வசதி படைத்துவர்களுக்கு காஸ் மானியம் வழங்குவதை ரத்து செய்யும் பணியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
இதற்காக குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருவாய் உள்ளவர்களின் பட்டியலையும் தயாரித்து வருகிறது. இதன் மூலம் சுமார் ஒரு கோடி பேருக்கு காஸ் மானியம் ரத்தாகும் என்று தெரிகிறது.
மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு மானியங்களை வழங்கி வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் பல்லாயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதனால் மிக முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கமுடியவில்லை என்று மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது. இவற்றை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட சில திட்டங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை குறைத்து, அதன் மூலம் மிச்சமாகும் நிதியை வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டங்களில் முதலீடு செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவ்வப்போது சுட்டிகாட்டி வருகிறார்.
காஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிகள் மூலம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த தொடங்கியுள்ளது. இதற்காக பயனாளிகள் தங்களது வங்கி கணக்கு எண்ணை காஸ் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கான கெடு கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்து விட்டது. இருப்பினும் வரும் மார்ச் மாதம் வரை இந்த கெடு நீடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 60 சதவீத பயனாளிகளுக்கு காஸ் மானியத் தொகை வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது.
இதற்கிடையே, வசதி படைத்தவர்கள், வருமான வரி செலுத்துபவர்களுக்கு சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் சுமார் ஒரு கோடி பேருக்கு சமையல் காஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் ரத்தாகும் என்று மத்திய நிதி அமைச்சக மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சக வட்டாரங்களும் சுட்டி காட்டின.இதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பிப்ரவரி மாதம் 28ம் தேதி மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது அறிவிப்பார் என்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வியாழன், 29 ஜனவரி, 2015
வசதி படைத்துவர்களுக்கு காஸ் மானியம் ரத்து : மத்திய அரசு தீவிரம்...
1:56 PM
இந்திய செய்திகள், மத்திய அரசு, India News