தகுதி வாய்ந்த முஸ்லீம் இந்திய பிரதமராகலாம்-ராகுல் ~ சஹாரா தமிழ்

ads

திங்கள், 7 டிசம்பர், 2009

தகுதி வாய்ந்த முஸ்லீம் இந்திய பிரதமராகலாம்-ராகுல்


அலிகார்: இந்தியாவில் பிரதமராவதற்கு மதம் ஒரு தடையே அல்ல. ஒரு முழுத் தகுதி வாய்ந்த முஸ்லீம் நிச்சயமாக பிரதமராக முடியும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார்.

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார்.

மாணவ-மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். ஒரு மாணவர், இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் இஸ்லாமியர் ஒருவர் பிரதமர் ஆக முடியவில்லையே. ஒரு இஸ்லாமியர் பிரதமராக இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த ராகுல், இந்தியாவில் பிரதமராவதற்கு மதமோ, ஜாதியோ ஒரு பொருட்டே அல்ல. இந்த விஷயத்தில் மதம், இனம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஒருவரது தகுதிதான் முக்கியம். இன்று மன்மோகன் சிங் பிரதமராக இருக்கிறார் என்றால் அவர் சீக்கியர் என்பதற்காக அல்ல. அவர் மிகச் சிறந்த தகுதியும், திறமையும் கொண்டவர் என்பதால் தான்.

அதே போல முழுமையாக தகுதியுள்ள ஒரு இஸ்லாமியரும் இந்தியாவில் நிச்சயம் பிரதமராக முடியும். அப்படியே இஸ்லாமியர் ஒருவர் பிரதமரானாலும் அவர் இஸ்லாமியர் என்பதற்காக அல்ல, ஒரு தகுதி வாய்ந்த நபர் என்பதால் தான் பிரதமராகியிருப்பார்.

சீக்கியர்கள் நமது மக்கள் தொகையில் மிகமிகக் குறைவு தான். தங்கள் இனத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வருவார் என்று அவர்கள் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

அது போல இஸ்லாமியர்களிலும் தேசிய அளவில் நிறைய தலைவர்கள் உருவாக வேண்டும். இஸ்லாமிய இளைஞர்கள் அரசியலில் அதிக அளவில் ஈடுபட்ட வேண்டும். அப்படி வந்தால் தான் உயர் பதவிகளை எட்ட முடியும்.

ஆனால், துரதிஷ்டவசமாக தேசிய அளவில் மிகக் குறைவான இஸ்லாமிய இளைஞர்கள் தான் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தது 25 இளம் முஸ்லீம்களாவது தேசிய அரசியலில் தீவிரமாக ஈடுபட வேண்டும். அதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டிருக்கிறேன்.

கிரிமினல்கள், மதவாதிகள் தவிர அனைத்துத் தரப்பு மக்களும் அரசியலில் ஈடுபட வேண்டும். அது தான் நாட்டுக்கு நல்லது என்றார்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்