திரைப்படங்களுக்கு வரி விதிக்கவேண்டும்: ம.ம.க. கோரிக்கை ~ சஹாரா தமிழ்

ads

புதன், 10 ஏப்ரல், 2013

திரைப்படங்களுக்கு வரி விதிக்கவேண்டும்: ம.ம.க. கோரிக்கை




காரைக்கால்: புதுச்சேரி அரசின் நிதி நெருக்கடியை சமாளிக்க தமிழ் திரைப்படங்களுக்கு வரி விதிக்கவேண்டும் என காரைக்கால் மாவட்ட மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலர் நெய்னா முஹம்மது புதுச்சேரி முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: "புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி அகிய இருவருக்கும் இடையே, யார் பெரியவர் என நடக்கும் பிரச்சனையால், அரசு கடும் நிதி நெடுக்கடியில் சிக்கி தவிக்கிறது. கடந்த சில மாதங்களாக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட நிதியில்லை. அவர்களின் சேமிப்பு பணத்தை எடுக்க கூட முடியவில்லை.

இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட நான்கு மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டமன்றத்தில் அரசு நிறைவேற்றியது. அந்த நான்கு மாதங்களுக்கான பட்ஜெட்டை நிறைவேற்றவேண்டி, பொதுப்பணித்துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் மக்களுக்கு தேவையான கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளையும், மக்களுக்கு வழங்கவேண்டி பல்வேறு அரசு துறைகளுக்கு கொடுக்கப்பட்ட கோடிக்கணக்கான நிதிகளையும் திரும்ப பெற்றுள்ள செயல் கடும் கண்டனத்திற்குரியது.

புதுச்சேரியில் நிலவும் நிதி நெருக்கடியை சமாளிக்க, வீட்டுவரி, மின்சார வரி, நிலங்களுக்கான மதிப்பு கூட்டு வரி, பஸ், பால் கட்டணம் என அனைத்து வரியையும் உயர்த்திய அரசு, பணக்காரர்கள் கையில் உள்ள பெட்ரோல் பங்க் வரியை இதுநாள் வரை வசூல் செய்யவில்லை. அதுமட்டுமின்றி, தமிழகத்தோடு போட்டி போடும் வகையில், அவர்களை பின்தொடர்ந்து, தமிழ் திரைப்படங்களுக்கு புதுச்சேரி அரசு தொடர்ந்து வரி விலக்கு அளித்து வருவது தேவையற்ற ஒன்று. எனவே, புதுச்சேரி மாநிலமெங்கும் ஓடும் தமிழ் திரைப்படங்களூக்கு முறையான வரி விதிக்கவேண்டும். மேலும், புதுச்சேரியில் எடுக்கப்படும் தமிழ்திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்களுக்கு குறிப்பிட்ட வரி விதிக்கவும் முன்வரவேண்டும்".

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்