இன்றுடன் மூடப்படுகிறது ~ சஹாரா தமிழ்

ads

சனி, 17 ஏப்ரல், 2010

இன்றுடன் மூடப்படுகிறது

கடந்த 52 ஆண்டுகளாக அணு ஆயுதங்களுக்குத் தேவையான புளுட்டோனியத்தைத் தயாரித்து வந்த அணு உலையை இன்றுடன் ரஷ்யா இழுத்து மூடுகிறது. இதன்மூலம் புளுட்டோனியம் தயாரிக்கும் ரஷ்யாவின் கடைசி அணு உலையும் மூடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வொஷிங்டனில் நடந்த சர்வதேச அணு ஆயுத பாதுகாப்பு மாநாட்டில் இந்த முடிவை ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் அறிவித்தார்.

அணு ஆயுதம் வைத்துள்ள அனைத்து நாடுகளும் அதைக் குறைப்பதற்கும், புதிய அணு ஆயுத தயாரிப்பை கட்டுப்படுத்தவும், அணு ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், அவை தீவிரவாத அமைப்புகளிடம் சிக்கிவிடாமல் தடுப்பது குறித்தும் விவாதிக்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் முயற்சியால் வொஷிங்டனில் இந்த மாநாடு நடந்தது.

மாநாட்டில் சீனா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 47 நாடுகள் பங்கேற்றன.

இந் நிலையில், ரஷ்யாவின் பனி படர்ந்த சைபீரியா பகுதியில் உள்ள புளுட்டோனியம் தயாரிக்கும் அணு உலை இன்றுடன் (ஏப்ரல் 15) மூடப்படுவதாக ரஷ்ய அதிபர் மெத்வதேவ் அறிவித்துள்ளார்.

சைபீரியாவின் ரகசிய நகரான ஸெலெஸ்னோகோர்க்கில் உள்ள இந்த உலையில் புளுட்டோனியம் தயாரிப்பு கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதமே நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், அங்கு மின்சாரம் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், அந்த அணு உலையை மொத்தமாகவே மூடுவதாக அறிவித்தார்.

அமெரிக்கா-சோவியத் யூனியன் இடையே பனிப் போர் நடந்து வந்த காலகட்டத்தில் ரஷ்யாவில் 13 அணு உலைகளில் புளுட்டோனியம் தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால், சோவியத் யூனியன் உடைந்து சிதறிய பிறகு பெரும்பாலான உலைகள் புளுட்டோனிய தயாரிப்பை நிறுத்திவிட்டன. 2008ஆம் ஆண்டு அதில் பெரும்பாலானவை மூடப்பட்டுவிட்டன.

அதே போன்று, அமெரிக்காவில் 14 அணு உலைகளில் புளுட்டோனியம் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்தத் தயாரிப்பை சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவும் நிறுத்திவிட்டது.

அமெரிக்காவிடமும் ரஷ்யாவிடமும் இப்போது பல நூறு தொன் அளவுக்கு ஆயுத ரக புளுட்டோனியம் இருப்பில் உள்ளது. இதில் தலா 34தொன் புளுட்டோனியத்தை அழித்துவிடுவது என இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இதைக் கொண்டு 17,000 அணு குண்டுகள் தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 34 தொன் புளுட்டோனியத்தை அழிக்க சுமார் ரூ. 25,000 கோடி வரை செலவாகும். இதற்காக ரஷ்யாவுக்கு அமெரிக்கா ஓரளவு நிதியுதவியும் செய்ய முன் வந்துள்ளது.

உலகின் 90 சதவீத அணு ஆயுதங்களை வைத்துள்ள அமெரிக்காவும் ரஷ்யாவும் கடந்த வாரத்தில் இன்னொரு முக்கிய முடிவையும் எடுத்தன. அதன்படி இரு நாடுகளும் தலா 1,550 அணு குண்டுகளை ஒழித்துவிடுவது என்றும், அணு ஆயுதங்களுடன் தயார் நிலையில் உள்ள தலா 800 ஏவுகணைகளை செயலிழக்கச் செய்வது என்றும் முடிவு செய்துள்ளன.


இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்