பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...
அஸ்ஸலாமு அலைகும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹ்...
பர்தாவைப் பற்றியும் அதன் அவசியம் மற்றும் அதன் அளவு பற்றியும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன.பெண்கள் அவர்களுடைய அழகை அந்நிய ஆண்களுக்கு மத்தியில் வெளிப்படுத்துவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.இந்நிலையில் முகத்தையும் முன்கைகளையும் மறைக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதில் உலமாக்களிடையே கருத்து வேறுபாடுள்ளது.
ஆனால் முகத்தையும் முன்கைகளையும் மறைக்கக்கூடாது என்று தமிழகத்தில் ஒரு கருத்து பரப்பப்பட்டு வருகின்றது. ஏனென்றால் இஸ்லாத்தில் இதற்கான ஆதாரமில்லை என்றும் இதன் மூலம் திருட்டு,விபச்சாரம்,நடிகைகள் தவறாக பயன்படுத்துதல்,தவறு செய்வதற்கு வாய்ப்பு தருகின்றது போன்ற கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.ஆனால் முகத்தையும் முன்கைகளையும் மறைக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாத்தில் ஆதாரம் இருக்கின்றது.
அல்லாஹு ஸுப்ஹானஹு வ தஆலா கூறுகின்றான்
நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்(33:53)
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக.அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன். மிக்க அன்புடையவன்.(33:59)
இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்…………….(வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்.(24:31)
(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்.(33:33)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் கூறுகின்றார்கள்
இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது!'' என்று இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஃஹாரி-1838
மேற்கண்ட ஹதீஸில் பெண்கள் முகத்திரையையும் கையுறைகளையும் பயன்படுத்தியுள்ளார்கள்.அதனாலேயே நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் இஹ்ராமில் தடுத்துள்ளார்கள். ஆனால் இந்நேரங்களில் கூட நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மனைவியர்களும் மற்ற முஸ்லிமான பெண்களும் தங்களுடைய முகங்களை மறைத்துள்ளனர். அதற்கான ஆதாரம்
ஆயிஷா ரதியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள்.
நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்க ளுடன் இஹ்ராமில் இருந்தபோது,வாகனக்காரர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தனர்.அவர்கள் எங்களுக்கு நேராக வருகின்ற போது பெண்களில் ஒவ்வொருவரும் தம் முகமூடிகளைத் தலைகளிலிருந்து முகங்களின் மீது தொங்கவிட்டுக் கொள்வார்கள்.அவர்கள் எங்களை கடந்து சென்று விட்டால் முகங்களை திறந்துக் கொள்வோம்.- அபூ தாவூத்
இந்தக் காலத்தில் குழப்பங்கள் அதிகமாக இருக்கின்றன.எங்கும் பரவலாக காணப்படுகின்றது.தீயவர்கள்தான் கடைவீதிகளிலும் மற்ற இடங்களிலும் திரிகின்றனர்.அழகை வெளிப்படுத்துவதில் முகமே முக்கிய பங்கு வகுக்கின்றது.இந்த சூழ்நிலையில் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியில் செல்வதே சிறந்ததாகும்.