என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்படும் முஸ்லிம் இளைஞர்கள்! தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்! காவல்துறையினரால் நடத்தப்படும் என்கவுண்டர்களில் கிட்டத்தட்ட சரிபாதி என்கவுண்டர்கள் போலி என்கவுண்டர்கள் என்று அழைக்கப்படும் காவல்துறை படுகொலைகள் என தேசிய மனிதஉரிமை ஆணையம் பட்டியலிட்டுள்ளது. 2008&ம் ஆண்டு டெல்லி ஜாமியா நகரில் பாட்லா ஹவுஸில் நிகழ்ந்த காவல் துறை என்கவுண்டரில் இரண்டு இளைஞர்கள் என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தின் ஆஸம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் தலைநகர் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்று வந்தனர். ஆதிஃப், சாஜித் என்ற இளைஞர்களை டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என குற்றம்சாட்டியும் அந்த குற்றவாளி களை(?) கையும், களவுமாக பிடிக்கப் போவதாக கூறிக்கொண்டு, டெல்லி ஜாமியா நகர் பகுதியில் ஜனநெருக்கடி மிகுந்த பகுதியில் என்கவுண்டர் செய்தது டெல்லி காவல்துறை. இந்த என்கவுண்டர் நாடகத்தில் காவல்துறை ஆய்வாளர் சர்மா என்பவரும் பலியானார். என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டான சர்மாவும் பலியானது டெல்லி மக்களின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. ஆதிஃப், சாஜித் இருவரும் போலி என்கவுண்டரில் தான் படுகொலை செய்யப்பட்டனர் என்றும், காவல்துறை அதிகாரி சர்மா சுட்டுக்கொல்லப்பட்ட விதமும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத் தியதாக மனித உரிமை ஆர்வலர் கள் அப்போது கடும் எதிர்ப்பு தெரி வித்திருந்தனர். போலி என்கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டவர்கள் இருவரும் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் என்பதால் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், துணை வேந்தர் உள்பட ஏராளமானோர் போராட்டத்தில் குதித்தனர். அன்றைய மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், ஜாமியா மில்லியா மாணவர்களின் போராட்டத்திற்கு தனது முழு ஆதரவும் உண்டு என அறிவித்தார். இருப்பினும் பாட்லா ஹவுஸ் படுகொலையில் நீதி கிடைக்காத நிலையே நீடித்தது. இந்நிலையில் பாட்லா ஹவுஸ் படுகொலை நிகழ்ந்த 2008 செப்டம்பர் 19க்குப் பிறகு ஒரே வாரத்திற்குள் 24-09-2008ல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி, முக்கிய கேள்விகள் அடங்கிய பட்டியல் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் மாணவரும், சமூகநல ஆர்வலரும், 22 வயதேயான அஃப்ரோஸ் ஆலம்சாஹிப், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி வினாக் கள் விடுத்திருந்தார். அவர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும், அவரால் குறித்த காலத்திற்குள் பதில் பெற முடிய வில்லை. பலதடவை முயன்ற பின்னரே அவர்கேட்ட தகவல்களை, தேசிய மனித உரிமை ஆணையத்திடமிருந்து பெற முடிந்தது. 1993&லிருந்து 2009 வரை நடைபெற்ற என்கவுண்டர்கள் உள்ளிட்ட முக்கிய வினாக்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் பதில் அளித்தது. 1) 1993-லிருந்து இதுவரை நடைபெற்ற காவல்துறை என்கவுண்டர்களின் எண்ணிக்கை 2560. 2) அதில் போலி என்கவுண்டர்கள் என கண்டறியப்பட்டது 1224. இரண்டு என்கவுண்டர்களில், ஒரு என்கவுண்டர் அப்பட்டமான, மனித உரிமை மீறலான படுகொலை என்பதும் தெரியவந்தது. 3) மத கலவரங்கள் மற்றும் சாதிய வன்முறைகளில் 432 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 4)¢காவல்துறையினரின் கட்டுப் பாட்டில் நிகழ்த்தப்பட்ட சாவுகள் 2320. 5) பெண்கள் மீதான வன்முறைகள் 4502. 6) தலித்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் 17,998. 7) அரசு அலுவலர்களால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் 224. 8) தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 16,784 என்பது குறிப்பிடத்தக்கது. 9) 1224 போலி என்கவுண்டர் வழக்குகளில் 16 பேருக்கு மட்டுமே இழப்பீட்டுத்தொகை கொடுக்கப் பட்டுள்ளது. இத்தனை அரிய பட்டியலை வெளியிட முக்கிய காரணமாக இருந்தது பாட்லாஹவுஸ் என்கவுண்டர் சம்பவம்தான் என்பதனை மறந்திருக்க மாட்டார்கள். டெல்லி மாநகர மக்களால் வன்மையாகக் கண்டிக்கப்பட்ட பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் கூட போலி என்கவுண்டரே என தேசிய மனித உரிமை ஆணையம் பட்டியலிட்டுள்ளது. போலி என்கவுண்டர் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தைப் பிடித்தது. 1993 முதல் 2009 வரை 16 ஆண்டுகளில் 716 போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தி உத்தரப்பிரதேச காவல்துறையினர் சாதனை படைத்துள்ளனர். போலி என்கவுண்டர்களில் மூன்று இலக்க எண்ணை எட்டிப்பிடித்த உத்தரப் பிரதேசத்தை இந்தியாவின் எந்த மாநிலத்தாலும் தொடக்கூட முடிய வில்லை. போலி என்கவுண்டர் படுகொலை களில் உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்து பீகார் இரண்டாம் இடத்தை பெறுகிறது. இங்கு 79 போலி என்கவுண்டர்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 73 போலி என்கவுண்டர் படுகொலையோடு ஆந்திரா மூன்றாவது இடத்திலும், 61 போலி என்கவுண்டர் சாதனைகளை(!) நிகழ்த்தி மகாராஷ்டிரா நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன. கடந்த 16 ஆண்டுகளில் அந்தமான்&நிக்கோபர் தீவுகளில் ஒரு சம்பவம் மட்டுமே போலி என்கவுண்டர் கொலை என கண்டறியப்பட் டுள்ளது. 16 ஆண்டுகளில் தமிழகத்தில் 24 போலி என்கவுண்டர்கள் நிகழ்ந்தன. போலி என்கவுண்டர்களே நடக்காத மாநிலமாக நம் அண்டை மாநிலங்களாக கேரளா, புதுவை விளங்குகின்றன. இது மனிதஉரிமை பேணுபவர்களும், மனிதஉரிமையை மீறுபவர்களும் ஒரு சேர கூர்ந்து கவனிக்க வேண் டிய அம்ச மாகும். போலி என்கவுண் டர்களில் ஹிந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என பல்வேறு பிரிவினரும் பாதிக்கப் பட்டுள்ளனர். போலி என்கவுண் டர்களில் முஸ்லிம் படுகொலைகளில் (வழக்கம்போல) குஜராத் முதலிடத்தைப் பிடித்துள்ளது. குஜராத் காவல்துறையினர் நிகழ்த்திய போலி என்கவுண்டர்களில் 60 சதவீதம் முஸ்லிம்களுக்கு எதிரானது. குஜராத்தில் நிகழ்ந்த 20 போலி என்கவுண்டர்களில் 12 முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். குஜராத் காவல்துறையினர். (இஸ்ரத்ஜஹான், ஷொராபுதீன் போலி என்கவுண்டர் படுகொலைகளை மறக்க முடியுமா?) அதிக அளவு முஸ்லிம்களை போலி என்கவுண்டர் செய்த பட்டியலில் உத்தரகண்ட மாநிலம் (31%) இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் முஸ்லிம்களை போலி என்கவுண்டர் (26%) செய்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தது. உத்தரப்பிரதேசம் நான்காவது இடத்தையும் (18%), பீகார் 5வது இடத்தையும் பெற்றுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட போலி என்கவுண்டர் பட்டியலை மாநில வாரியாக பார்ப்போம். மேலும் காவல் நிலைய படுகொலைகள் குறித்த திடுக்கிடும் விவரங்களை தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ளது. கடந்த 16 ஆண்டுகளில் 2318 பேர் காவல்துறை அதிகாரி களின் கட்டுப்பாட்டில் இறந்துள்ளனர். காவல்நிலைய சாவுகளில் மகராஷ்ட்ரா மாநிலம் முதலிடம் பெறுகிறது. 316 பேர் மகாஷ்டிராவில் பலியாகியுள்ளனர். இரண்டாவது இடத்தை உத்தரப்பிரதேச மும் (255), மூன்றாம் இடத்தை குஜராத்தும் (190) நான்காம் இடத்தை பீகாரும் ஐந்தாம் இடத்தை மேற்கு வங்காளமும் பெறுகின்றன. கடந்த 16 ஆண்டுகளில் காவல் நிலைய சாவுகளில் 1. மேற்கு வங்காளத்தில் 36 முஸ்லிம்களும், 2. அஸ்ஸாமில் 35 முஸ்லிம்களும் 3. குஜராத்தில் 29 முஸ்லிம்களும் 4. மகராஷ்ராவில் 27 முஸ்லிம்களும் 4. உத்திர பிரதேசத்தில் 27 முஸ்லிம்களும் 5. பீகாரில் 14 முஸ்லிம்களும் 5. டெல்லியில் 11 முஸ்லிம்களும் 6. கர்நாடகாவில் 11 முஸ்லிம்களும், காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது உயிரிழந்ததாக தேசிய மனித உரிமை ஆணையம் குறிப்பிடுகிறது. குஜராத்தில் காவல் நிலைய சாவுகளில் பட்டியலிடப்பட்ட 29 முஸ்லிம் உயிரி ழப்பு களில் 19 உயிரிழப்புகள். குஜராத் இனப் படுகொலை நிகழ்ந்த 2002&-ம் ஆண்டுக்குப்பிறகு நிகழ்ந்தவை யாகும். அதைப் போன்று கர்நாடகாவில் காவல்துறை யினரின் கட்டுப்பாட்டில் 11 முஸ்லிம்கள் பலியான சம்பவங்கள் சமீப ஆண்டுகளில் நிகழ்ந் தவை என்பதும் தெரிய வருகிறது. 51 பக்கங்களைக் கொண்ட தேசிய மனிதஉரிமை ஆணையத்தின் பட்டியல் உலுக்கும் பல்வேறு, உண்மைகளை உலகுக்கு உணர்த்தியுள்ளது என்றால் அது மிகையன்று. -அபூஸாலிஹ் |