை மீறலுக்கு எதிரான சிந்தனை உருவாகியிருப்பதுதான். சில நாடுகளில் மனித உரிமை மீறல்கள் பொருள்படுத்தப்படாமல் அங்கீகரிக்கப்படும்போது உலகிலுள்ள ஏனைய நாடுகளில் அந்த நபர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது என்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அவமானமல்ல, தண்டனை!

சட்டத்தின் மேலாண்மையை மதிக்கும் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு நபரும் அவர் எத்தனை பெரிய பதவியை வகித்தாலும் மனித உரிமை மீறல் குற்றத்திலிருந்து மன்னிக்கப்படலாகாது. இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், சித்திரவதை போன்ற குற்றங்கள் மனித நாகரிகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மன்னிக்கப்படக்கூடாத குற்றங்கள். இவை எந்த நாட்டில் செய்யப்பட்டாலும், நடைபெற்றாலும், உலகின் எந்த ஒரு மூலையில் நிகழ்ந்தாலும், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உலகின் எந்த நாட்டிலும் இடமளிக்கலாகாது. மன்னிப்பும் கிடையாது.

பிற உலக நாடுகளின் நீதிமன்றங்களில், இன்னொரு நாட்டின் மனித உரிமை மீறல் குற்றவாளிக்குத் தண்டனை வழங்க முடியாதுதான். ஆனால், அந்த நாடுகள் இந்தக் குற்றவாளிகளுக்கு அனுமதி மறுப்பதன் மூலம் தண்டனை வழங்க முடியும். ஒரு மனித உரிமைக் குற்றவாளியைச் சிறையில் அடைத்துத் தண்டிக்க முடியாதபோது அவர் சார்ந்த நாடு தண்டிக்காதபோது சர்வதேச அரங்கில் அவருக்கு எதிராக நடத்தப்படும் புறக்கணிப்பு என்பதுதான் சரியான தண்டனையாக இருக்கும்.

தங்களது நாடுகளில் இனப்படுகொலை நடத்தி, மக்களைச் சித்திரவதைக்கு உள்படுத்தும் அதிபர்கள் நமக்குத் தெரிந்தே பலர் இருக்கிறார்கள். இவர்கள் கண்துடைப்புத் தேர்தலை நடத்தி, தங்களைத் தாங்களே மீண்டும் அதிபர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வதுடன், தங்களது கைப்பாவைகளைப் பிரதமர்களாகவும் அமைச்சர்களாகவும் அமர்த்தி தங்களது இனப்படுகொலையை மக்களாட்சி என்கிற மாயமுலாம் பூசி மறைத்துவிடுகிறார்கள். இவர்களைத் தண்டிப்பதுதான் எப்படி?

உலக அரங்கில் இதுபோன்ற நபர்களின் மனித உரிமை மீறல்களைப் படம்பிடித்துக் காட்டி சர்வதேச அளவில் தனிமைப்படுத்துவதுதானே ஒரே வழி. பல நாடுகளில் அந்த நாட்டுக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சட்டங்கள் திருத்தப்பட்டு, மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவர்களுக்கு அந்த நாடுகளில் நுழைவு அனுமதி மறுக்கப்படுகிறது.

கனடா நாட்டு நிர்வாகம் 2004-ம் ஆண்டில், நுழைவு அனுமதி வழங்கும் துறையில் நவீன போர்க்குற்றப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியது. இந்தப் பிரிவு அந்த நாட்டுக்குள் குடியேறவோ சுற்றுப்பயணம் செய்யவோ நுழைவு அனுமதி கேட்கும் விண்ணப்பங்களை ஆய்ந்து மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு அனுமதியை மறுக்கிறது.

இதேபோல உலகில் உள்ள எல்லா நாடுகளும் தங்களது குடியேற்ற மற்றும் நுழைவு அனுமதிச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு அனுமதி மறுத்து சர்வதேசப் புறக்கணிப்புக்கு ஆட்படுத்த வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கையும். இதுவரை எல்லாம் நலமே.

அதேநேரத்தில், கனடா அரசு சமீபகாலமாக இந்திய ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் புலனாய்வுத்துறையில் பணியாற்றும் மற்றும் புலனாய்வுத்துறையில் பணியாற்றியவர்களுக்கு நுழைவு அனுமதி மறுத்திருக்கிறது என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் மேலே குறிப்பிட்ட துறைகளில் பணியாற்றுபவர்கள் காஷ்மீரத்திலும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளிலும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்கள் என்று கனடா அரசு கருதுவதாகத் தெரிகிறது. இதைவிட விபரீதமான சிந்தனை எதுவுமே இருக்க முடியாது.

இராக்கில் நடக்காத மனித உரிமை மீறலா? அப்படியானால் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டின் அதிபர்களுக்கே கூட கனடா நுழைவு அனுமதி மறுக்க வேண்டுமே! இலங்கையில் இனப்படுகொலை நடந்ததையும் தொடரும் மனித உரிமை மீறல்களையும் அனுமதிப்பவர்களுக்கு, இந்திய ராணுவம் செய்வதுமட்டும் மனித உரிமை மீறலாகத் தெரிவது ஆச்சரியம். அதுபோகட்டும். சோமாலியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் கனடா நாட்டு ராணுவம் நாடு கடந்து நடத்தும் மனித உரிமை மீறல்களைவிட பெரிய உரிமை மீறல் இந்தியாவில் நடந்துவிட்டதா என்ன?

இப்படி ஓர் அவப்பெயர் இந்தியாவுக்கு வருவதற்குக் காரணம், இந்திய அரசு மனித உரிமை மீறல் பிரச்னையில் முழுமனதுடனான நடவடிக்கைகளை முடுக்கிவிடாமல் இருப்பதுதான். சமீபத்தில் காஷ்மீரத்தில் நடந்த சோபியன் இளம்பெண்கள் விஷயத்தில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராகத் துணிவுடன் நடவடிக்கை எடுக்காமல் தவறை மூடி மறைக்கப் பார்த்த சம்பவம் ஓர் உதாரணம்.

காவல்துறையானாலும், ராணுவம் ஆனாலும் மனித உரிமை மீறல் குற்றங்களில் மன்னிப்பு கிடையாது என்பதை மத்திய, மாநில அரசுகள் தெளிவுபடுத்தும் விதத்தில் நடவடிக்கை எடுக்காமல் போவதால், ஒருசில நிகழ்வுகள் சர்வதேச அளவில் ஒட்டுமொத்த இந்திய ராணுவத்துக்கும், எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், ஏன், இந்தியாவுக்கே தலைகுனிவை ஏற்படுத்தி விடுகிறது என்பதை நமது ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லை எறிந்திருக்கிறது கனடா என்றாலும், மனித உரிமை மீறல் பிரச்னை சர்வதேச அளவில் விவாதிக்கப்படுகிறதே, அதுவரை மகிழ்ச்சி. நல்லதொரு முடிவு ஏற்படட்டும்!

            

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்