லாட்டரி தடைச் சட்ட முன்வடிவு சத்தமில்லாமல் மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.
மக்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களை வறுமை எனும் படுகுழியில் தள்ளி, தற்கொலை செய்துகொள்ளத் தூண்டும் அளவுக்கு சமூக சீர்கேடான லாட்டரி எனும் தீமை விளங்கியது.
ஒரு நம்பர் லாட்டரி, ஆன்லைன் லாட்டரி என ஏதாவது ஒரு ரூபத்தில் லாட்டரி மோகம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டுதான் இருந்தது. இந்தத் துயரம் சமூகத்தையே சரிவிற்குள் இழுத்துச் செல்லும் பேரபாயமாக கருதப்பட்ட நிலையில் லாட்டரிக்குத் தடை விதிக்கப்பட்டது. அப்போது நாம் வரவேற்றோம்.
ஏழை மக்களைச் சுரண்டி, வசந்தத்தை உறிஞ்சி, வறுமையின் கோரப் பிடிக்குள் தள்ளும் அவலத்திற்கு தற்காலிக முற்றுப்புள்ளி விழுந்தது.
1999ல் நாடாளுமன்றத்தில் லாட்டரி தடைச் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து லாட்டரி முதலாளிகள் நீதிமன்றம் சென்றதால் இதுகுறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்தச் சட்ட முன்வடிவை சட்டமாக்க பாஜகவும் சரி, காங்கிரசும் சரி, சிறிதளவும் அக்கறைக் காட்டவில்லை.
லாட்டரிச் சீட்டு விற்பனை என்ற தீமையைத் தொடராத மாநிலங்களே இல்லை என்ற நிலை நிலவியது. பல மாநில அரசுகள் லாட்டரிச் சீட்டுக்களை அச்சடிக்கும் பொறுப்பை லாட்டரி முதலாளிகளிடம் ஒப்படைத்தன.
சந்தர்ப்பத்தை கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்ட லாட்டரி தாதாக்கள் கள்ள நோட்டுக்களை அடிப்பதைப்போல போலி லாட்டரிச் சீட்டுக்களை ஏராளம் அச்சடித்து சட்டவிரோதமாகவும் பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடித்தனர்.
அதேவேளையில் லாட்டரிச் சீட்டு வாங்கினால் லட்சாதிபதி ஆகலாம் என நினைத்தவர்கள் பிச்சாதிபதிகள் ஆகி நடுத்தெருவுக்கே வந்தனர். மக்களைச் சுரண்டிக் கொழுத்த லாட்டரி தாதாக்கள் லாட்டரித் தடைச் சட்ட மசோதா நாடாளுமன்றத்துக்கு வராமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதைக் கண்ணும்கருத்துமாக செய்தனர்.
மே 7 ஆம் தேதி லாட்டரித் தடை மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் திரும்பப் பெற்றுவிட்டார்.
2003-ல் தமிழகத்தில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து லாட்டரி மூடநம்பிக்கையில் மூழ்கிய மக்களின் அவலநிலை அகன்றது.
ஆனால் தற்போது மத்திய அரசின் முந்திரிக்கொட்டைத்தனமான செயலால் மீண்டும் ஏழைகளின் வாழ்வுக்கு வேட்டுவைக்கப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக மீண்டும் லாட்டரி தடைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.
சமீபத்தில் தமிழகத்தில் ஒரு சினிமா விழாவில் தமிழக முதலமைச்சருடன் லாட்டரி புள்ளி ஒருவர் மேடையில் ஒன்றாகத் தோன்றியது மீண்டும் தமிழகத்திற்குள் லாட்டரி என்ற கொடும் தீமை நுழையுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசம் தொடர;ந்து லாட்டரி தடை நிலையை கடைபிடிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.
மத்திய மாநில அரசுகள் லாட்டரி என்ற சமூக அவலத்தை மீண்டும் கொண்டுவர நினைத்தால் நாட்டு மக்களின் கடும் கண்டனங்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிவரும் என்று எச்சரிக்கின்றோம்.