J. S. ரிபாயி (தலைவர், தமுமுக)
28/04/2012
பெறுநர்:
ஆசிரியர் தினத்தந்தி சென்னை
அன்புடையீர், தங்கள் பணி சிறக்க பிராத்திக்கிறோம்.
எளிய தமிழர்களின் இனிய குரலாக வெளிவரும் தினத்தந்தி குடும்பத்துக்கும், எமக்கும் இடையில் ஆழமான உறவு உண்டு. அய்யா. ஆதித்தனார் காலம் தொட்டே அது பிரிக்க முடியாத பெரும் உறவாக வளர்ந்து வருகிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களும், தலித் மக்களும், பலகீனமான சிறுபான்மை சமூக மக்களும் தங்களின் தினசரி பொது அறிவை வளர்க்கும் அறிவுக்கண்ணாடியாக தினத்தந்தியை பார்க்கிறார்கள்.
தினத்தந்தியின் சிறப்பே, அது யாரையும் காயப்படுத்தாத அறிவாயுதம் என்பதுதான்.
இந்நிலையில், ஏப்ரல் 28-2012 அன்று தினத்தந்தியில் வெளியான தலையங்கம் எமக்கு அதிர்ச்சியை அளித்தது.
இந்தியாவில் வாழும் 20 கோடி இந்திய முஸ்லிம்களையும், ஏனைய சிறுபான்மையினரையும் காயப்படுத்தும் வகையில் சில வாசகங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் எழுதப்பட்டுள்ளது வருத்ததிற்குரியது. நமது தினத்தந்தி பத்திரிக்கையிலா இப்படி? என ஒரு கனம் திகைக்க வேண்டி வந்தது.
அது குறித்து சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறோம்.
இந்திய முஸ்லிம்களில் 99 சதவீதம் பேர் இந்த மண்ணின் புதல்வர்கள். அவர்கள் வேறு தேசங்களிலிருந்து வந்தவர்கள் அல்லர். சமூக நீதியையும், மனித உரிமைகளையும், சமத்துவத்தையும் பெற வேண்டி இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றவர்கள். அவர்கள் இந்தியாவில் பெறும் சில சலுகைகள் என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையாகும். அரசு வழங்கும் சலுகைகளில் 50 சதவீதம் கூட அவர்கள் முழுமையாக பெற முடியவில்லை என்பதை அரசு புள்ளி விவரமே கூறுகிறது. முஸ்லிம்கள் கல்வி வேலைவாய்ப்புகளில் - இடஒதுக்கீட்டில் கூட தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமே அனுபவிக்கிறார்கள். அவர்களது வாழ்வு நிலை தலித்துகளின் நிலைகளை விட மோசமாக இருப்பதாக மத்திய அரசு நியமித்த நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை தெளிவாக அறிவிக்கிறது.
தங்களுக்கு கிடைக்கும் உரிமைகள், சலுகைகளை விட இம்மண்ணில் வாழும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களோடும் அமைதியோடும், நல்லிணக்கத்தோடும் வாழ்வதையே பேரின்பமாக கருதுகிறார்கள்.
இந்நிலையில் பாகிஸ்தானில் வாழும் எமது தொப்புள் கொடி உறவான சிறுபான்மை இந்துக்கள் சந்திக்கும் இன்னல்களை குறித்து அத்தலையங்கம் கவலை தெரிவித்தது நியாயமே. அதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.
சிறுபான்மை சமூகங்கள் எங்கு, எந்த நாட்டில் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பதே எமது நிலைபாடாகும். இந்தியாவில் முஸ்லிம்கள், இலங்கையில் தமிழர்கள், பாகிஸ்தானில் இந்துக்கள், எகிப்தில் கிறிஸ்தவர்கள் என உலகமெங்கும் வாழும் சிறுபான்மையினர் எமது சொந்தங்கள் ஆவார்கள். அவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் துடைக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலையாகும்.
பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரின் பாதுகாப்பும், வழிபாட்டு உரிமைகளும், வாழ்வுரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்ற அந்நாட்டின் உச்சநீதிமன்ற கருத்தை நாங்களும் உறுதியாக வழிமொழிகிறோம். அது அவர்களது உரிமைகளாகும்.
ஆனால், அவர்களின் உரிமைக்காக பரிந்து பேசுகிறோம் என்ற பெயரில் இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்கள் அரைகுறையாக அனுபவிக்கும் சில சலுகைகளையும், நியாயமான உரிமைகளையும் கோடிட்டு காட்டி தலையங்கம் வரைவது ஆரோக்கியமான ஒன்றா? என்பதை நடுநிலை நாளேடான எமது தினத்தந்தி குடும்பத்தாரின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறோம்.
பாகிஸ்தான் ஒரு மதச்சார்புள்ள நாடு. ஆனால் இந்தியா ஒரு மதச்சார்பற்ற உயரிய நாடு. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.
1992 டிசம்பர் 6 ஆம் நாளில் இந்தியாவில் பாபர் மசூதி தகர்க்கப்பட்டபோது, அதன் எதிரொலியாக பாகிஸ்தானில் உள்ள மதவெறியர்கள் சிறுபான்மை இந்துக்களின் கோயில்களை சேதப்படுத்தினார்கள்.
ஆனால், பாகிஸ்தான் அரசு இடிக்கப்பட்ட கோயில்களை புனரமைத்து பாஜக தலைவர் அத்வானியை அழைத்து திறந்து வைத்ததை உலகம் அறியும். ஆனால் பாபர் மசூதியை 100 நாட்களில் மீண்டும் கட்டித்தருகிறோம் என்று அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அறிவித்தது என்னவாயிற்று என்பதும் நமக்கு தெரியும்!
இறுதியாக ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந்தியா-பாகிஸ்தான் என்ற இரு நாடுகள் சில சுயநல அரசியல்வாதிகளால் கூறுபோடப்பட்டபோது, பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்ற முஹம்மது அலி ஜின்னா, இந்திய முஸ்லிம்களின் தலைவராக திகழ்ந்த காயிதே மில்லத்திடம் “உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்” என கேட்டபோது, “எங்களுக்கு நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கொடுங்கள், அதுபோதும்” என்றார். இது வரலாற்று ஆதாரம்.
அதுவே எமது நிலையாகும். இதை எமது உறவுக்கார நாளேடான தினத்தந்தி ஆசிரியர் குழுவுக்கும் நினைவூட்டுகிறோம்.
இப்படி ஒரு தலையங்கம் கவனக்குறையாக கூட எழுதப்பட்டிருக்கலாம். ஒரு மருத்துவர் கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்வது எவ்வளவு ஆபத்து என்பதை எப்படி உணர்ந்திருக்க வேண்டுமோ அதே போன்ற பொறுப்பு பத்திரிக்கை சகோதரர்களுக்கும் உண்டல்லவோ? நீங்கள்தானே ஜனநாயகத்தின் விழிகளாகவும், செவிகளாகவும் இருக்கிறீர்கள். அந்த உரிமையால்தான் இதை சுட்டிக்காட்டுகிறோம்.
அதே நேரம் இந்த ஒன்றினால் நமது உறவு பாதிக்காது. பாதிக்கவும் விடக்கூடாது. அப்பொறுப்பு உணர்வு நம் அனைவருக்கும் உண்டு என்பதை ஒருவருக்கொருவர் உரிமையோடு புரிந்து கொள்வோம்.
நன்றி,
தோழமையுடன்,
J.S. ரிபாயி
ஞாயிறு, 29 ஏப்ரல், 2012
தினத்தந்தியில் இந்திய முஸ்லிம்களையும்,சிறுபான்மையினரையும் காயப்படுத்தும் சில வாசகங்கள்!
7:07 PM
தமுமுக, மமக, மனிதநேய மக்கள் கட்சி