ஜன் லோக்பால் மசோதா..! ~ சஹாரா தமிழ்

ads

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

ஜன் லோக்பால் மசோதா..!


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
அவரது வழிமுறைகள் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் இல்லவே இல்லை..

தொலைக்காட்சியில் எதைப் பார்க்கிறோமோ, அவைதாம் உண்மையில் புரட்சிகரமானதெனக் கருதினால், அதுதான் சமீபத்தில் நடந்ததில் மிகவும் தர்மசங்கடமானதாகவும் புத்திசாலிதனமற்றதாகவும் இருந்திருக்கும்.. இப்போது 'ஜன் லோக்பால் மசோதா' பற்றி, நீங்கள் என்ன கேள்வி யாரிடம் கேட்டிருந்தாலும், அந்தக் கேள்விக்குக் கீழ்கண்ட கட்டங்களில் ஏதாவது ஒரு பதிலைத்தான் சரியென அவர்கள் 'டிக்' செய்திருப்பார்கள்
(அ) வந்தே மாதரம்!
(ஆ) பாரத அன்னைக்கு ஜே!
(இ) இந்தியா என்றால் அன்னா, அன்னா என்றால் இந்தியா!
(ஈ) இந்தியாவுக்கு ஜே!

முற்றிலும் வெவ்வேறு காரணங்களுக்காக, முற்றிலும் வெவ்வேறு வழிகளில், மாவோயிஸ்டுகளும் ஜன் லோக்பால் மசோதாகாரர்களும் ஒரே பொதுவான அம்சத்தை வலியுறுத்தி வருகின்றனர் என்று நம்மால் கண்டிப்பாகச் சொல்ல முடியும். இருவருமே இந்திய அரசைத் தூக்கி எறிய முயல்கிறார்கள். ஒருவர், ஏழைகளிலும் ஏழைகளான ஆதிவாசிகளினால் உருவாக்கப்பட்ட இராணுவத்தின் துணை கொண்டு, ஆயுதப் போராட்டத்தின் மூலம், கீழிருந்து தூக்கி எறிய முயல்கிறார். மற்றொருவர் மேலிருந்து, நகரம் சார்ந்த ஆனால் நிச்சயமாக நல்ல பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட இராணுவத்தைக் கொண்டு, புத்துணர்வு கொண்ட ஒரு சாதுவின் தலைமையின் கீழ், இரத்தம் சிந்தாத காந்திய ஆட்சிக்கவிழ்ப்பு மூலம், அரசைத் தூக்கி எறியப் பார்க்கின்றனர். (இந்த முறையில் அரசு நிர்வாகமும் தன்னைத் தானே தூக்கி எறிந்து கொள்ள, அனைத்தையும் செய்து உடந்தையாக உள்ளது).

2011ம் வருடம் ஏப்ரல் மாதம் அன்னா ஹசாரே முதலாவது "சாகும் வரை உண்ணாவிரதத்தை" சில நாட்கள் இருந்தார். அப்போது எழுந்த பெரும் ஊழல்கள், இந்திய அரசின் நம்பிக்கைத் தன்மையையே சிதைத்திருந்தது. அதிலிருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப, அரசு நமது சிவில் சமூகத்தால் "அன்னா அணி" என்று அழைக்கப்பட்ட இந்த அணியினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அந்தக் குழுவை ஊழல் ஒழிப்புச் சட்ட வரைவுக் கமிட்டியில் கூட்டு உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டது. சில மாதங்கள் கடந்ததும் அரசு இந்த முயற்சியைக் கைவிட்டு, புதிய வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்வைத்தது. அந்த வரைவு மசோதா பலவித குறைபாடுகளுடன் இருந்ததால், விவாதிப்பதற்கே தகுதியற்றதாக இருந்தது.

பிறகு ஆகஸ்டு 16ம் தேதி காலையில் தனது இரண்டாம் "சாகும்வரை போராட்ட"த்தை அன்னா ஹசாரே துவங்கினார். அவர் தனது உண்ணாவிரதத்தைத் துவங்கும் முன்னர் அல்லது அவர் எந்தவித சட்டரீதியான குற்றத்தைச் செய்வதற்கு முன்னரே, கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். விளைவாக ஜன் லோக்பால் மசோதாவை நடைமுறைப்படுத்தும் போராட்டம் என்பது 'போராடும் உரிமைக்கான‌ போராட்டம்', 'ஜனநாயகத்திற்கான போராட்டம்' என மாற்றப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த இரண்டாம் சுதந்திரப் போராட்டத்தைத் துவங்கிய சில மணி நேரத்திற்குள் அன்னா விடுவிக்கப்பட்டார். 

ஆனால் புத்திச்சாதுரியத்துடன், அன்னா சிறைச்சாலையை விட்டு வெளியேற மறுத்து விட்டார்; விளைவாக, தான் உண்ணாவிரத்தைத் துவங்கிய திகார் சிறையிலேயே கெளரவமிக்க விருந்தாளியாகத் தொடர்ந்து இருந்தார். தனக்குப் பொதுவிடத்தில் உண்ணாவிரதம் இருக்கும் உரிமையைத் தரவேண்டுமென்ற கோரிக்கையை விடுத்தவாறு, தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். அந்த மூன்று நாட்களும் மக்கள் கூட்டமும் தொலைக்காட்சி வண்டிகளும் சிறைச்சாலைக்கு வெளியே கூடி நிற்க, 'அன்னா அணி'யின் உறுப்பினர்கள் திகார் என்ற உயர்காவல் சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றைக் கிழித்துக் கொண்டு அங்குமிங்கும் பறந்து சென்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் உள்ளேயிருந்து கொண்டு வந்த வீடியோச் செய்திகளை, அனைத்துத் தேசிய மற்றும்  அனைத்து தனியார் தொலைக்காட்சி ஊடகங்களில் கொடுத்து வெளியிட்டனர். (இந்த மாதிரியான ஆடம்பரம், வேறு நபருக்கு அங்கு அனுமதிக்கப்பட்டிருக்குமா?)

இதற்கிடையில் தில்லி முனிசிபல் கமிஷனின் 250 ஊழியர்கள், 15 லாரிகள் மற்றும் 6 மண் புரட்டிப் போடும் இயந்திரங்களின் உதவியுடன், சகதியாகக் கிடந்த ராம்லீலா மைதானத்தில் நாள் முழுக்க வேலை பார்த்து, வார இறுதியில் அரங்கேறப் போகும் மிகப்பெரிய 'ஷோ'வுக்கு, அதைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். முடிவே இல்லாமல் காத்திருந்து விட்டு, கிரேனில் தொங்கவிட்ட காமிராக்களையும் உற்சாக கோஷமிட்டுக் கொண்டிருந்த கூட்டத்தையும் அவதானித்து விட்டு, இந்தியாவில் மிகவும் விலைகூடுதலான மருத்தவர்களின் மருத்துவ உபசரிப்புடன், அன்னாவின் மூன்றாவது கட்ட "சாகும் வரை உண்ணாவிரதம்" துவங்கியது. உடனே பல தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், “காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, இந்தியா ஒன்றுதான்” என்று நம்மிடம் சொல்ல‌ ஆரம்பித்து விட்டார்கள்.

அவரது வழிமுறை வேண்டுமானால் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் எதுவும் இல்லை. அன்னாவின் கருத்துக்கு மாறாக, காந்தி அதிகாரத்தை மையப்படுத்துவதற்கு எதிராக நின்றார். அதிகாரக் குவியலை எதிர்த்து, அதை அ-மத்தியத்துவப்படுத்த காந்தி விரும்பினார். லோக்பால் மசோதாவோ காந்தியத்துக்கு ஒவ்வாத - அதிகாரம் மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஒரு கொடுமையான ஊழல் எதிர்ப்புச் சட்டம். இந்த வரைவுச்சட்டத்தின் படி, ஜாக்கிரத்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர், ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கொண்டு, ஒரு அதிகார மையத்தை நிர்வகிப்பார்கள். அம்மையத்திற்குக் காவல்துறையினருக்கு உள்ள அதிகாரம் இருக்கும்; அவர்கள் பிரதம மந்திரியில் இருந்து, நீதித்துறையைச் சார்ந்தவர்களில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர்களிருந்து, அதிகார மட்டத்திலுள்ள கீழ்மட்ட அரசு அதிகாரிகள் வரை, அனைவரையும் கண்காணிக்கலாம். லோக்பாலுக்கு ஒன்றை ஆய்வு செய்து துப்புத் துலக்கவும், கண்காணிக்கவும், அவர்கள் மேல் வழக்குத் தொடரவும் அதிகாரம் உண்டு.

லோக்பாலிடம் சிறைச்சாலை மட்டும்தான் இல்லை. அதைத் தவிர அது ஒரு தனிப்பட்ட நிர்வாக அமைப்பாக, கணக்கில் அடங்காமல் சொத்து வைத்திருப்பவர்களையும், அளவுக்கு அதிகமாக ஊதிப் பெருத்தவர்களையும், ஊழல் பேர்வழிகளையும் எதிர்கொள்ளும் வகையில் செயற்படும். அரசு நிர்வாகம் என்பதே இதற்காகத்தானே ஏற்படுத்தப்பட்டுள்ளது? இப்போது அரசு நடத்தும் சிறு குழுவினரின் ஆட்சி போதாதென்று, மற்றொரு சிறுகுழு ஆட்சியை லோக்பால் மசோதா ஏற்படுத்தித் தருகிறது. இதன் மூலம், இரண்டு சிறு குழு ஆட்சிக்கு வழிவகுப்பதாக இந்த லோக்பால் மசோதா அமைகிறது.

இந்த மசோதா பயன் தருமா, தராதா என்பது நாம் ஊழலை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொருத்தே உள்ளது. ஊழல் என்பது வெறுமனே சட்ட சம்பந்தப்பட்டப் பிரச்சினையா? ஊழல் என்பது வெறுமனே நிதி மோசடியும் லஞ்ச லாவண்யமும் உள்ள பிரச்சினையா? அல்லது அதிகாரம் என்பது மிகச் சிறுபான்மையினரின் கையில் குவிந்து கிடக்கும் இந்தச் சமத்துவமற்ற சமுதாயத்தில், ஊழல் என்பது சமூகப் பட்டுவாடாவுக்கான கரன்சி நோட்டா? ஓர் உதாரணத்திற்கு நான் சொல்வதைச் சிந்தித்துப் பாருங்கள்! பெரிய பெரிய ஷாப்பிங் மால் உள்ள ஒரு நகரத்தில், வீதிகளில் கூவி விற்கும் சில்லறை வியாபாரம் தடை செய்யப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் ஒரு சில்லறை வியாபாரி இந்த ஷாப்பிங் மாலின் விலைக்கு ஈடு கொடுத்து வாங்க முடியாத வாடிக்கையாளர்களுக்கு, தனது பொருளை விற்க வேண்டுமானால் கண்டிப்பாகச் சட்டத்தை மீறித்தான் செயற்பட வேண்டும். 

அதற்காக அங்குள்ள போலிஸிக்கும் முனிசிபாலிடி ஆளுக்கும் அவர் சிறு தொகையைக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படிச் செய்வது ரொம்ப மோசமான செயலா? எதிர்காலத்தில் இந்தச் சில்லறை வியாபாரி தனது வணிகத்தைச் செய்ய இந்த லோக்பால் பிரதிநிதிகளுக்கும் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டுமா? சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது அமைப்புரீதியான சமத்துவமின்மைக்குத் தீர்வு காண்பதிலேயே உள்ளது. அப்படிச் செய்யாமல், அதற்குப் பதில், மக்கள் இன்னுமொரு அதிகார மையத்தை எதிர்கொள்ளட்டும் என்று விட்டு விடுவது எப்படி நியாயமாக இருக்கும்?

இதற்கிடையில் அன்னாவின் புரட்சிக்கான கட்டமைப்பும் நடன இயக்கமும், அதற்கான உக்கிரமான தேசியவாதமும் கொடி அசைத்தலும், இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்தும், உலகக்கோப்பை வெற்றி அணிவகுப்பிலிருந்தும், அணுச்சோதனை கொண்டாட்டத்தில் இருந்தும் கடன் வாங்கப்பட்டுள்ளது. அவர்களது உண்ணாவிரதத்தை நீங்கள் ஆதரிக்காவிட்டால், அவர்கள் உங்களை "உண்மையான இந்தியன் இல்லை" என்று அடையாளப்படுத்துவார்கள். அது போலவே இந்த 24 மணிநேர ஊடகங்களும், இந்த நாட்டில் இந்தச் செய்தியை விட்டால், வெளியிடுவதற்கு உருப்படியான வேறு செய்தியே இல்லை என்று முடிவெடுத்துவிட்டன‌.

இந்த உண்ணாவிரதம் இரோம் சர்மிளாவின் பத்து வருட உண்ணாவிரதத்திற்கு எந்த விதத்திலும் அர்த்தம் வழங்கவில்லை. சந்தேகத்தின் பேரிலேயே யாரையும் கொல்லலாம் என மணிப்பூரில் வழங்கப்பட்டிருக்கும் AFSPA (Armed Forces [Special Power] ACT) சட்டத்திற்கு எதிராகப் பத்து வருடமாக உண்ணாவிரதம் இருந்து (அவருக்கு வலுகட்டாயமாக உணவு புகட்டப்பட்டாலும்) தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறாரே இரோம் சர்மிளா, அவரை இப்போராட்டம் எந்த அர்த்தமும் இல்லாமல் கைவிட்டு விட்டது. அணு ஆலை வரக்கூடாது என்று பத்தாயிரக்கணக்கான கிராமத்துவாசிகள் கூடங்குளத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்களே, அந்த உண்ணாவிரத்திற்கு இந்த அன்னாவின் உண்ணாவிரதம் எந்த அர்த்தத்தையும் வழங்கவில்லை.

அன்னாவின் போராட்டத்தில் மக்கள் என்பவர்கள் யார்?


இரோம் சர்மிளாவின் உண்ணாவிரத்தை ஆதரித்த மணிப்பூரிகள் மக்கள் இல்லையா?
ஜகத்சிங்பூரிலும், கலிங்காநகரிலும், நியாம்கிரியிலும், பஸ்தாரிலும், செய்தாபூரிலும், சுரங்கக் கொள்ளைக் குண்டர்களுக்கு எதிராகவும், குண்டாந்தடிப் போலிஸ்காரர்களுக்கு எதிராகவும், திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் மக்கள் இல்லையா?
போபால் வாயுக் கசிவில், முடமானவர்கள், இறந்தவர்கள், மக்கள் இல்லையா?
அல்லது நர்மதா பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட அணையால் இடம்பெயர்ந்தவர்கள் மக்கள் இல்லையா?
தனது நிலத்தை எடுத்துக் கொள்ளக்கூடாதென எதிர்ப்பு தெரிவித்த நோயிடா அல்லது புனே அல்லது ஹரியானாவைச் சார்ந்த விவசாயிகள் மக்கள் இல்லையா?

அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் இவர்கள் இல்லை.

பின்னர் அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் யார்? தான் கோரும் லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்கப்பட்டு, சட்டமாக மாற்றப்படாவிட்டால், உணவருந்தாமலேயே உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று மிரட்டும் அன்னா என்ற 74 வயது மனிதரை, ஊடகத்தில் பார்க்கும் இந்தப் பார்வையாளர்கள்தாம், அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் ஆவர். எப்படிப் பசித்தவர்கள் புசிப்பதற்காக இயேசு கிறிஸ்து மீன்களையும் உணவுத் துண்டங்களையும் பல மடங்குகளாக ஆக்கினாரோ, அது போலவே தொலைக்காட்சி ஊடகங்கள் பல மடங்குப் பார்வையாளர்களைப் பெருக்கி, இந்த மக்களைப் பன்மடங்காக்கியது. "ஒரு பில்லியன் குரல்கள் ஒலித்து விட்டன” என்று நமக்குச் சொல்லப்பட்டு விட்டது. "இந்தியா என்றால் அன்னாதான்.”

மக்களின் குரலான இந்தப் புதிய சாது உண்மையிலேயே யார்?

உடனடி அவசரத் தேவையான மக்கள் விசயங்கள் குறித்து, இவர் எதுவும் போதுமான அளவுக்கு பேசியதாக நாம் கேட்டதே இல்லை. நமது பக்கத்தில் நடந்த விவசாயிகளின் தற்கொலை குறித்தோ அல்லது நக்சலைட்டுக்கு எதிராக நடந்த பச்சை வேட்டை ஆபரேசனைக் குறித்தோ இவர் ஒரு வார்த்தை கூட உதிர்த்தது கிடையாது. சிங்கூர் பற்றியோ, நந்திகிராம் பற்றியோ, லால்கார் பற்றியோ, போஸ்கோ பற்றியோ, விவசாயிகள் போராட்டம் பற்றியோ, அல்லது சிறப்புப் பொருளாதார மண்டலத்திலுள்ள பிரச்சினைக‌ள் பற்றியோ, இவர் எதுவும் பேசியதில்லை. மத்திய இந்தியாவிலுள்ள காடுகளில் இந்திய இராணுவத்தை நிறுத்தி வைக்கத் திட்டமிட்டிருக்கும் அரசின் திட்டங்கள் குறித்து, அவருக்கு எந்த அபிப்பராயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

மராத்தியராக இல்லாதவர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ராஜ் தாக்கரேயின் அரசியலை ஆதரித்தவர் அன்னா. 2002ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களை நேரடியாக நிர்வகித்த குஜராத் முதலமைச்சரின் "வளர்ச்சி மாதிரி"யை மனமாரப் புகழ்ந்தவர். (இதைச் சொன்னதும் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பைக் கண்டு அன்னா, தனது வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொண்டாலும், மோடி மீதான தனது உவப்பை என்றுமே வாபஸ் பெற்றதில்லை)

இந்த மாதிரியான கும்மாளத்திற்குப் பிறகும், சில அமைதியான பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்துள்ளார்கள். ஆர்.எஸ்.எஸ்சுடன் அன்னாவுக்குள்ள பழைய உறவுகள், தற்போது இப்பத்திரிகையாளர்கள் மூலமாக அம்பலத்துக்கு வந்துள்ளன. அன்னாவின் கிராம குழுமமான ரலேகன் சித்தியில் பயின்ற, முகுல் சர்மாவைப் பற்றி நாம் இப்போது கேள்விப்படுகிறோம். அங்குக் கடந்த 25 வருடமாக ஒரு கிராமப் பஞ்சாயத்து தேர்தலோ கூட்டுறவு சொசைட்டி தேர்தலோ கிடையாது என்பது தெரிகிறது. ஹரிஜன் குறித்து அன்னாவின் கருத்தை அவரது வார்த்தைகள் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம்: “மகாத்மா காந்தியின் பார்வையையே ஒவ்வொரு கிராமமும் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு 'சமார்', ஒரு 'சுனார்', ஒரு 'கும்ஹர்' இருக்க வேண்டும். அவர்கள் தங்களது பாத்திரம் அறிந்து, தங்களது வேலைகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான், ஒரு கிராமம் சுயசார்புள்ளதாக இருக்கும். இதைத்தான் நாங்கள் ரலேகன் சித்தியில் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.” இப்படிப் பேசும் அன்னாவின் அணியில் இருக்கும் உறுப்பினர்கள், "சமத்துவத்திற்கான இளைஞர்கள்" என்ற இடஒதுக்கீட்டுக்கு எதிரான அமைப்பில் அங்கம் வகித்தவர்கள் என்றால், அதில் ஆச்சரியப்பட என்ன உள்ளது?

கோகோ கோலாவில் இருந்தும், லேமென் பிரதர்ஸில் (Lehman Brothers) இருந்தும் தாரளமாய் நிதி வாங்கிக் கொண்ட அரசு சாரா நிறுவனங்களை நடத்துபவர்கள்தாம், அன்னாவின் கிளர்ச்சிப் பிரச்சாரத்தை முன்னின்று நடத்துபவர்கள். அன்னா அணியில் முக்கியப் பிரமுகர்களான அரவிந்த கெஜிர்வாலும் மணிஜ் சிசோடியாவும் நடத்தும் கபீர் நிறுவனம், போர்ட் பெளன்டேசனிடம் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பு, 4 லட்சம் டாலர்களைப் பெற்றுள்ளது. 
"ஊழலுக்கு எதிரான இந்தியா" பிரச்சாரத்திற்கு நன்கொடை அளித்தவர்களில், அலுமினியம் ஆலைகளுக்குச் சொந்தமான நிறுவனங்க‌ளும் பெளன்டேசன்களும், பல துறைமுகங்களைக் கட்டிய நிறுவனங்க‌ளும், பல சிறப்புப் பொருளாதாரப் பகுதிகளைக் கட்டிய நிறுவனங்க‌ளும், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய பல கோடிக்கணக்கிலான நிதி சாம்ராஜ்யத்தை நடத்துபவர்க‌ளும், ரியல் எஸ்டேட் நிறுவனங்க‌ளும் அடக்கம். அவர்களுக்கு நன்கொடை கொடுத்தவர்களில் பலர் ஊழலில் ஈடுபட்டதற்காக கண்காணிப்பில் இருப்பவர்களாகவும் மற்றும் பலவித கிரிமினல் செயற்களில் ஈடுபட்டவர்களாகவும் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஏன் அன்னாவுடன் இவ்வளவு உற்சாகத்துடன் பங்கெடுக்கிறார்கள்?

எப்போது ஜன் லோக்பால் மசோதாவிற்கான பிரச்சாரம் உச்சகட்டமடைகிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்!

2G ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பெரும் ஊழல்களும் பெரும் மோசடிகளும் விக்கிலீக்ஸ் மற்றும் வெவ்வேறு மூலங்களின் வழியாக அம்பலமானபோது, பல முக்கியமான நிறுவனங்க‌ளும் மூத்த பத்திரிகையாளர்களும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவைச் சார்ந்த அரசியல்வாதிகளும், நேச கட்சிகளின் மந்திரிகளும், ஒவ்வொருவருடன் அனுசரித்து பல நூற்றுக்கணக்கான ஆயிரங்கோடி ரூபாய் பணத்தைப் பொதுக் கருவூலத்தில் இருந்து கறந்து கொண்டு சென்றனர் என்பது தெரிந்தது. இத்தனை ஆண்டுகளில் முதன் முறையாக அரசியல் புரோக்கர்கள் பெரும் அவமானப்பட்டார்கள். இந்தியாவிலுள்ள பெரும் கார்பரேட் தலைவர்கள் பலர், சிறைச்சாலையில் வாசம் செய்ய வேண்டிய அளவுக்குச் சிக்கிக் கொண்டார்கள். இதுதானே மக்களின் ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு மிகவும் அவசியமான நேரமாகும், இல்லையா?

அரசு தனது வழக்கமான கடமைகளைக் கை கழுவி, கார்ப்பரேசன்களும் அரசு சாரா அமைப்புகளும் அரசின் கடமைகளைத் (நீர் விநியோகம், மின்சார விநியோகம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சுரங்கம், சுகாதாரம், கல்வி) தங்களது கரங்களில் எடுத்துக் கொண்டுள்ள காலமிது. கார்ப்பரேட்டிற்குச் சொந்தமான ஊடகங்கள் பொது மக்களது எண்ணங்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள காலகட்டமிது. ஆகவே தற்போது இந்த கார்ப்பரேசன்களும் ஊடகங்களும் அரசுசாரா அமைப்புகளும் இந்த ஏதாவது ஒரு லோக்பால் மசோதாவின் அதிகாரத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்ள முயலும். அதற்குப் பதில், தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள மசோதா, அவர்களை முழுவதுமாய் நிராகரித்து விட்டது.

தற்போது மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் கூச்சல் போடுவதின் மூலமும், கேடுகெட்ட அரசியல்வாதி என்றும், அரசின் ஊழல் என்ற சங்கதியை அழுத்திப் பிரச்சாரமாகக் கொண்டு போவதின் மூலமும், தங்களை ஊழலின் கொடுக்குப் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள அவர்கள் முயல்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய தர்மாபோதச மேடையான அரசையே கொடூரமாகச் சித்தரித்து, அரசைப் பொதுவெளியில் இருந்து இன்னும் அகற்ற வேண்டுமென கோருவது, கண்டிப்பாக 'இரண்டாம் கட்ட சீர்திருத்தத்தை'க் கொண்டு செல்வதற்காகத்தான். இதன் மூலம் இன்னும் தனியார்மயமாக்குதலை ஊக்குவிப்பதற்காகவும், பொது கட்டுமானத்திலும் இந்தியாவின் இயற்கை வளங்களை இன்னும் அதிகமாக அணுகும் வாய்ப்பை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் செய்யும் முயற்சிகளே இவையாகும். இதன் மூலமாக கார்ப்பரேசன் ஊழல்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டு, அதற்கு 'பரிந்துரைக்கும் கட்டணம்' (Lobbying Fee)என்று பெயர் சூட்டப்படும் நாள் வெகுதூரம் இல்லை.

இந்தியாவின் 83 கோடி மக்கள் இன்னும் ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கும் குறைவான வருமானத்துடன்தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை இன்னும் பராரிகளாக்கும் கொள்கைகளை வலுவாக்குவதின் மூலம், நாம் நமது நாட்டை ஒரு சிவில் சண்டைக்குள் முண்டித் தள்ளுகிறோம் என்றுதானே பொருள்?

இந்த அவலமான பிரச்சினை இந்தியாவின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கையாலாகாதத் தன்மை மூலம் ஏற்பட்டுள்ளது. இதில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாதவர்களான கிரிமினல்களும் கோடீஸ்வரர்களும் பாராளுமன்றவாதிகளாக ஆக்கப்படுகிறார்கள். இவ்வமைப்பில் உள்ள எந்தவொரு ஜனநாயக அமைப்பும், சாதாரண மக்களால் அணுக முடியாததாக உள்ளது.

அவர்கள் கொடி ஆட்டுவதைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்!

நாம் நமது உள்நாட்டு இறையாண்மையை அதீதபிரபுக்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடத்தப் போகும் ஒரு போருக்குள் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்போர் ஆப்கானிஸ்தானத்தின் போர்க்கிழார்கள் நடத்தும் சண்டையைப் போல் உக்கிரமாக இருக்கும். அதுதான் நமக்கு விதிக்கப்பட்டதாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.
oOo
ஆங்கிலத்தில் : அருந்ததி ராய்  (21/08/2011, தி இந்து)
தமிழில் : சொ.பிரபாகரன்
நன்றி : கீற்று

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்