''எங்களின் அன்பு மகன் பிரிவிற்கு பின்னர் எங்களுக்கு ஆதரவாக யாரும் இல்லை. நாங்கள் ஆதரவற்ற நிலையில் பணம் இல்லாமல் நீதி இல்லாமல் உறக்கம் இல்லாமல் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்தோம். எனவே நாங்கள் தூக்குபோட்டு எங்கள் வாழ்க்கையை முடித்து கொள்கிறோம்'' என்று பிரதீபா காவேரி கப்பலில் பணியாற்றி உயிரிழந்த என்ஜினீயர் நிரஞ்சனின் பெற்றோர் இவ்வாறு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தை தாக்கிய நிலம் புயலில் சிக்கிய பிரதீபா காவேரி என்ற சரக்கு கப்பல் சென்னை மெரீனா கடற்கரையில் தரை தட்டியது. இந்த கப்பலில் இருந்த அரக்கோணத்தை சேர்ந்த என்ஜினீயர் நிரஞ்சன் (24) பரிதாபமாக இறந்தார். நிரஞ்சனின் தந்தை கோதண்டபாணி (59), தாய் பாரதி (50), இருவரும் வேலூர் மாவட்டம் அரக்கோணம் புளியமங்கலம் ஸ்ரீராம்நகரில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நிரஞ்சனின் பெற்றோர்கள் வீடு இன்று காலை நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் பார்த்த போது கோதண்டபாணி, பாரதி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வீட்டில் இருந்த 3 கடிதங்களை போலீசார் கைப்பற்றினர். அதில், நிரஞ்சனின் தந்தை கோதண்டபாணி தனது கைப்பட அரக்கோணம் போலீஸ் இன்ஸ்பெக்டர், சென்னை நீதிபதி, உடல் உறுப்புதான பிரிவுக்கு என 3 கடிதங்களை எழுதியுள்ளார்.
அரக்கோணம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இன்று எங்கள் 28வது திருமண நாள் இன்றே எங்கள் கடைசி நாள் ஏன் என்றால் எங்கள் மகன் நிரஞ்சன் பிரதீபா கப்பலில் 31.10.2012 அன்று கப்பல் கேப்டனின் அஜாக்கிரதையால் இறந்தான். அந்த கப்பலில் 17 மாலுமிகள் படகு மூலம் வெளியேறினார்கள். கடலில் தத்தளித்த அவர்களை காப்பாற்ற யாரும் இல்லை. அதன்பின் அங்கு இருந்த மீனவர்கள் காப்பாற்ற முயன்றனர். முதலில் மறுத்த மீனவர்கள் சிறிது நேரத்திற்கு பிறகு 17 பேரை காப்பாற்றினர். என் மகனுடன் சேர்ந்து 5 பேர் மற்றொரு சிறிய படகில் வெளியேறினர். அந்த படகு புயலினால் கடலில் கவிழ்ந்தது.
இந்த நிகழ்ச்சி பகலில் நடந்து உள்ளது. இந்த சம்பவத்தை கப்பலின் கேப்டனும் பார்த்து உள்ளார். அதன் பின்னர் தான் போலீசார் கடலோர பாதுகாப்பு படையினர் வந்தனர். நீலம் புயல் பற்றி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் மிகப் பெரிய சேதாரம் இல்லை என அதிகாரிகள் கூறி விட்டனர். யாரும் இந்த விபத்தை பெரியதாக நினைத்து நடவடிக்கை எடுக்கவில்லை.
சென்னை போலீசார் இந்த துயர சம்பவத்திற்கு காரணமாக யாரையும் இதுவரை கைது செய்யவில்லை. நாங்கள் ஆதரவற்ற நிலையில் பணம் இல்லாமல் நீதி இல்லாமல் உறக்கம் இல்லாமல் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்தோம். எங்களின் அன்பு மகன் பிரிவிற்கு பின்னர் எங்களுக்கு ஆதரவாக யாரும் இல்லை. எனவே நாங்கள் தூக்குபோட்டு எங்கள் வாழ்க்கையை முடித்து கொள்கிறோம். எங்கள் இறப்புக்கு பிறகு எங்கள் உடலில் எந்த எந்த உறுப்பு மற்றவர்களுக்கு பயன்படுமோ அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். இந்த கடிதத்தை எங்கள் முழு சுயஉணர்வுடன் எழுதுகிறோம் என்று எழுதியுள்ளார்.
சென்னை நீதிபதிகளுக்கு எழுதிய கடிதத்தில், நான் சிறு விவசாயாக கஷ்டபட்டு முன்னேறி உள்ளேன். எனது 24 வயது மகன் நிரஞ்சனுக்கு நல்ல கல்வியை அளித்தேன். எந்த வங்கியும் கல்வி கடன் அளிக்கவில்லை. பல லட்சங்களை செலவு செய்து அவரை மாலுமியாக உருவாக்கினேன். சரத்பவார் உறவினருக்கு சொந்தமான பிரதீபா காவேரி கப்பலில் வேலைக்கு சேர்ந்தார். வேலைக்கு சேர்ந்து கப்பலில் செல்லும் போது செல்போனில் என்னுடன் பேசினார். அப்போது கப்பலில் உணவு மற்றும் அடிப்படை வசதி இல்லை என்று கூறினார். கப்பல் உடைந்து செயல்அற்ற நிலையில் இருந்ததாக கூறினார்.
கப்பல் வேலையை விட்டு வேறு வேலை தேடும்படி கூறினேன். அதற்கு அவர் 6 மாதம் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதால் பின்னர் வேறு வேலை தேடி கொள்வதாக கூறினார். விபத்தின் போது கடைசியாக என்னுடன் பேசும் போது புயலில் கப்பல் சிக்கி கொண்டது. இதனால் கப்பலில் பல பாகங்கள் உடைந்து வருகிறது. என கோபமாக பேசியபடி செல்போன் தொடர்பை துண்டித்தான்.
அதன் பின்னர் தொலைக்காட்சியில் அந்த கப்பலை பார்த்தேன். அதன்பின்னர் மீண்டும் என் மகன் பேசினான். அப்போது கப்பல் தரை தட்டியதாக கூறினார். ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதாகவும் விரைந்து வீடு, திரும்புவதாக கூறினார். கடலோர பாதுகாப்பு படைக்கு தகவல் அளித்து உள்ளோம் யாரும் இதுவரை காப்பாற்ற வரவில்லை என்று கூறிய என் மகன் அதன் பின் வீடு திரும்பவில்லை. இந்த சம்பவத்தில் யாரும் கைது செய்யபடவில்லை. நீதியை கோர்டிடமோ அளித்து உள்ளோம். இந்த நிலை கப்பலில் பணியாற்றும் யாருக்கும் வரக்கூடாது என்று கூறியுள்ளனர்.
வெள்ளி, 22 பிப்ரவரி, 2013
பிரதீபா காவேரி கப்பலில் பலியான நிரஞ்சனின் பெற்றோர் தூக்குப்போட்டு தற்கொலை...!
2:48 PM
தற்கொலை