புதுடெல்லி, மார்ச் 16: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைந்தது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 1–ந்தேதி பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 40 காசு உயர்த்தின. வரியையும் சேர்த்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 1 ரூபாய் 78 காசு அதிகரித்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சிறிது குறைந்ததை தொடர்ந்து, எண்ணெய் நிறுவனங்கள், 15 நாட்களில் பெட்ரோல் விலையை நேற்று லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்தன. இந்த விலை குறைப்பு உள்ளூர் விற்பனை வரி அல்லது வாட் வரி நீங்கலானது ஆகும். எனவே வரி கழிவையும் சேர்த்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 2 ரூபாய் 54 காசு குறைந்தது. இந்த விலை குறைப்பினால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 73 ரூபாய் 95 காசில் இருந்து 71 ரூபாய் 41 காசாக குறைந்தது.
வரிக்கழிவையும் சேர்ந்து டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 2 ரூபாய் 40 காசு குறைந்து, 68 ரூபாய் 34 காசு ஆனது.இதேபோல் வரிக்கழிவையும் சேர்ந்து மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 2 ரூபாய் 52 காசு குறைந்து, 75 ரூபாய் 14 காசு ஆனது. கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 2 ரூபாய் 50 காசு குறைந்து, 75 ரூபாய் 84 காசு ஆனது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
டீசல் விலை லிட்டருக்கு 40 முதல் 50 காசு வரை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சனி, 16 மார்ச், 2013
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைந்தது...
6:25 PM
இந்தியா, தமிழகம், விலை குறைப்பு