பெரியாரியல் தோழர்களுக்கு ஒரு விளக்கம்! ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 15 ஏப்ரல், 2010

பெரியாரியல் தோழர்களுக்கு ஒரு விளக்கம்!


பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தன்மனமாற்றத்திற்கு என்னகாரணம் என்பதையும் விளக்கியுள்ளார்!

சிண்டு முடிதலையும், சீண்டி விடுதலையும் முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கும் சில ஏடுகள், பெரியார்தாசனின் மனமாற்றத்திற்கு உள்நோக் கங்களைக்கற்பித்து கொச்சைப் படுத் துகின்றன.
தந்தை பெரியார்திராவிடர் கழகச் செயலாளரும், நமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவரான தோழர் ராமகிருஷ்ணன் இதன் பின்னணியில் சிறப்பான(?) காரணங்கள் இருக்கும், பிறகு அது வெளிவரும் என்று கூறியதாக ஒரு பத்திரிகை எழுதியுள்ளது.

பெரியார்தாசனை நீங்கள் எப்படி உங்கள் மதத்துக்குள் அனுமதிக்கலாம்(?) உங்கள் மதம் அவ்வளவு மட்டமாகி விட்டதா? என்று நம்மிடம் பொங்கி வெடித்தார். அறிவையே தன் அடை யாளமாகக் கொண்ட ஒரு மூத்த கவிஞர். பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவி அப்துல்லாஹ்வாக மாறியதால். பெரியாரியல் தோழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இருந்துவரும் உறவில் கீறல் விழுந்துள்ளதாக... இல்லை, பிளவே தோன்றியதாக... இல்லை... இல்லை... பகையுணர்ச்சியே வந்து விட்டதாக, சிலர் கீறல் விழுந்த குறுந்தட்டைப்போல் திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்கள். அது அவர்களின் ஆசை போலும்...

தமிழ்ச்சமூகத்தைச் சாதி என்ற சதியால் பிளந்து கூறு கூறாக்கியுள்ள சமூகக் குற்றவாளிகளின் ஆசைக்கு பெரியாரில் தோழர்களோ அல்லது முஸ்லிம்களோ இரையாகி விடக்கூடாது. இடங்கொடுத்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த விளக்கம் தரப்படுகிறது.
இஸ்லாம் மார்க்கத்தில், எவ்வித கட்டாயமும் இல்லை என்கிறது திருக்குர்ஆன். மிரட்டியோ உலக ஆசைக்காட்டியோ ஒருவரை இஸ் லாத்தை ஏற்கச் செய்வதற்கு அந்த மார்க்கமே தடை போடுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) தன்னை வளர்த்தவரும், உயிருக்குயிராய் நேசித் தவருமான சிறியதந்தை ஆபூதாலிபைக் கூட கட்டாயப்படுத்த வில்லை. அவரும் கடைசிவரை இம்மார்க்கத்தில் இணையவில்லை.

நபிகள் நாயகம் மரணிக்கும் தருவாயில், அவர்களது கவச ஆடை, ஒரு யூதரிடம் அடமானமாக இருக்கும் அளவுக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத யூதர்கள், முழு சுதந்திரத்தோடும், ஆட்சியாளருக்கே அடமானம் பெற்று கடன் கொடுக்கும் அளவுக்கு செல்வாக்கோடும் திகழ்ந்துள்ளனர்.

அவ்வாறே கலீஃபாக்களின் ஆட்சி யிலும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளா தவர்களின் தனி மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டன.

இஸ்லாம் மார்க்கம் தான் இம்மை, மறுமை ஈருலக  வாழ்வின் வெற்றிக்கு ஒரேவழி என்று பரப்புரை செய்வது முஸ்லிம்களின் கடமை.
வணக்கத்திற்குரியவன்(ள்)(ர்) யாரு மில்லை. ஒரே இறைவனை (அரபியில் அல்லாஹ்)த் தவிர, முஹம்மது அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என்று ஏற்று, குர்ஆனின் கோட்பாடுகள் படி வாழ்வை அமைத்துக் கொள்வது தான் முஸ்லிமாகுதல். முஸ்லிம் என்றால், இறைவனுக்குத் தன்னை அர்ப்பணித்தவ(ர்) கட்டுப்பட்டவர் என்று பொருள். இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்றுக்கொள்ள முடிவெடுத்துவிட்ட யாரையும் தடுக்க முடியாது. தடுக்கும் உரிமை முஸ்லிம்கள் உள்பட யாருக்கும் இல்லை.

"ஒன்றேகுலம், ஒருவனே தேவன்" என்ற தத்துவம் தமிழுக்கும், தமிழர்களுக்கும் புதியதல்ல. யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்" என்று நினைப்பதும் தமிழர்க் கொள்கைதான். அறியாமையில் உள்ள சில முஸ்லிம்களின் நடவடிக்கைகளை வைத்து, இஸ்லாத்தை மதிப்பிடாமல் நேரடியாக இஸ்லாம் மார்க்கத்தை ஆய்வு செய்யும் அறிஞர்கள் யாரும் அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வழியில்லை என்ற நிலைக்கே வந்துள்ளனர். இந்த சிந்தனைக்கு முன்னோடிகளாய் ஏராளமான அறிஞர்கள் உள்ளனர். கடவுள் மறுப்பில் கடைசி வரை உறுதியாக இருந்த தந்தை பெரியாரும், இனஇழிவு தீர இஸ்லாமே நன்மருந்து என்று பரிந்துரைத்துள்ளார்.

இந்தப் பரிந்துரையைப் பெரியாரின் குரலிலேயே கேட்க விரும்புபவர்கள்  கேளுங்கள்.  - மலேசியாவில் எம்.ஆர்.ராதா ஆற்றிய உரையையும் சேர்த்துக் கேளுங்கள்) முதலில் நாத்திகராக இருந்து பிறகு இஸ்லாத்தை ஏற்றுக்கொணடோர் ஏராளமானோர். இதற்கு அப்துல்லாஹ் அடியார் ஓர் உதாரணம்.

பெரியாரியல் தோழர்களும் இதில் அடக்கம். இஸ்லாத்தைத் தழுவிய பிறகும், பெரியார் இயக்கத்தில் செயல்பட்டதற்காக அவர்கள் வருந்தவில்லை. மாறாகப் பெருமையோடு நினைவு கூர்கின்றனர்.

முஸ்லிம்களிடையே புகுந்துள்ள சில மூடநம்பிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்த தந்தை பெரியாரும், இஸ்லாம் மார்க்கத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்ததில்லை.

தீய நடவடிக்கைகள் காரணமாகவோ, வேறு காரணத்திற்காகவோ ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறினால் அதன் காரணமாக இஸ்லாத்தின் மாண்பு எள்முனையளவும் குறைவ தில்லை. அதுபோல, எப்பேர்பட்டவர் இஸ்லாத்திற்குள் வந்தாலும், அதன் காரணமாக இஸ்லாத்திற்கு புதிதாக எந்த சிறப்பும் கூடுவதில்லை.

இஸ்லாம் என்பது விடுதலை மார்க்கம். அறியாமையிலிருந்து, சமூக ஒடுக்கு முறையிலிருந்து மன உளைச்சலிலிருந்து, விடுதலை பெற விரும்புவோருக்கு அது ஒரு வாழ்க்கைப்பாதை.

இஸ்லாம் மதம் மாற்றவில்லை. மாறாக விடுதலை செய்கிறது. (It is not the Conversion, But Liberation). எனவே, இஸ்லாத்தை தழு-வுவதென்பது பெரியாரியலுக்கும், பகுத்தறிவுக்கும் முரணானதில்லை. கடவுள் இல்லை என்பது தொடக்கம். அல்லாஹ் ஒருவனைத் தவிர என்பது அதன் தொடர்ச்சி. இறைமறுப்பாளர்கள் இஸ்லாத்தை  தழுவுவது கொள்கை பயணத்தின் தொடர்ச்சியே...
இறைநெறி தளத்தில் இஸ்லாத்தோடு கருத்துடன்பாடு இல்லையாயினும், சமூக தளத்தில் பெரியாரியல் தொழர்களோடு நமது நேசம், சுவாசம் போல என்றும் தொடரும்.

www.saharatamil.tkஇன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்