தமிழகத்தில் அதிகரிக்கும் லாக்கப் சாவுகள்- 90 நாட்களில் 31 பேர் மரணம். ~ சஹாரா தமிழ்

ads

சனி, 29 ஆகஸ்ட், 2009

தமிழகத்தில் அதிகரிக்கும் லாக்கப் சாவுகள்- 90 நாட்களில் 31 பேர் மரணம்.

சென்னை: தமிழகத்தில் போலீஸ் காவலில் மரணமடைவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தவண்ணம் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 31 பேர் போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்துள்ளனர்.சென்னை அருகே பனையூரில் நடந்த பயங்கர இரட்டைக் கொலைச் சம்பவத்தில் பிடிபட்ட ராஜன் என்கிற சண்முகராஜன், போலீஸ் காவலில் இருந்தபோது மரணமடைந்தார். பிடிபட்ட சில மணி நேரங்களில் அவர் மரணமடைந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பொதுமக்கள் அவரைப் பிடித்து அடித்தததால்தான் சண்முகராஜன் மரணமடைந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் போலீஸார்தான் அடித்துக் கொன்று விட்டதாக ராஜனின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.ஆகஸ்ட் 17ம் தேதி நள்ளிரவு, சண்முகராஜன் உயிரிழந்த அதே நீலாங்கரை காவல் நிலையத்தில் கணவன், மனைவித் தகராறு ஒன்று வந்தது. உஷாராணி என்பவர் 35 வயதான தனது கணவர் ரமேஷ் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக புகார் கூறினார்.அப்போது பணியில் இருந்த நீலாங்கரை சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் மற்றும் 3 போலீஸார் குடிபோதையில் இருந்ததாகவும், அந்த சமயத்தில் புகாருக்கு ஆளான ரமேஷை அவர்கள் மிருகத்தனமாக தாக்கியதாகவும், அதில்தான் ரமேஷ் உயிரிழந்தார் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.எந்தவித விசாரணையும் நடத்தாமல் போலீஸார் மிருகத்தனமாக அடித்துக் கொலை செய்து விட்டதாக ரமேஷின் சகோதரர்கள் அன்பு, லோகநாதன் ஆகியோர் குமுறினர்.ரமேஷின் கைகளைப் பிடித்துக் கொள்ளுமாறு குணசேகர் உத்தரவிட்டதாகவும், அதன்படி போலீஸார் 3 பேரும் கைகளைப் பிடித்துக் கொண்டதாகவும், இதையடுத்து தனது கையில் இருந்த லத்தி உடைந்து போகும் அளவுக்கு இரக்கமே இல்லாமல் குணசேகர் ரமேஷை அடித்ததாகவும் கூறப்படுகிறது.அப்படியும் நில்லாமல், என்ன செய்கிறோம் என்ற சுய நினைவே இல்லாத போலீஸார், ரமேஷை அவரது மோட்டார் சைக்கிள் மீது படுக்க வைத்தும் அடித்து நொறுக்கினர். இதில் என்ன கொடுமை என்றால் ரமேஷை அடித்து இழுத்துச் செல்லும்போது அவரிடமிருந்தே ஜீப்புக்கு பெட்ரோல் போட ரூ. 200 பணத்தையும் போலீஸார் பறித்துள்ளனர்.காவல் நிலையத்திலேயே ரமேஷ் மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டதாகவும், அதன் பின்னர் மருத்துவனைக்குக் கொண்டு செல்வது போல போலீஸார் நாடகமாடியதாகவும் அன்பு கூறுகிறார்.தமிழக காவல் நிலையங்களில் போலீஸார் இதுபோல குற்றம் சாட்டப்படுவோரிடம் இரக்கமே இல்லாமல் நடந்து கொள்வதால்தான் லாக்கப் அப் சாவுகள் அதிகரித்து விட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதுபோன்ற குற்றம் இழைத்து குற்றச்சாட்டுக்கு ஆளாகும் போலீஸார் உரிய முறையில் தண்டிக்கப்படுவதில்லை. அதனால்தான் இதுபோன்ற சட்டவிரோத சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்தியாவிலேயே அதிக அளவிலான லாக்கப் அப் சாவுகள் நடைபெறும் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. தமிழகம் அந்த இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த 2006 முதல் 2009 வரை தமிழகத்தில் 40 லாக்கப் சாவுகள் நடந்துள்ளதாக கூறும் பீப்பிள்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பு, இறந்தவர்கள் பெரும்பாலும் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கிறது. இவர்கள் அனைவருமே திருட்டு, கள்ளச்சாராயம் என மிகச் சாதாரண குற்றத்திற்காக பிடித்துச் செல்லப்பட்டவர்கள். அனைவரும் ஏழைகள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள். பெரும்பாலானவர்கள் தலித்கள் என்பதுதான் மிகக் கொடுமையானது. சட்ட உதவி பெறக் கூட வழி இல்லாத அல்லது தெரியாத இவர்களை இப்படிக் கொடூரமாக சித்திரவதைப்படுத்திக் கொல்வது மிகவும் மோசமான செயல் என்கிறது பீப்பிள்ஸ் வாட்ச்.
நன்றி: தட்ஸ்தமிழ்

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்