பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் ரமலான் நோன்பு நாளில் பகலில் பொது இடத்தில் சாப்பிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்கள் 3 நாள்கள் சிறையில் இருக்க வேண்டும்.
புனித ரமலான் மாதத்தில் அனைவரும் பகலில் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து இரவில் மட்டுமே உண்ண வேண்டும், 5 வேளை தொழுகை செய்ய வேண்டும், இறைச் சிந்தனையைத் தவிர வேறு கேளிக்கைகளிலோ இதர விஷயங்களிலோ மனதைச் செலுத்தக் கூடாது என்பது நியதி.
பாகிஸ்தானை முஸ்லிம் நாடாக அரசியல் சட்டப்படியே அறிவித்திருப்பதால் அங்கே மதச் சடங்குகளுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுகிறது. அத்துடன், ஜியா உல் ஹக் என்பவர் பாகிஸ்தானின் சர்வாதிகாரியாப் பதவி வகித்தபோது நோன்புக் காலங்களில் மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவசரச் சட்டமே இயற்றப்பட்டிருக்கிறது.
அதன்படி நோன்பு காலத்தில் யாரும் பொது இடத்தில் மற்றவர்களின் நோன்பைக் குலைக்கும் வகையில் சாப்பிடுவது, குடிப்பது, புகைபிடிப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது. அப்படிச் செய்பவர்கள் கைது செய்யப்பட்டு 3 நாள்களுக்குச் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
திரையரங்குகள், நாடக அரங்குகள் ஆகியவை சூரியன் மறைந்தது முதல் 3 மணி நேரத்துக்கு மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவசரச் சட்டம் கூறுகிறது. எனவே பாகிஸ்தான் அரசும் பஞ்சாப் மாகாண அரசும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை நியமித்துள்ளது.
திங்கள், 8 ஆகஸ்ட், 2011
நோன்பு நாளில் சாப்பிட்ட 25 பேர் கைது! பாகிஸ்தானில்
10:28 PM
ரமலான்