சென்னை.பிப்,25 : வரும் மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
அனைத்து நெடுஞ்சாலைகளிலும் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளால், நெடுஞ்சாலைகளில் அதிக சாலைவிபத்துகள் ஏற்படுகின்றன என்று கூறி, சமூக நீதிப் பேரவையின் சார்பில் வழக்குரைஞர் கே.பாலு என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணையின்போது, சென்ற மாதமே தமிழக அரசு படிப்படியாக அனைத்து நெடுஞ்சாலைகளிலும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடிவிடுவோம் என்று கூறியிருந்தது. அதன் பின்னர் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், பால் வசந்தகுமார் ஆகியோர் இந்த மனுவின் மீது விசாரணை மேற்கொண்டபோது, கே.பாலு தரப்பில், நீதிமன்ற விசாரணையின்போது, அரசு சென்ற மாதமே படிப்படியாக அனைத்து கடைகளையும் மூடி விடுவோம் என்று கூறியிருந்தது.
ஆனால், அதற்குப் பின்னரும் பூந்தமல்லி அருகில் இரு கடைகளைத் திறந்தது. இது அரசு நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிக்கு முரணாக உள்ளது. எனவே நெடுஞ்சாலைகளில் உள்ள எல்லாக் கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இதற்கு அரசுத் தரப்பில், நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு ஆறு மாத கால அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால் மார்ச் 31 ம் தேதிக்குள் இவற்றை மூட வேண்டும் என்றும், அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திங்கள், 25 பிப்ரவரி, 2013
மார்ச் 31ம் தேதிக்குள் நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவு...
8:47 PM
மதுக்கடை