இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் ஜெயலலிதாவுடன் சந்திப்பு - சமுதாயக் கோரிக்கைகளை வலியுறுத்தினர். ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 29 நவம்பர், 2012

இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் ஜெயலலிதாவுடன் சந்திப்பு - சமுதாயக் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

https://lh6.googleusercontent.com/-ZCa4SMD6lHc/ULZSu1X9BBI/AAAAAAAAPHE/hdx1Ensh23s/s694/145311593_1.jpg
சமீபத்தில் துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களைப் புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து முஸ்லிம்களிடையே கொந்தளிப்பான சூழல் நிலவியது. இவ்விவகாரம் குறித்து படக்குழுவினருடன் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்ததையடுத்து முக்கியக் காட்சிகள் நீக்கப்பட்டன. மேலும் இஸ்லாமியப் பிரதிநிதிகளிடம் படக்குழுவினர் பகிரங்க மன்னிப்பும் கேட்டனர். இந்நிலையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, இவ்விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அ. முஹம்மத்ஜான், தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ஹனீபா, மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ., தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச் செயலர் அப்துல் சமது, தமிழ்நாடு மாநில ஜமாத்துல் உலமா சபைத் தலைவர் அப்துல் ரஹ்மான் மிஸ்பாஹி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இச்சந்திப்பிற்குப் பிறகு மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. மற்ற அமைப்பு நிர்வாகிகளுடன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"சமீபத்தில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தில் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இடம் பெற்றிருந்த சில காட்சிகளை நீக்குமாறு நாங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதில் உடனடியாக அரசு தலையிட்டு அந்த காட்சிகளை நீக்க துரித நடவடிக்கை மேற்கொண்டதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்தோம்.
தமிழ்நாட்டில் பூரண மது விலக்கு அமுல்படுத்த வேண்டும். இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீட்டினை அதிகரிக்க வேண்டும். முஸ்லிம்களின் கட்டாய திருமணப் பதிவை தளர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளையும் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். எங்களின் மற்ற கோரிக்கைகளையும் அவர் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.''

இவ்வாறு அவர் கூறினார்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்