நோன்பின் நோக்கம் ~ சஹாரா தமிழ்

ads

சனி, 6 ஆகஸ்ட், 2011

நோன்பின் நோக்கம்

http://www.satyamargam.com/images/stories/news09/moon-day6.jpg 
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 6
 
அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
"நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று) இறைபக்தி உடையவர்கள் ஆகலாம்" (அல்குர்ஆன் 2: 183). 

நோன்பைப் பற்றி ஏக இறைவனாகிய அல்லாஹ் கூறும்போது நோன்பு என்பது உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினர் போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டிருக்கிறது என்று தொடங்குகிறான். உலகில் வாழும் மனிதர்களில் நாத்திகர்களாகிப் போனவர்களைத் தவிர்த்து, எல்லா மதங்களிலும் நோன்பு (விரதம்) ஏதேனும் ஒரு வடிவில் பின்பற்றப் படுவது இங்கு நோக்கத் தக்கதாகும். உலக மாந்தர் அனைவருக்கும் வாழும் வழியாக இஸ்லாம்தான் ஆதியில் இருந்திருக்கிறது என்பதும் "மனிதர்கள் தங்களுக்குள் பிரிந்து கொண்டு பல மதங்களை உண்டாக்கிக் கொண்டனர்" என்ற (23:52-53) இறைவாக்கும் இதன் மூலம் உறுதியாகிறது.
நோன்பைப் பற்றிய உன்னதமான நோக்கத்தை நமக்கு அல்லாஹ் எடுத்துச் சொல்லும்போது,
....لَعَلَّكُمْ تَتَّقُونَ......... 

"…..நீங்கள் (உள்ளச்சம் பெற்று) இறைபயபக்தி உடையவர்கள் ஆகலாம்" (அல்குர்ஆன் 2:183) என்ற தெளிவை நம் முன் வைக்கிறான்.

அதாவது மனிதர்கள் நோற்கும் நோன்பினால் இறைவனுக்கு ஏதும் தேவையோ, இலாபமோ பயனோ ஏற்படாது. இதை நாம் நோற்கத் தவறினால் இறைவனுக்கு நஷ்டம் எதுவும் ஏற்படாது. இதனை முறையாக நோற்றால், இதனால் மனிதன் இறையச்சம் உடையவன் ஆகலாம் (அதன் மூலம் அவனுக்கும், அவன் குடும்பத்தினர் அவனைச் சார்ந்துள்ள அவன் வாழுகின்ற சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் நிச்சயமாக பலன்கள் உண்டு) என்று கூறுகின்றான். ஆகையால் இந்த நோன்பின் மகத்துவத்தையும் அது நமக்கு ஏற்படுத்த வல்ல பலன்கள் யாவை? என்பது பற்றியும் அதனால் சமூகம் பெறும் நன்மைகள் யாவை? என்பனவற்றையும் ஆய்வு செய்ய நாம் கடமைப் பட்டுள்ளோம்.

"பட்டினி என்றால் என்ன என்பதை அறியாமல் செழிப்பில் வாழும் முஸ்லிம் செல்வந்தர்கள், வருடத்தில் ஒரு மாதம் நோன்பிருப்பதன் மூலம் பட்டினியை அறிந்து கொள்வதற்கும் அதன் மூலம் காலமெல்லாம் பட்டினியில் உழலும் வறியவர்க்கு உதவ வேண்டும் என்ற சிந்தனையைச் செல்வந்தர்களிடையே நோன்பு ஏற்படுத்துகிறது" என்றும் "பதினொரு மாதங்கள் வேளை தவறாமல் நிரம்பிய வயிறுக்கு ஒரு மாத காலம் நோன்பிருந்து சற்றே ஓய்வு கொடுப்பதன் மூலம் உடல் ரீதியான ஆரோக்கியம் கிட்டுகிறது" என்றும் "வருடத்தில் ஒரு மாதம் நோன்பிருப்பது ஆரோக்கிய வாழ்விற்கு நல்லதொரு பயிற்சி" என்றும் உலக ரீதியான பல காரணங்கள் மக்களால், மருத்துவர்களால் சொல்லப் பட்டாலும் நோன்பின் நோக்கத்தைப் பற்றி அல்லாஹ் என்ன கூறுகிறான் என்பதே இங்கு நம் சிந்தையில் கொள்ளத் தக்கதாகும்.

- தொடரும் இன்ஷா அல்லாஹ்
ஆக்கம்: இப்னு ஹனீஃப்
பிறை 1 | பிறை 2 | பிறை 3 | பிறை 4 | பிறை 5

 - www.satyamargam.com

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்