2 லட்சம் கோடி வக்ஃபு ஊழல் - வெடிக்கும் சர்ச்சை!! ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 12 ஏப்ரல், 2012

2 லட்சம் கோடி வக்ஃபு ஊழல் - வெடிக்கும் சர்ச்சை!!


http://joebuddejr.com/wp-content/uploads/2009/04/head-silhouette-with-question-mark.pngஅறப்பணிகளுக்காகவும், மக்கள் நலப் பணிகளுக்காகவும் நம் முன்னோர்கள் தங்களது திரண்ட சொத்துக்களை மக்களுக்காக அர்ப்பணித்தனர். பொதுநலப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட சொத்துக்களின் வாயிலாக நலப் பணிகளும், அறப்பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன என்றுதான் நாம் அனைவரும் நம்பி வந்தோம். ஆனால் நல்லவர்கள் நல்ல நோக்கத்திற்காக சமர்ப்பித்த சொத்துக்களைக்கூட ஆட்டையைப் போட்ட கொள்ளையர்கள் பற்றிய சம்பவங்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன.

இது இந்தியா முழுவதும் உள்ள நிலையாகும். இடையே அத்தி பூத்தாற்போல ஆற்றல்மிக்க செயல்வீரர்கள் வாரியத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்து சில மோசடிகளை அம்பலப்படுத்தி வக்ஃபு சொத்துக்களை மீட்கும் சம்பவமும் நடைபெறுகிறது. ஆயினும் சுரண்டும் கும்பல் தொடர்ந்து தங்களது மோசடிகளை அரங்கேறச் செய்வது இந்தியா முழுவதும் வாடிக்கையாகி வருகிறது. நமது அண்டை மாநிலமான பாஜக ஆளும் கர்நாடகாவில் இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவு வக்ஃபு வாரியத்தில் ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வக்ஃபு ஊழல் விவகாரம் பற்றி உள்ளே நுழையும் முன்பு பொதுவாக வக்ஃபு வாரியம் பற்றி சில பிரமிப்பூட்டும் தகவல்களைப் பார்க்கலாம். பரந்த இந்தியாவில் அதிக அளவு நிலங்களை சொந்தம் கொண்டதாக, திரண்ட சொத்துக்களைக் கொண்ட செல்வ வளம் பொருந்தியதாக இந்திய ரயில்வேத் துறை உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஏராளமான நிலங்களை தன்னகத்தே கொண்ட கொழுந்த பணக்காரத் துறையாக இந்திய ராணுவத் துறை விளங்குகிறது.

இவ்விரண்டு மெகா துறைகளுக்கும் அடுத்தபடியாக ஏராளமான பரப்பளவு கொண்டதாக நம் முன்னோர்களின் முஸ்லிம் கொடை வள்ளல்களின் நன்கொடையாம் வக்ஃபு வாரியம் விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. இவ்வளவு பிரம்மாண்ட சிறப்புமிக்க பின்னணி கொண்ட வக்ஃபு வாரிய சொத்துக்களில் கர்நாடக மாநிலத்தில் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை விடவும், முன்னாள் இஸ்ரோ அதிகாரிகள் மாதவன் நாயர் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்படும் 2 லட்சம் கோடி ரூபாய் ஊழலைப் போல கர்நாடக வக்ஃபு வாரிய ஊழலும் வரலாற்றின் கறுப்பு பக்கங்களில் இடம்பெறப் போகிறது.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல், முன்னாள் இஸ்ரோ உயர் அதிகாரிகளின் ஊழல் போன்றவை அகில இந்திய அளவில் பிரம்மாண்ட ஊழல்களாகவும், கடந்த வாரம் வெளியான 10 லட்சம் கோடி ரூபாய் நிலக்கரி வயல் ஒப்பந்த ஏல ஊழல் இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஊழலில் முதலிடம் பெற்றாலும், இரண்டு லட்சம் கோடி வக்ஃபு வாரிய ஊழல் ஒரு மாநில அளவில் மட்டுமே நிகழ்ந்துள்ளது.

இந்தியாவில் எத்தனை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உள்ளன? இவை அத்தனையிலும் உள்ள முறைகேடுகள் வெளிவந்தால் நினைக்கும் போதே மயக்கம் வருகிறது அல்லவா? இரண்டு லட்சம் கோடி வக்ஃபு நில ஊழல் குறித்து மாநில சிறுபான்மை ஆணையம் தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. அதுகுறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டு மென கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்கள் பிரச்சினையை எழுப்பினர். 




இதுகுறித்து உடனடியாக விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தபோது, இதற்கு பதிலளித்த கர்நாடக முதலமைச்சர் சதானந்த கவுடா, இந்தப் பிரச்சனை குறித்து தமது அரசு முழுமையாக ஆய்வு செய்தபின் அதனை சபையில் விவாதத்திற்கு வைத்து அதன்பிறகு அறிக்கை வெளியிடலாம் என்று கூறிய அவர், யார் யார் வக்ஃபு சொத்துக்களை ஆக்கிரமித்தார்களோ அவர்களிடமிருந்து சட்டப்பூர்வ முறையில் திரும்பப் பெறப்படும். வக்ஃபு நிலங்களைச் சுரண்டியவர்கள் தப்பிக்க முடியாது என்று கூறினார்.

கர்நாடக வக்ஃபு ஊழலின் மதிப்பு இரண்டு மாநில பட்ஜெட்டுக்கு சமமான நிதிநிலை அளவைக் கொண்டதாக இருக்கும் என்றும், அதில் சுருட்டப்பட்ட உண்மையான பண மதிப்பு உலகத்திற்கு தெரிய வேண்டுமானால் கர்நாடகா லோக் ஆயுக்தாவின் முன்னாள் தலைவர் சந்தோஷ் ஹெக்டே தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தால் மட்டுமே அரசியல் தலையீடு இன்றி உண்மைகள் வெளிவரும் என மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சமீர் அஹ்மதுகான் கூறினார்.

ஊழல் பற்றிய சர்ச்சைகள் வெளிவரத் தொடங்கிய உடன் கர்நாடக மாநில சிறுபான்மை ஆணைய சேர்மன் அன்வர் மனிப்பாடி தலைமையில் ஒரு குழுவை கர்நாடக ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் அமைத்தார். அந்தக்குழு தனது 7000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதலமைச்சர் சதானந்த கவுடா முன்னிலையில் சமர்ப்பித்தது. இந்தக்குழு 1954ஆம் ஆண்டில் இருந்து கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்த வக்ஃபு நில பேர ஊழல் குறித்து விசாரணை செய்தது. 1954ல் இருந்து வக்ஃபு முறைகேடுகளை விசாரித்தால் பெரும்பாலான காங்கிரஸ் திமிங்கிலங்கள் இதில் சிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கர்நாடக வக்ஃபு ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என காங்கிரஸ் பெரும் தலைகள் கோரிக்கை வைத்துள்ளன.

கர்நாடக மாநிலத்தை இதுவரை சுரண்டிய ஸாரி, ஆண்ட கட்சிகளில் காங்கிரஸை அடுத்து தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த புண்ணியவான்கள் முக்கிய இடம் பிடிக்கின்றனர். சிபிஐ காங்கிரஸின் கதர்சட்டை அணிந்து சோனியா காந்திக்கு ஜே என கோஷம் போட்டு செயல்பட்டு வருவதாக பல ஆண்டுகளாக சர்ச்சைகள் வெளிவந்த நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தினர் கோரிக்கையின்படி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்தால் நீதி நிலைநாட்டப்படும் என ஓரளவு நாம் நம்பலாம்.

45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கறைபடியா(?) கரத்துக்குச் சொந்தக்காரரான திருவாளர் எடியூரப்பாவை வீட்டிற்கும், சிறைக்கும் அனுப்பிய சந்தோஷ் ஹெக்டேவின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தால்தான் உண்மை வெளியாகும் என உறுதிபட கருத்துக்கள் பரவத் தொடங்கியுள்ள நிலையில் கர்நாடக பாஜக அரசு அமைத்துள்ள மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் அன்வர் மனிப்பாடி கமிட்டி அறிக்கையினை நாம் பார்த்தோமேயானால் 54 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கர்நாடக வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமானவை என பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் 22 ஆயிரம் ஏக்கரில் இருந்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வரை சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளதால் அன்வர் மனிப்பாடி கமிட்டி கூறுகிறது. அதிலும் குறிப்பாக சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு உள்ளான நிலங்களில் நிதி மதிப்பில் 85 சதவீதம் உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் மாநகரமான பெங்களூருவில் நில ஆக்கிரமிப்புக்கு இலக்காகி உள்ளதாம்.

கர்நாடக வக்ஃபு வாரியத்தின¢ நிலங்களின் மொத்த மதிப்பு 4 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதில் மிக அதிக அளவு முறைகேடுகள் 2001ஆம் ஆண்டில் இருந்து 2012ஆம் ஆண்டு வரை நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஏராளமான வக்ஃபு நிலங்கள் இந்த காலக்கட்டங்களில் சந்தடியின்றி தனியார்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டன. முறையான விசாரணை செய்து நடவடிக்கைகளை கடுமையாக்கினால் அனைத்தும் வெளிவரும் என அன்வர் மனிப்பாடி கமிட்டி அறிக்கை கூறுகிறது. ஏராளமான அரசியல்வாதிகளும், இடைத்தர கர்களும், ரியல் எஸ்டேட் தாதாக்களும் இதன் பின்னணியில் உள்ளதாக அன்வர் கூறுகிறார்.

மெகா ஊழலில் 38 பேர் குற்றவாளிகளின் பெயர்களைக் குறிப்பிட மறுத்துவிட்ட அன்வர் மனிப்பாடி, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த 38 பேர் இந்த மெகா ஊழலில் தொடர்புடையவர்கள் என தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அகில இந்திய தலைவர்கள், ராஜ்யசபா உறுப்பினர்கள், வக்ஃபு வாரிய முன்னாள் இன்னாள் உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளதாக அன்வர் கமிட்டி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமற்ற முறையில் செய்திகள் வெளியே கசிந்து பழம்பெருச்சாளி அரசியல் வாதிகளின் முகத்திரையைக் கிழிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி 38 முக்கிய அரசியல் புள்ளிகளின் பெயர்கள் வெளிவந்துள்ளன. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான ரோஷன் பெய்க், என்.ஏ.ஹாரிஸ், தன்வீர் சேத், கமருல் இஸ்லாம் ஆகியோரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சமீர் அஹ்மத்கான், முன்னாள் மத்திய அமைச்சர் சி.எம்.இப்ராஹிம், கர்நாடக முன்னாள் வக்ஃபு வாரிய அமைச்சர் ஹிந்தா ஷேஹ்ரி, முன்னாள் அமைச்சர் இக்பால் அன்சாரி ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

திசை திருப்பும் முயற்சியா? கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே முதல் அமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அரசின் மீது ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டு அந்தப் புகார்களின் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவரும் நிலையில் பிரச்சனைகளை திசைதிருப்புவதற்காக மதவாத பாஜக அரசு இதன் பின்னணியில் சதி செய்வதற்காக தனது அரசின் சிறுபான்மை நலத்துறையை ஏன் பயன்படுத்தி இருக்கக்கூடாது? முஸ்லிம்களையும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தையும் களங்கப்படுத்தச் செய்யும் முயற்சியாகக்கூட இது இருக்கலாம் அல்லவா? என்ற வாதம் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள அரசியல்வாதிகளால் எழுப்பப்படுகிறது. அவர்களது வாதங்கள் புறக்கணிக்கக்கூடிய ஒன்றல்ல, எனினும் வக்ஃபு சொத்துக்களில் கணிசமானவை நாடு முழுவதும் ஆக்கிரமிப்பு சக்திகளால் கபளீகரம் செய்யப்படுவது மறுக்க முடியாத உண்மை அல்லவா?

இரண்டையுமே தெளிவுபடுத்த தேவை முறையான, விரைவான, நீதியான விசாரணை.

www,TMMK.in

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்