இலங்கை விவகாரம்: இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்ப தமிழக கட்சிகள் முடிவு! ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 21 பிப்ரவரி, 2013

இலங்கை விவகாரம்: இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்ப தமிழக கட்சிகள் முடிவு!

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcR1KcXAQMZRrsw5izxi8GVw3hix1zjd3FO7OWHjfbVBXEFo90zX
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று இன்று ஆரம்பமாகவுள்ள இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரச்சினை எழுப்ப திமுக, அதிமுக, இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இந்திய நாடாளுமன்றத்தில் திமுக எழுப்ப திட்டமிட்டுள்ள பிரச்சினைகள் குறித்து அந்தக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியிடம் கேட்டபோது,

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் அல்லது இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.

அதிமுக நிலையை விளக்கி அக்கட்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த உறுப்பினர் ஒருவர் கூறுகையில்,

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கொண்டு வர வேண்டும். இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினை, தமிழகத்துக்குச் சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்துவர் என்றார்.

இதற்கிடையே, இலங்கை அரசு மீது சர்வதேச போர்க்குற்ற விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கொண்டு வர உள்ள தீர்மானம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை மாநிலங்களவை அ.தி.மு.க. கட்சித் தலைவர் டாக்டர் வா.மைத்ரேயன் கொடுத்துள்ளார்.

மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கூறுகையில்,  சர்வதேச விசாரணைக்கு இலங்கையை உள்படுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும்' என்றார்.

பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும் வகையில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை இந்தியா கொண்டு வர வேண்டும். காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அரசிதழில் வெளியாகியுள்ளதால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.லிங்கம் கூறினார்.

நாடாளுமன்றத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் முழக்கம்.

பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, நாடாளுமன்றத்தில் இன்று திமுக, அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை கூடியதும், இரு அவைகளும் அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.

அவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே, தமிழகத்தைச் சேர்ந்த திமுக, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷம் எழுப்பத் தொடக்கினர்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன பாலச்சந்திரன், இலங்கை இராணுவத்தால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், இலங்கை அரசுக்கு எதிர்ப்பும் தெரிவித்தும் திமுக, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அவர்களை இருக்கையில் அமருமாறு மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சுக்லா மற்றும் நாராயணசாமி ஆகியோர் வலியுறுத்தினர். எனினும், எவ்வித இடையூறும் இன்றி பிரணாப் தனது உரையை தொடர்ந்தார்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்