புதுடெல்லி: இஷ்ரத் ஜஹான் படுகொலையில் அதிகாரிகளுக்கிடையே நடைபெற்ற உரையாடல் ஆடியோ டேப் உண்மையானது என சி.பி.ஐ கூறியுள்ளது.
இதன் அடிப்படையில் மேலும் பல அதிகாரிகள் சிக்குவார்கள் என சி.பிஐ தெரிவித்துள்ளது.
கடந்த 2004-ஆம் ஆண்டு கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உட்பட நான்கு அப்பாவிகள் குஜராத்தில் காவல்துறை அதிகாரிகளால் வேண்டுமென்றே நடத்தப்பட்ட போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இது போலி என்கவுண்டர் தான் என்று உறுதி செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளைக் காப்பாற்றுவதற்காக குஜராத் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வெளிப்படையாகவே கலந்துரையாடியுள்ளனர். இந்த உரையாடல்கள் ரகசியமாக பதிவு செய்யப்பட்டது.
இந்த உரையாடல்கள் அடங்கிய டேப்புகள் குறித்த ஆய்வில் இவை உண்மையானவை தான் என சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த டேப்புகள் அஹ்மதாபாத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இவை நீதிமன்றத்தால் சட்டப்படி ஏற்றுக் கொள்ளத்தக்க சாட்சியமாக இருக்கும் என்றும் நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் இந்த டேப்புகளில் உள்ள குரல் மாதிரிகள் ஒப்பிட்டுப் பார்க்கப்படும் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் மேலும் பல ஐ.பி அதிகாரிகள் இவ்வழக்கில் சிக்குவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.