“ஒருபுறம் இந்தியா ஒளிர்கிறது என்றும் தொழில்துறையில் அபார வளர்ச்சி என்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் பகட்டான விளம்பரங்கள் – உலக கோப்பை கிரிக்கெட்டில் வென்ற வீரர்களுக்கு சில கோடிகளை மாநில அரசுகள் அறிவித்ததன் மூலம் தேச நலனுக்கு வித்திட்டதாக படாடோப செய்திகள் – மறுபுறம் குறிப்பாக ஊடகங்கள் குஜராத்தைப் பார் ! மோடி அரசின் வளர்ச்சியைப் பார்!! என தம்பட்டங்கள் வேறு.
ஆனால் உலகமயமாக்கல் விளைவினால் விவசாயம் அழிந்து, வாழ வழிதேடி மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்து குஜராத்திற்கு வரும் ‘கூலி’ தொழிலாளிகள் ‘சிலிக்கோசிஸ்’ என்ற அபாயகரமான உயிர்க்கொல்லி வியாதியினால் தாக்குண்டு தெரிந்தே, தடுக்க இயலாமல் “சாவை” வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பதை இக்கட்டுரை அம்பலப்படுத்துகிறது”
படங்கள் - www.thehindu.com
(இடது) சிலிக்கோசிஸ் வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி புத்தா மற்றும் அவரது 16 வயது மகள் காம்மா (மற்றும்) சிலிக்கான் துகள்கள்
(வலது) குஜராத் பலசினோர் மாவட்ட சிலிக்கான் பாறை நொறுக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி நோய் தாக்கிய ஒரே வருடத்தில் எலும்புக்கூடாக காட்சி தரும் 20 வயது சனோ.
மெதுவாக ஆனால் கண்டிப்பாக இந்த தொழிற்சாலையினால் “சாவு” எங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்த போதிலும், அதைத் தடுக்க இயலாது என்கிறார் மத்திய பிரதேச அலிராஜ்பூர் மாவட்டம், உண்ட்லி என்ற கிராமத்தைச் சேர்ந்த புத்தா என்கிற 45 வயது விவசாயி வேதனையோடு. சமீபத்தில் இவரது 18 வயது மகனை ‘சிலிக்கோசிஸ்’ என்ற உயிர்க்கொல்லி நோயினால் இழந்துள்ளார் என்பதுடன், இவரின் 16 வயது மகள் காம்மா இன்னும் அந்த நோயுடன் போராடிக்கொண்டுள்ளார் என்கிற உண்மை நம்மை சுடுகிறது.
குஜராத்தில் சிலிக்கன் (குவார்ட்ஸ்) பாறையை உடைத்து தூளாக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதற்கு அருகிலுள்ள மத்திய பிரதேச மாநிலத்தின் அலிராஜ்பூர், தர் மற்றும் தாபுவா மாவட்டங்களிலிருந்து பிழைப்பு தேடி புலம் பெயர்ந்து வரும் கூலித் தொழிலாளர்கள் வேலைக்காக ஒப்பந்த காரர்களால் அழைத்து வரப்படுகின்றனர்.
இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் காற்றோடு கலக்கும் சிலிக்கன் துகள்களை தினமும் பணியின் போது 8 முதல் 12 மணிநேரம் சுவாசிக்கின்றனர். இதன் மூலம் மூச்சுத் திணறல், கடுமையான இருமல் போன்ற வியாதிகள் துவங்கி, கண்டிப்பான இறப்பை நோக்கி இவர்களை அழைத்துச் செல்கிறது.
தொழில்வழி உடல் நல பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யும் தேசிய பயிற்சி மையம், குவார்ட்ஸ் கடிகாரம் போன்றவற்றிற்கு பயன்படக்கூடிய இந்த சிலிக்கான் பாறை துகள்கள் இங்கு பணிபுரிகிற அனைவருக்குள்ளும் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கிறது. இந்த நோய் தாக்கியிருப்பதை சில மாதங்கள் ஏன் சில வருடங்கள் சென்ற பின்தான் வெளித்தெரிய வருகிறது. இந்த நோய் தனிநபரை மட்டும் பாதிக்காமல், குடும்பத்தில் உள்ள அனைவரையும் தாக்குகிறது. இந்த உயிர்க் கொல்லி நோயைப் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுவரும் ஷிப்பி கேந்திரா என்ற அமைப்பு அலிராஜ்பூர், மற்றும் தர் மாவட்டங்களைச் சேர்ந்த இந்நோயினால் பாதிக்கப்பட்ட 105 குழந்தைகளை தத்து எடுத்து பராமரித்து வருகிறது.
இந்த அமைப்பு வெளியிடும் விபரங்களின்படி 2010ல் மட்டும் அலிராஜ்பூர், தாபுவா, தர் மாவட்டங்களைச் சேர்ந்த 386 நபர்கள் இறந்துள்ளனர், 724 நபர்கள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. அரசின் பல்வேறு அமைப்புகள் தெரிவிக்கும் புள்ளி விபரங்கள் 238 நபர்கள் இறந்துள்ளனர் எனவும், 304 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கிறது. அலிராஜ்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பதிவுகளின்படி அந்த மாவட்டத்தில் மட்டும் 277 இறப்புகள் ஏற்பட்டதாக தெரியவருகிறது.
ஒவ்வொரு வருடமும், விவசாய பணி குறைவாக இருக்கும் மாதங்களில் ஆயிரக்கணக்கிலான பில் என்றும் பிலல்லா என்றும் அழைக்கப்படும் பழங்குடியின விவசாய கூலி தொழிலாளர்கள் மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர், மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து புலம் பெயர்ந்து குஜராத்தின் கோத்ரா, மற்றும் கேடா மாவட்டங்களுக்கு பிழைப்பு தேடி வருகின்றனர். ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குஜராத்தை சேர்ந்தவர்கள் இந்த அபாயகரமான தொழிற்சாலை தொழிலுக்கு வர மறுத்ததால், பிற மாநில, மாவட்டங்களிலிருந்து புலம் பெயரும் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தி பணி வாங்குவது என்ற நிலை துவங்கியிருக்கிறது.
குஜராத்தில் இது போன்ற தொழிற்சாலைகளுக்கு குஜராத் தொழிலாளர்களை வரவழைக்க முடியாத ஒப்பந்தகாரர்களுக்கு, விவசாயம் பொய்த்துப் போய் இது போன்று அருகிலுள்ள மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்து வரும் கூலித் தொழிலாளர்களால் வாழ்வு வளமானது என்றே சொல்ல வேண்டும். அவ்வாறு வரும் தொழிலாளர்கள் கோத்ரா, மற்றும் பலசினோர் மாவட்டங்களில் உள்ள சிலிக்கான் பாறை உடைப்பு தொழிற்சாலைகளில் வேலை செய்ய பணிக்கப் பட்டனர். இவ்வாறு தொழிலாளர்கள் புலம் பெயர்தல் என்பது அருகிலுள்ள தாபுவா, தர் மற்றும் பரவானி மாவட்டங்களிலிருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிவதென்பது சாவை நோக்கி அழைத்துச் செல்லும் என்று தெரிந்தே ஏன் தொழிலாளர்கள் இங்கு வருகின்றனர்?
பழங்குடியினர் மிகுதியாக வசித்து வரும் அலிராஜ்பூர் மாவட்டத்திற்கும் அருகிலுள்ள மாவட்டங்களுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அனைவருமே பரம்பரையாக மேற்கொண்டு வந்த, வாழ்வாதாரமான விவசாயம் அழிந்து போனதால் பசியை முன்னிட்டு புலம் பெயர்ந்து வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு வந்த கோபால் என்கிற 20 வயது தொழிலாளி சொல்கிறார், இந்த வேலை எளிதானது. ஒரு சணல் சாக்கில் உடைத்த துகள்களை நிரப்பினால் ரூ 1.50 லிருந்து 2.00 வரை கூலியாக கிடைக்கும், நாங்கள் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு நாளைக்கு 600 முதல் 700 சாக்குகளை நிரப்ப முடியும் என்கிறார் அவர். மேலும் இந்த பணி என்பது மற்ற கட்டிட பணிகள் போன்ற கடுமையான பணிகளோடு ஒப்பிடுகையில் எளிதாக உள்ளது என்கின்றனர் அப்பாவி தொழிலாளர்கள். எனினும் உயிர்க்கொல்லியான வியாதி பீடிக்கிறது என்பது பல மாதங்கள் கழித்துத்தான் சிரமப்பட்டு மூச்சு விடுதல், நடக்க முடியாமல் இரைப்பது, எடை குறைவது போன்ற சில அறிகுறிகளின் மூலம் இவர்களுக்கு தெரியவருகிறது.
உண்ட்லி கிராமத்து மக்கள் திடீரென தங்கள் மாவட்டத்தில் பலர் உயிரிழந்ததினாலும், குறிப்பாக இள வயதினர் உயிர் இழந்ததும், பலர் நோயினால் பாதிக்கப்பட்டது தெரிந்ததும் அனைத்தும் இந்த தொழிற்சாலையின் பணியினால்தான் என்பதை உணர்ந்தனர். குறிப்பாக சில இறந்தவர்களின் உடலை எரித்த போது, உடம்பின் அனைத்து பகுதியும் எரிந்து நெஞ்சுப்பகுதி மட்டும் எரியாமலிருந்தது கண்டு, அதை அறுத்துப்பார்த்தால் நெஞ்சு முழுவதும் மேற்படி பாறைகளின் வெள்ளைத் துகள்களால் நிரம்பியிருப்பதை கண்டவுடன் நோயின் அபாயத்தை முழுவதுமாக உணர்ந்தனர் என்கிறார் இந்த கிராமத்தின் தலையாரியான ஷர்மிளா என்பவரின் கணவர் கேசர்சிங்.
அதிலிருந்து அபாயத்தை உணர்ந்த எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்த தொழிலுக்கு செல்வதை தவிர்த்து வருகிறோம் என்கிறார் ஷர்மிளா. ஆனால் இந்த உணர்தலுக்கு முன்பாகவே பாதிப்புகள் என்பது பலருக்கு ஏற்பட்டுவிட்டது. பத்திரிகை நிருபரோடு பேசிய மேற்படி கோபால் 500 மீட்டர் தொலைவு நடப்பதற்குள் மூச்சு வாங்குகிறார்.
A-silent-killer-called-Silicosis-2.jpg
சர்தார் சரோவர் அணை கட்டியதால் வாழ்விழந்து, குஜராத்தில் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கும் ம.பி. விவசாயிகள். விவாசாய வேலை இல்லாத போது இவர்கள் பிழைப்புக்கு குவார்ட்சு குவாரிகளே ஒரே வழி
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம் என்பது இந்த மாவட்டங்களில் திறம்பட செயல்படவில்லை. மேலும் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை தவிர்த்துவிட்டு இந்த தொழிற்சாலையை கூலித் தொழிலாளர்கள் தேடுவதற்கு முக்கியமான காரணம் இந்த தொழிற்சாலையில் உடனுக்குடன் கூலி கிடைக்கிறது என்ற காரணத்தினால்தான். அலிராஜ்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு அசோக் தேஷ்வால் தெரிவிக்கையில், இந்த தொழிற்சாலை பாதிப்பினால் 277 நபர்கள் இறந்துள்ள போதிலும், குறுகிய காலத்தில் பணம் பார்க்க முடியும் என்ற ஆவலே கூலித் தொழிலாளர்களை இந்த மாவட்டத்திலிருந்து குஜராத்தை நோக்கி ஈர்க்கிறது என்கிறார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், நாங்கள் பல விழிப்புளர்வு முகாம்களை நடத்தியுள்ளோம். பலருக்கு அரசின் திட்டமான தீன்தயாள் அந்த்யோதய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சையும் சிலருக்கு பென்சனும் கொடுத்துள்ளோம் என்றார். தவிர 10 நபர்களுக்கு மேல் சொந்த தொழில் துவங்குவதற்காக ரூ 2 லட்சம் வரை உதவித் தொகைகள் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
ஆனால் சாதனைகளாக சொல்லிக்கொள்ளப்படும் அரசின் இந்த செயல்பாடுகள் அரைமனதுடன் செய்வதாகவே எதார்த்தமாக தெரியவருகிறது. விழிப்புணர்வு என்பதற்காக அரசின் சார்பாக பெரிய அளவில் பேனர்களோ, சுவற்று விளம்பரங்களோ மாவட்ட தலைநகர்களில் கூட காணப்படவில்லை. மேலும் சொல்லக்கூடிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்பதில் சிலிக்கோசிஸ் என்ற வியாதிக்கான மருத்துவம் என்பது சேர்க்கப்படவில்லை என்பதே உண்மையாக இருக்கிறது.
மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை ஆணையாளர் டாக்டர் மனோகர் அக்னானி பிரச்சனை மிக மோசமானதும் கடுமையானதும் ஆகும் என ஒப்புக் கொள்கிறார். மேலும் அவர் தெரிவிக்கையில் “மாவட்ட அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து தீர்விற்கான ஆலோசனைகளை வழங்க கேட்கப்பட்டுள்ளனர். அதே போல் அரசு சார்பில்லா நிறுவனங்கள் சிலவற்றிடமும், தீர்விற்கான ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது, அவை பெறப்பட்டவுடன் எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிப்போம்” என்கிறார்.
கடந்த நவம்பரில் தேசிய மனித உரிமை ஆணையம் குஜராத் அரசிடம் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலிக்கோசிஸ்-னால் பாதிக்கப்பட்ட 238 குடும்பங்களுக்கு தகுந்த நஷ்ட ஈடு ஏன் வழங்கப்படவில்லை என காரணம் காட்டக் கோரும் அறிவிப்பை சார்பு செய்துள்ளது. ஆனால் அதன் மீதான நடவடிக்கை என்பது அரசு அலுவலக சிவப்பு நாடா கோப்பு முறையினால் கட்டுண்டு நடவடிக்கையின்றி இருப்பதாகவே தெரிகிறது.
தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் குஜராத் மத்திய பிரதேச மாநிலங்களில் தாவாக்கள் அதிகரிக்க துவங்கியது. தற்போது மாநில அரசு பல்வேறு அதிகார அமைப்புகளுடன் இழப்பீடு வழங்குவது தொடர்பாக கடிதப் போக்குவரத்துக்கள் நடத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் எதுவும் முடிந்தபாடில்லை என்கிறார் குஜராத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் (தொழிலாளர்) டாக்டர் வரேஷ் சின்ஹா. தேசிய மனித உரிமை ஆணையம் இந்த சிலிக்கோசிஸ் இறப்புக்களை மிகவும் கடுமையாக பார்த்ததுடன், புதுடில்லியில் சிலிக்கோசிஸ் தொடர்பான மாநாடு ஒன்று நடத்தி, ராஜஸ்தான் அரசின் மூலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு ரூ 1 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிகார வரம்புள்ளவர்களான தொழிலாளர் துறை, மருத்துவத்துறை அல்லது சமூக நலத்துறை எதுவாக இருக்கட்டும், அவர்கள் இந்த சிலிக்கோசிஸ் என்ற உயிர்க்கொல்லும் நோயிலிருந்து அப்பாவி தொழிலாளர்களை காப்பதற்கு உடனடியாக களத்தில் இறங்க வேண்டும். இல்லையெனில் கோடி கோடியாக கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு கொட்டிக் கொடுப்பதினால் இந்த உயிர்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் ஒருவர் கூட திரும்பப்போவதில்லை என்பதுதான் நிதர்சனம்.
இந்த தொழிற்சாலையின் பணிநிலை என்பது மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இதன் தொழிலாளர்களை உயிர்பலிவாங்கும் இந்த அபாயத்திலிருந்து காக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும் என்கிறார் தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் திரு பி.சி.சர்மா.
_________________________________________________________
நன்றி- தி இந்து நாளிதழ் (16-04-11) மற்றும் செய்தியாளர் திரு மஹிம் பிரதாப் சிங்
தமிழில் – சித்ரகுப்தன்
திங்கள், 25 ஏப்ரல், 2011
குஜராத்தின் வளர்ச்சிக்காக கொல்லப்படும் ம.பி தொழிலாளர்கள்!
10:06 PM
இந்தியா