கூத்தநல்லூரில் நடைபெற்ற த மு மு க நிர்வாகி கொலை.
அவசியம் படியுங்கள்....
வக்பு வாரியமா? த.மு.மு.க கிளை அலுவலகமா?
( ஏவி.எம். ஜாபர்தீன் )
( கௌரவ ஆசிரியர், சமநிலைச் சமுதாயம் )
சகோதரர் ஹைதர் அலி வக்பு வாரியத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டபோது ஒரு திறமையாளர் தலைமையில் வக்பு போர்டு என்ற ஊழல் மகா சமுத்திரம் புனித மடைந்து விடும். என்று மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன்.
ஆனால், அண்மையில் பள்ளிவாசல் நிர்வாகங்களில் வக்பு வாரியத்தின் தலையீட்டால் பல பள்ளிவாசல்கள் நிர்வாகக் கமிட்டி இன்று வக்பு வாரிய அதிகாரிகள் வசம் சென்று விட்டன. அவற்றில் கூத்தாநல்லூரில் உள்ள இரு பள்ளிவாசல்களில் நடைபெற்று வரும் அராஜகத்தை இங்கு முன்வைக்கின்றேன்.
கூத்தாநல்லூரில் பெரிய பள்ளிவாசல் என்பது அந்த மஹல்லா மக்கள் தொழுகைக்கு மட்டுமல்லாது அந்த ஊரின் முக்கிய நிர்வாகங்களையும் கவனித்து வந்தது.
திருமணத்திற்கான அனுமதி திருமணப்பதிவு, மரணப்பதிவு, விவாகரத்து மற்றும் விவாகரத்துக்கான நஷ்ட ஈடு ஆகியவைகளை பெரிய பள்ளிவாசலின் நிர்வாகம் கவனித்து வந்தது. 14 பள்ளிவாசல் களைக் கொண்ட அந்த ஊருக்கு பெரிய பள்ளிவாசல்தான் தலைமை நிலையமாகச் செயல்பட்டது.
சுமார் 30 வருடங்களுக்கு முன் பெரிய பள்ளிவாசலில் வேலை செய்து வந்த சிப்பந்திகளில் ஒருவர் கையாடல் செய்தார். என்ற காரணத்தைக் காட்டி வக்பு வாரியம் அப்பள்ளிவாசல் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டது.
அதன் பிறகு ஜனாப் ஏ.ஜே. அப்துல் ரசாக் தலைவராக இருந்தபோது 1978 இல் நிர்வாகத்தை உள்ளூர் ஜமாஅத்திடம் ஒப்படைக்கும் வண்ணம் 7 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை நியமித்து 7 பேர் கொண்ட குழு 15 பேராக முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டத் திட்டங்களையும் வகுத்தனர்.
அதன் பிறகு வக்பு போர்ட் தலைவராக வந்த அப்துல் லத்தீப் நிர்வாகம் சிறப்புற நடைபெறுவதால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவை மேலும் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு இருமுறை நீட்டித்தார். இரண்டாவது மூன்றாண்டுகள் முடியும்போது அப்துல் லத்தீப் வக்பு வாரியத்தலைவர் பதவியை விட்டு விலகினார்.
அப்போது இடைக்காலத்திற்கு இசைமுரசு நாகூர் அனீபாவை தமிழக அரசு வக்பு வாரியத் தலைவராக நியமித்தது. அவரது பதவி காலத்தில் மீண்டும் 3 ஆண்டுகள் பதவி கால நீட்டிப்புக்காக நிர்வாகக் குழுத் தலைவரும் நானும் அவரைச் சந்தித்தோம். 3 ஆண்டுகளுக்குப் பதிலாக அவர் முறைப்படி வாரியத்தைக் கூட்டி 5 ஆண்டுகள் நீட்டிப்புச் செய்து தந்தார். காரணம் நிர்வாகத்தில் எந்த முறைகேடும் இல்லாதபோது அனாவசியமாக மாறுதல் செய்ய வேண்டியதில்லை. என்று முடிவெடுத்தார்.
முன்பே கூறினேன், வாரியம் ஒரு ஊழல் மகா சமுத்திரம் என்று நாகூர் அனீபா அவர்கள் பதவி விலகும் சமயத்தில் அவர் அறியாமலேயே அவரிடம் ஒரு கடிதம் கையெழுத்து வாங்கப்பட்டது. அதில் 5 ஆண்டுகள் நீட்டிப்பை மறுபரிசீலனை செய்யவிருப்பதாக அறிவித்திருந்தார். இதனை பெரிய பள்ளி நிர்வாகஸ்தர்கள் நீதி மன்றத்திற்கு எடுத்துச் சென்றனர். உயர் நீதிமன்றம் நிர்வாகத்திற்கு சாதகமாக தீர்ப்பளித்தது. ட்ரிப்யூனல் மூலம் ஏனைய விவகாரங்களைத் தீர்த்துக் கொள்ள உத்தரவிட்டது. வக்பு வாரியத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
நாகப்பட்டினத்தில் உள்ள ட்ரிப்யூனல் உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்து ஐந்து ஆண்டுகள் வரை தற்போதைய நிர்வாகம் எவ்வித இடையூறும் இன்றி தொடரலாம். ஐந்து ஆண்டுகள் முடிந்தவுடன் பள்ளிவாசல் சட்ட விதிகளுக்குட்பட்டு உறவின் முறை ஜமாஅத்தாரிலிருந்து புதிய நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். என்று தீர்ப்பளித்தது.
மாநில ஆட்சி மாறியது. திருமதி பத்ர் சயீத் வக்பு வாரியத் தலைவராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். சட்ட வல்லுனரான இவர் காலத்தில் பிரச்சினைகள் அதிகம் இல்லை என்றாலும் ஊழல் மகா சமுத்திரத்தை மாற்றி அமைக்கப் பெரும் போராட்டம் நடத்தினார். அலுவலர்களை நம்பாமல் முக்கியமான ஆவணங்களை தன்னுடனே வீட்டிற்கே எடுத்து வந்துவிடுவார்
திருமதி பத்ர் சயீத் இருந்தபோது தானே முன்னின்று தேர்தலை நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வசம் பள்ளிவாசல் நிர்வாகத்தை ஒப்படைப்பதாக உறுதி கூறினார். ஆனால் அவர் காலத்தில் ஏதும் முடியவில்லை. பிறகு புதிய தலைவராக ஹைதர் அலி பதவி ஏற்றார்.
நாகப்பட்டினம் ட்ரிப்யூனல் அளித்த தீர்ப்பை எதிர்த்து கூத்தா நல்லூரில் உள்ள சில விஷமிகள் தூண்டுதலால் வக்பு வாரியம் ‘ஸ்டே; வாங்கியது. ;ஸ்டே; வாங்கியவுடனேயே நிர்வாக அதிகாரி ஒருவர் அடாவடியாக பள்ளிவாசலினுள் புகுந்து அங்கிருந்த சிப்பந்திகளை மிரட்டி அலுவலகச் சாவி, வங்கி செக்குகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டனர். இது முறையாக பதவி வகித்து வரும் நிர்வாகிகளை அழைத்து அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதற்காக ரசீது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்
ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. நிர்வாகிகளும் ஏன் வம்பு என்று ஒதுங்கிக்கொண்டு விட்டனர். நிர்வாகத்திலோ அல்லது நிதி கையாண்டதிலோ எவ்வித முறைகேடும் இல்லாத பட்சத்தில் எவ்வித முகாந்திரமும் இன்றி நிர்வாகக் குழுவிடமிருந்து பொறுப்பை வக்பு வாரியம் கைப்பற்றியது. இதனால் மனம் வெறுத்துப்போன ஜமாஅத் பெரியவர்கள் நிர்வாகத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டார்கள்.
நிர்வாக அதிகாரி நிரந்தரமாக அங்கு இருப்பதில்லை. பல ஊர்களுக்கும் அவரேதான் நிர்வாக அதிகாரி அவர் எப்போது வருவார் என்ற விபரம் யாருக்கும் தெரியாது. அவர் வரும்போது அவரிடம் வாங்க வேண்டிய கையெழுத்துகளை சிப்பந்திகள் வாங்கிக் கொள்வர். இதில் முக்கியமான ஒன்று ஊர் உத்தரவு என்ற திருமண அனுமதி.
இது உள்ளூரில் உள்ள உறவின் முறை ஜமாஅத்தாரால் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்று. யார் முதல் திருமணம் செய்கிறார்கள் என்றும் யார் இரண்டாவது முறையாகத் திருமணம் செய்கிறார்கள் என்றும் அவர்களுக்குத்தான் தெரியும்.
உறவின் முறை ஜமாஅத் என்ற பெயரிலேயே அவர்கள் அனைவரும் தூரத்து உறவினராகவாவது இருப்பார். இதனால் யாருக்கு ஊர் உத்தரவு கொடுக்கலாம் என்று அவர்கள் தீர்மானிப்பர்.. அவர்கள் உத்தரவு தந்தால்தான் திருமணத்தின்போது திருமணப்பதிவு புத்தகமும் திருமணம் செய்து வைக்க சமயப் பெரியவரும் திருமணம் நடக்கும் இடத்திற்குச் செல்வார். .
இப்போது என்ன நடைபெறுகிறது?
ஊர் உத்தரவு கேட்டு வரும் மனுவை பள்ளிவாசல் சிப்பந்தி ஒருவர் எடுத்துக்கொண்டு வெளியூரில் இருக்கும் நிர்வாக அதிகாரியைத் தேடிப் பிடித்து கையெழுத்து வாங்கி வருகிறார். இதில் திருமணமானவரா இல்லையா? மணவிலக்கு செய்தவரா இல்லையா என்பதை யாரும் கண்டுகொள்வதில்லை.
முன்பு நிர்வாகிகள் இருந்தபோது மணவிலக்கு செய்தவர். மணமகனாக இருந்தால் அவர் தனது முந்தைய மனைவிக்குச் சேர வேண்டியவைகளைக் கொடுத்து விட்டானா என்று தீர விசாரித்து அப்படி ஏதும் செலுத்தவில்லை என்றால் ஊர் உத்தரவு மறுக்கப்படும். வக்பு நிர்வாகத்தில் இதுவெல்லாம் கண்டு கொள்ளப்படுவதில்லை.
அதேபோல் விவாகரத்து சொத்துப் பிரச்சினை என்று யாரும் போலீஸ் பக்கமோ நீதிமன்றமோ செல்லாமலே நிர்வாகஸ்தர்களிடம் சென்று பஞ்சாயத்து செய்து வந்தனர். இவை அனைத்தும் இப்போது போலீசுக்கும் நீதிமன்றத்திற்கும் சென்றுவிட்டன.
வக்பு வாரியம் ஒரு நிர்வாக அதிகாரியை நியமித்தால் அவர் வக்புக்கான வரவு செலவு பள்ளிவாசலில் ஐவேளை தொழுகை நடைபெறுகிறதா என கண்காணிப்பது சிப்பந்திகள் சம்பளம் பெறுதல் பள்ளிவாசலின் வருமானத்தை முறையாகப் பெற்று அவைகளை வங்கியில் செலுத்துவது ஆகியவற்றைப் பார்ப்பதுதான் வழக்கமே தவிர திருமணத்திற்கான அனுமதி கொடுப்பது எந்த வக்பு சட்டத்தின் கீழ் வருகிறது? இப்படி கட்டமைப்பு கொண்ட ஒரு நிர்வாகத்தை வக்பு வாரியம் வந்து கெடுத்து குட்டிச் சுவராக்கிவிட்டது.
இதற்கிடையே இளைஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வக்பு வாரிய நிர்வாகத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று போராட ஆரம்பித்தனர். இதை அறிந்ததும் வக்பு வாரியம் தேர்தலை நடத்த முடிவு செய்தது.வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை நியமித்தது. அதில் ஏழு பேர் தேர்தல் இங்குள்ள நடை முறைக்கு சரிப்பட்டு வராது. எலக்ஷனுக்குப் பதில் செலக்ஷன் தான் வைக்க வேண்டும் என்று கூறி ஒத்துழைக்க மறுத்தனர். ஊரிலுள்ள உறவின் முறை ஜமாஅத்தினர் ஒரு கூட்டம் கூடி 50 பேர் கொண்ட குழுவை உருவாக்கி இவர்கள் மூலம் உறவின் முறை ஜமாஅத்தின் பட்டியல் தயாரிப்பது என்ற முடிவு எடுத்தனர்.
உறவின் முறை ஜமாஅத் என்றால் என்ன என்று பார்ப்போம்.
கூத்தாநல்லூர் ஆரம்ப காலத்தில் சுமார் 400 வருடங்களுக்கு முன் வாழ்ந்துவந்த 11 முஸ்லிம் குடும்பங்கள் கரை வழி என்றும் உள்ளூர் வாசிகள் என்றும் இரத்த சம்பந்தமான உறவு கொண்டவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இந்தக் குடும்பத்தினர்தான் திருமணம் வமிசாவழி விருத்தி ஆகியவை மூலம் இன்று பல குடும்பங்களாக இருக்கின்றனர். எந்தக் குடும்பத்தை எடுத்தாலும் ஆதியில் இருந்த 11 குடும்பத்தைச் சேர்ந்தவராகத்தான் இருப்பர். இவர்கள் பெரும் சொத்துக்களை வாங்கி பள்ளிவாசல்களைக் கட்டி மதரஸாக்களைத் துவக்கி இவைகளைப் பராமரிப்பதற்காக சொத்துக்களை வாங்கி வக்பு செய்தனர். பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு செய்யப்பட்ட சொத்துகளை நிர்வகிக்க ஏற்படுத்திக்கொண்ட அமைப்பே கூத்தாநல்லூர் உறவின் முறை ஜமாஅத்.
இந்த உறவின் முறை ஜமாஅத் தான் காலங்காலமாக பள்ளிவாசல்கள் அனைத்தையும் நிர்வகித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் மட்டுமல்லாது சென்னை சிங்கப்பூர் போன்ற நகரங்களிலும் கூத்தாநல்லூர் உறவின் முறை ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் சொத்துகளை வாங்கி வக்பு செய்துள்ளனர்.
உறவின் முறை ஜமாஅத் பட்டியல் தயாரித்துக் கொண்டிருக்கும் போதே வக்பு வாரியத் தலைவர் ஹைதர் அலி இந்த உறவின் முறை ஜமாஅத் முறையை எதிர்த்தார். ஆனால் நீதிமன்ற தீர்ப்பிலேயே தேர்தலில் பள்ளிவாசலின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உறவின் முறை ஜமாஅத்தினரிடமிருந்துதான் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டியதும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இதற்கிடையில் கூத்தாநல்லூரிலேயே அன்வாரியா தெருவில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு வக்பு வாரியம் தேர்தல் அறிவிப்புச் செய்தது. அதற்கான வாக்காளர் பட்டியலையும் அவர்கள் தமுமுகவினரைக் கொண்டு தயாரித்துள்ளனர்.
அன்வாரியா தெருவில் வசிக்கும் அந்த மஹல்லாவைச் சேர்ந்தவர்களில் பெரும்பகுதியினரைத் தவிர்த்துவிட்டு உறவின் முறை என்ற வார்த்தைக்குப் பதில் உள்ளூர் வாசிகள் என்ற வார்த்தையை வைத்து வக்பு வாரிய அதிகாரிகள் 20 பேர் மட்டும் அன்வாரியா தெரு மஹல்லாவைச் சேர்ந்தவர்களையும் மீதி 130 பேர் வெளியூரிலிருந்து குடிவந்தவர்களையும் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இந்த 130 பேரில் பெரும்பான்மையோர் தமுமுக உறுப்பினர்கள் கூத்தாநல்லூரில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்றங்கள் இயங்காததால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது.
சென்ற மாதம் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. என்னவோ பெரிய கலவரப் பிரதேசம் போல் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் வந்திருந்தனர். கூடவே ஒரு டி.ஐ.ஜியும் கூட்டத்தைக் கலைக்க பயன் படுத்தும் தண்ணீர் பீய்ச்சும் வஜ்ரா வாகனம் என்று பெரிய ஆர்ப்பாட்டத்தோடு ஆரம்பித்த தேர்தலில் உறவின் முறை ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு தமுமுகவின் மூக்கு உடைபட்டது.
தமுமுக ஆதரவு பெற்ற வெளியூரைச் சேர்ந்தவர்களில் மூவர் போலீஸால் தேடப்படும் குற்றவாளிகள். தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்கள் தேர்தல் களத்திற்கு வந்தால் போலீஸில் பிடித்துக் கொடுக்க ஊரே தயாராக இருந்தது.
இப்படி ஹைதர் அலியின் கனவு பலிக்கவில்லை. தமுமுகவினரால் ஊர் பிளவுபட்டது. குடும்பங்கள் பிரிந்தன. தந்தையும் தனையனும் தனித்தனியாக நிற்கின்றனர். தமுமுகவும் தெளஹீத் ஜமாஅத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இவர்களிடமிருந்து சுன்னத் ஜமாஅத்தைக் காப்பது இப்போது மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது.
ஹைதர் அலியின் ஒரே அஜெண்டா சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல்களைக் கைப்பற்றி அதனை தமுமுக கொள்கை கொண்டவர்களிடம் ஒப்படைப்பதுதான்.
ஏற்கெனவே இந்த இதழில் தமுமுக உறுப்பினர்கள் எப்படி ஒவ்வொரு ஊரிலும் அராஜகம் செய்கின்றனர் என்பதை பட்டியலிட்டோம். இப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. போல் தமுமுகவினரே ஒவ்வொரு ஊரிலும் உள்ள சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல்களைக் கைப்பற்ற நடைபெறும் சதி இது.
மீண்டும் பெரிய பள்ளிவாயில் பற்றி பார்ப்போம். உறவின் முறை ஜமாஅத் கொண்ட பட்டியல் வக்பு வாரியத்திடம் ஒப்படைத்தும் அவர்கள் தேர்தல் நடத்த அறிவிப்பு செய்யவில்லை. ஆனால் அவசர அவசரமாக அன்வாரியா தெரு பள்ளிவாசலுக்கு தேர்தல் வைப்பதன் . .மூலம் அதே பாணியைப் பின்பற்றி பெரிய பள்ளிவாசலிலும் தேர்தல் நடத்தலாம்.என்று திட்டமிடுகிறார்கள் போலும்.
அன்வாரியா தெரு பள்ளிவாசல் வாக்காளர் பட்டியலில் உறவின் முறை ஜமாஅத்தினர் அல்லாதார் 130 பேர் இருக்கிறது என்று சுட்டிக் காட்டினால் வக்பு வாரிய தலைவர் இல்லை அவர்களும் உறவின் முறை ஜமாஅத்தார்தான் என்று சத்தியம் செய்கிறார்.
உறவின் முறை ஜமாஅத்தார் அல்லாதவர்கள் ஒன்றும் ஒதுக்கப்பட வில்லை. அவர்களில் பலர் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கூத்தாநல்லூர் முன்சிப்பல் தலைவரே உறவின் முறை ஜமாஅத்தைச் சாராதவர் தானே? பள்ளிவாசல் நிர்வாகத்தை தவிர அவர்களுக்கு எந்த உரிமையும் மறுக்கப்படவில்லை. இதனை முன்பின் தெரியாத வெளியூரிலிருந்து வந்து குடியேறியவர்களிடம் எப்படி ஒப்படைப்பது?
சில மாவட்டங்களில் இறந்தவர்களைக் கூட சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லுமாறும் உள்ளூர்வாசிகள் மட்டும் தான் இங்கு அடக்கம் செய்யமுடியும் என்றும் கூறுகின்றனர். கூத்தாநல்லூர் அவ்வாறு இல்லையே.
கூத்தாநல்லூரில் எந்த தொழிற்சாலையோ அல்லது வருமானம் தரக் கூடிய பெரிய தொழில்களோ கிடையாது. நகராட்சியாக உயர்வு பெற்றதற்கு காரணம் அவ்வூர் உறவின் முறை ஜமாஅத்தினர் வெளிநாடுகளுக்குச் சென்று உழைத்து பணம் ஈட்டி கூத்தாநல்லூரில் வளமாக வாழ்ந்தனர். பள்ளிவாசல்கள் மதரஸாக்களைப் போன்றவை களுக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து பராமரிக்கிறார்கள். ஆனால் வெளியூரிலிருந்து வந்து குடியேறியவர்கள் இவ்வூர்களில் வேலை செய்தோ தொழில் செய்தோ தான் தங்கள் வருமானத்தை ஈட்டிக் கொண்டார்கள்.
இறுதியாக கூத்தாநல்லூர் சம்பவம் ஒரு உதாரணம். பள்ளிவாசல் நிர்வாகத்திற்குள் தமுமுக நிர்வாகத்தினரைத் திணிக்கும் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் தகவல்கள் கிடைக்கின்றன. அண்மையில் ஜூனியர் விகடனில் மேலை நாசர் என்பவர் இதேபோல் சில விபரங்களைக் கூறி குமுறியிருந்தார்.
இக்கட்டுரை மாண்புமிகு முதலமைச்சர் பார்வைக்குச் செல்லும் என்று நம்புகிறோம்.
தமுமுக இதே பாணியைக் கையாண்டால் அதனை தி.மு.கழகம் ஆதரித்து வந்தால் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் நாட்டிலுள்ள சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்களிடமிருந்து திமுக கூட்டணிக்கு ஒரு வாக்குகூட கிடைக்காது. மாண்புமிகு முதல்வர் ஆவன செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
( சமநிலை சமுதாயம் – மார்ச் 2009 இங்கும் அங்கும் பகுதியிலிருந்து )
SAMANILAI SAMUDHAYAM
திங்கள், 31 ஆகஸ்ட், 2009
நாடளுமன்ற தேர்தலுக்கு முன் சமநிலை சமுதாயம் மாத இதழில் வெளியான கட்டுரை.
1:57 PM