சரணடைந்த திமுக- சாதித்த காங்கிரஸ்? ~ சஹாரா தமிழ்

ads

புதன், 1 டிசம்பர், 2010

சரணடைந்த திமுக- சாதித்த காங்கிரஸ்?


 












டெல்லியில் கோலோச்சிய ராஜாங்கம் முற்று பெற்றுவிட்டது. 1996க்குப் பிறகு திமுக டெல்லி அரசியல் சதுரங்கத்தில் அசைக்க முடியாத சக்தியாகவே விளங்கியது. 1996ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸோடு டெல்லியை கலக்கியது. இடையில் 1998ம் ஆண்டு மட்டும் இடையில் ஒரு 13 மாதங்கள் ஆண்ட பா.ஜ.க கூட்டணியில் மட்டும் திமுக இடம்பெறவில்லை. அதன்பிறகு மதசார்பின்மையாவது மண்ணாங்கட்டியாவது என தனது திராவிடக் கொள்கையை புதைத்துவிட்டு பா.ஜ.கவோடு கைகோத்தது. டெல்லி என்ற தந்திர பூமியில் ஹை பாலிடிக்ஸ் என்ற உயர்நுட்ப அரசியலை திமுக கற்றுக் கொண்டது. திமுகவின் அகில(?) இந்திய தலைவரான முரசொலி மாறன் சர்வ அதிகாரத்துடன் வலம் வந்தார். காவி முகாமில் முங்கிமுங்கி மஞ்சள் குளித்தது திமுக, குஜராத் இனப்படுகொலையால் 3000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டால்  என்ன? ஒரிசாவில் கிறித்துவப் பழங்குடி சமூக மக்களை மனித மிருகங்கள் விரட்டி வேட்டையாடினால் தான் என்ன? இந்தக் அக்கிரமங்களை கண்டிப்பதா? கண்டுகொள்ளவே மாட்டோம். எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்போம். பதவியை  மட்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என தன்னிலையில் உறுதி காட்டியது. ஐந்து ஆண்டுகளும் சங்பரிவார் கொள்கைகள், அஜண்டாக்கள் நாட்டின் சந்து பொந்துகளில் ஊடுருவும் சாகசம் திமுக ஆதரவினால் சாத்தியமாயிற்று.

முரசொலி மாறன் படுத்த படுக்கையாக இருந்தபோது துறை இல்லாத அமைச்சராக நீடித்தார். கறுப்பு சிவப்பு விசுவாசத்திற்கு காவி வழங்கிய பரிசு இது.

பா.ஜ.க கூட்டணி அரசின் கடைசி மணித்துளிவரை அரசாட்சி செய்த திமுக காற்று திசை மாறியதைக் கண்டு அணி மாறியது. சோனியா தியாகத் திருஉருவமாக வர்ணிக்கப்பட்டார்.

காங்கிரஸ் கூட்டணியிலும் கலைஞர் ராஜாங்கம் தான். அந்த ராஜாங்கத்திற்கு ராசாவின் ராஜினாமா விவகாரத்தின் மூலம் வேட்டு வைக்கப்பட்டு விட்டது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க மன்மோகன்சிங் உத்தர விட்டார். அமுலாக்க பிரிவும் வருமானவரித்துறையும் நோண்டி நொங்கெடுத்தன. அதிரகசிய ஆவணங்கள், தஸ்தாவேஜுகள் அனைத்தும் திட்டமிட்டே ஊடகங்களுக்கு லீக் செய்யப்பட்டது. முக்கிய உரையாடல்கள் கசியவிடப்பட்டன. அஸ்திவாரம் ஆட்டம் கண்டிருந்த ராஜாங்கத்தை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழங்கிய ஆங்கில தொலைக்காட்சிக்கான நேர்காணல் முற்றிலும் தகர்த்துவிட்டது.

சென்னை அண்ணாசாலையில் தொலை பேசித் துறைக்கான சென்ட் ஹவுஸில் இது தொடர்பாக டீலிங் பேசியவர்கள் மீது சிபிஐ கண்பதிக்கத் தொடங்கியிருக்கிறது.

லண்டன் அருகே உள்ள ஹான்ஸ் ப்ரோ என்ற தீவை பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்தியாவைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் வாங்கி இருப்பது தொடர்பாகவும் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

மலேசியாவின் ஜொகர்பாரு ஏரியா விற்கு அருகே 600 ஏக்கர் எஸ்டேட் வாங்கப்பட்டிருக்கிறது. சென்னை ஓட்டேரி அருகே பலமாடி கட்டிடம், பழைய மகாபலிபுரம் சாலையில் கட்டப்பட்டிருக்கும் பல மாடி அபார்ட்மெண்ட், சென்னைக்கு வெளியே கட்டப்பட்டு வரும் அரண்மனை மாதிரியான மாளிகை, சமீபத்தில் சீனாவிலுள்ள தொலைபேசி உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு வழங்கப்படும் திடீர் முக்கியத்துவம், அதற்கான அலுவலகங்கள் சென்னையில் அமைக்க சில முக்கிய விஜபிகள் காட்டிய ஆர்வம், தமிழகத்தில் திருச்சி உள்பட பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான கோடிகளை கொட்டி வாங்கிக் குவிக்கப்படும் கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என தோண்டத் தோண்ட பூதாகரமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும் ஊழல் ராஜாங்கத்தின் கதை மெகா சீரியல் போல் நீளும் அபாயம் இருப்பதாக விஷயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. காங்கிரஸ் இப்போது தனது ராஜதந்திர நடவடிக்கைகளை திமுக மீது அரசியல் ரீதியாகவும் பிரயோகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசின் பாட்டுக்கு திமுக தாளம் போடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

“காங்கிரசு ஆசைப்பட்டால் மந்திரி காங்கிரசுக்கு பிடிக்காவிட்டால் எந்திரி” என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. காங்கிரசுடன் பேரம் பேசும் சக்தியை திமுக இழந்து விட்டதாகவே அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை காட்டி அதன் ஊழலைக் காட்டி கலைஞரை வாய் மூடச் செய்து ஈழத்தில் பல்லாயிரம் தமிழர்களை கொன்று குவிக்க ஆதரவு அளித்தது காங்கிரஸ். இன்று திமுகவை முடக்கிப் போடவும் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தையே காங்கிரஸ் பயன்படுத்துகிறது.

ஈழமக்களின் சோகம் குறித்து கண்ணீர் விடாதவர் யாருமில்லை. இன்றைய திமுகவின் நிலை குறித்து கண்ணீர் விட யாருமில்லை.

-அபூசாலிஹ் - www.tmmk.info

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்