மக்கள் சந்திப்பு; மகுடம் சூட்டுமா ஜெயலலிதாவுக்கு..? ~ சஹாரா தமிழ்

ads

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

மக்கள் சந்திப்பு; மகுடம் சூட்டுமா ஜெயலலிதாவுக்கு..?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiURVhtQt8oQPIRQIKFH03KH12mmjOCSF_Hb3X5X8NkGamzezAUInNEbcmqG3DiIIsmeGBMUxBfkJ3o4wQQCAXiaR1njckhHrgKQvChbs12vkewedcIHTb8P2zPkkdxK_98dpvLZ3NxW7-l/s400/Jayalalitha.jpg
அண்ணாதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. இவர் தமிழக அரசியலில் ஒரு இரும்பு பெண்மணியாக வர்ணிக்கப்படுபவர். அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரோடு நடித்து அவராலேயே அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் அதிமுகவில் இருந்த பழம் தின்று கொட்டை போட்ட தலைவர்களை பின்னுக்குத்தள்ளி, ஒரு அணிக்கு தலைமைஏற்று இவர் சந்தித்த முதல் தேர்தல் இவர்தான் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு என்று உறுதிப்படுத்தியதோடு, இவரை எதிர்கட்சித் தலைவராகவும் ஆக்கியது.

அடுத்துவந்த தேர்தல் இவருக்கு முதல்வராக மகுடம் சூட்டியது. தனி மெஜாரிட்டியுடன் முதல்வராக அமர்ந்தவர், மக்களை சந்திப்பதை மறந்து, மன்னார்குடி குடும்பத்தில் மறைந்து, ஒரு பொறுப்பற்ற ஆட்சி நடத்தியதன் விளைவாக அடுத்த தேர்தலில் அவரது கட்சி தோல்வியை தழுவ காரணமாக இருந்தார். இந்த தோல்வி தந்த படிப்பினையால் மீண்டும் இரண்டாவது முறை முதல்வரானபோது பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்து சென்றார். சட்டம் ஒழுங்கு விஷயத்தில் ஓரளவு நியாயத்துடன் நடந்தார். தவறு செய்தவர்கள் எவ்வளவு பெரிய'வாளாக' இருந்தாலும் நடவடிக்கை எடுத்தார். இருப்பினும் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் அரசு ஊழியர்கள் விஷயத்தில் காட்டிய கடுமை மற்றும் இன்னும் சில செயல்பாடுகள் அவருக்கு அடுத்த தோல்விக்கான அடித்தளம் அமைத்து அவரை மீட்டும் எதிர்கட்சித் தலைவராக்கியது.

அதோடு இடைப்பட்ட திமுக ஆட்சியில் இவர் மீது போடப்பட்ட ஊழல் வழக்குகள், மக்களை சந்திக்காமை, ஏன் அவரது கட்சியினரே அவரை 'பவுர்ணமி நிலவாக' பார்க்கும் நிலைமை. அவரது கட்சித் தலைமையகத்திற்கு வருவதே யாத்திரை போன்று என்றோ ஒரு நாள் என்று அமைத்துக் கொண்டது. போயஸ் தோட்டத்திலிருந்தும், கொடநாட்டில் இருந்ததும் வெறும் அறிக்கை அரசியல் நடத்தியது. சட்டமன்றத்திற்கு வந்து ஒரு பொறுப்பான எதிர்கட்சித் தலைவராக செயல்படாமை. சட்டமன்றத்தில் அவரது கட்சி உறுப்பினர்களின் அவசியமற்ற வெளிநடப்புகள்.

இவர் மற்றும் இவரது கட்சி உறுப்பினர்களில் பெரும்பாலோர் தொகுதிப்பக்கம் எட்டிப்பார்க்காதது. சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் பங்குகொள்ளாமல் புறக்கணித்தது. இதுபோன்ற பல பலவீனங்கள் ஜெயலலிதாவுக்கு தொடர் தோல்வியை தந்தது.

எம்.ஜி.ஆரின் காலத்தில் அவரது கோட்டையாக இருந்த தென் மாவட்டங்கள் திமுகவின் கோட்டையாக மாறும் சூழல் உருவானது. பிரதான முன்னணித் தலைவர்களின் திமுகவை நோக்கிய படையெடுப்பு ; அதோடு சட்டமன்றத்தேர்தல் நெருங்கிவருவது இவையாவும் ஜெயலலிதாவை, போயஸ் தோட்டத்தின் பெரும் கதவையும், அவரது மனக்கதவையும் ஒருங்கே திறந்து இதோ! மக்களை நாடி வந்துவிட்டார். முதல்வர் கருணாநிதியால் பலமாதங்கள் திட்டமிடப்பட்டு, பல்லாயிரம் கோடிகள் செலவு செய்யப்பட்டு, அரசு இயந்திரங்கள் முடிக்கிவிடப்பட்டு நடத்தப்பட்ட கோவை செம்மொழி மாநட்டில் கூடிய கூட்டத்தை விட, அதே கோவையில் குறுகிய நாள் ஏற்பாட்டில் பல மடங்கு அதிகமான கூட்டத்தை கூட்டி மக்கள் சக்தி தனக்கு இருப்பதாக நிரூபித்துள்ளார். அதே வேகத்தோடு திருச்சியையும் தினறச்செய்துள்ளார்.

அடுத்து மதுரையை மையம் கொள்ள நாடியுள்ளார். இவ்வாறாக தனது மக்களை நோக்கிய பயணத்தை பல மாவட்டத்திற்கும் விரிவு படுத்த உள்ளதாக அரசியல் வட்டார செய்திகள் கூறுகின்றன. இதுபோக கழக உறுப்பினர்களின் திருமணங்களை நடத்தி வைக்கிறார். ஜெயாவின் இந்த புதிய உக்தி, முதல்வரையும், திமுகவினரையும் சற்றே கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது. அதேநேரத்தில் ரத்தத்தின் ரத்தங்களுக்கோ புது உற்சாகம் பிறந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் ஜெயலலிதா, கூட்டணிக்கான அஸ்திரத்தை திமுக, பாஜக நீங்கலாக ஏனைய அரசியல் கட்சிகளை நோக்கி செலுத்தியுள்ளார். ஏற்கனவே மதிமுக அதிமுக அணியில் உள்ளது. கம்யூனிஸ்டுகள் அதிமுகவோடு நெருக்கமாக உள்ளது. புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி போன்றவைகள் புதிதாக இணைந்துள்ளன. பா.ம.க எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும்.

இதுமட்டுமன்றி திமுகவின் ஒரே ஆறுதலான காங்கிரசையும் இழுக்கும் வகையில்,தனது பேச்சுக்களில் 'கைக்கு' அழுத்தம் தந்து பேசுகிறார். ஆக பலம்வாய்ந்த கூட்டணி ஜெயலலிதா தலைமையில் அமைவதற்கான சாத்தியக் கூறுகள் பிரகாசமாக உள்ளன. ஆனாலும் இதுமட்டும் அவருக்கு மீண்டும் மகுடம் சூட்டிவிடுமா என்றால் இல்லை. இன்னும் அவர் செய்ய வேண்டியகள் உள்ளன. மனித நேய மக்கள கட்சி தனது கூட்டணிக்கு வந்துவிட்டதால் ஒட்டுமொத்த முஸ்லிம் வாக்குகளும் நமக்கு வந்துவிடும் என ஜெயலலிதா கருதிவிடக்கூடாது. பல தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ள முஸ்லிம்களின் வாக்குகளை பெற வேண்டுமெனில்,


  • சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அதிமுக என்ற முத்திரையை அகற்ற முயலவேண்டும்.
  • மதவாத பாஜகவோடு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒருபோதும் உறவு இல்லை என பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.
  • நான் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டின் சதவிகிதத்தை அதிகரிப்பேன் என கூறவேண்டும்.
  • தமது கூட்டணியில் உள்ள மமக உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகளுக்கு சீட்டுக்களை 'கிள்ளித்' தராமல் 'அள்ளித்' தரவேண்டும்.
  • முஸ்லிம் கட்சிகளை அவரவர் விரும்பும் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கவேண்டும்.
  • அதிமுக வேட்பாளர்களில் கணிசமானோர் முஸ்லிம் சமுதாயத்தவராக இருக்குமாறு ஆவன செய்யவேண்டும்.
  • ஆட்சி அமையும் நிலையில் அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்கவேண்டும்.
  • அதிமுக தலைமை நிர்வாகிகளில் முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்ட வேண்டும்.
  • மத்திய அளவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்திட அதிமுக எம்.பி.க்கள் குரல் கொடுக்கவேண்டும்.
இதுபோன்ற முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கைகளையும் ஜெயலலிதா கவனத்தில் கொள்வாராயின், அவர் மீண்டும் மகுடம் சூடும் வாய்ப்பு கிடைக்கலாம். ஜெயலலிதா கவனிப்பாரா..?
                                                                                                

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்