புதிய தலைமுறை செய்தியில், அரியலூர் அரசு சிமென்ட் ஆலையில் இருந்து வெளியாகும் புகையால் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் விவசாயிகளும், பொதுமக்களும் படும் இன்னல்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டன. உண்மையை படம் பிடித்துக் காட்டிய புதியதலைமுறையின் செய்தி எதிரொலியாக, ஆலையில் இருந்து வெளியாகும் புகை மற்றும் மாசை கட்டுப்படுத்த 2 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆலை நிர்வாகம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து 26ம் தேதி( அதாவது இன்றைக்குள்) அரசு சிமென்ட் ஆலை நிர்வாகம், ஆலையில் இருந்து வெளியாகும் புகையை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் இல்லையென்றால், ஆலையின் கதவுகளை பூட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என அரியலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், அரசு சிமென்ட் ஆலை நிர்வாகம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனையடுத்து வழக்கறிஞர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
புதிய தலைமுறை வெளியிட்ட செய்தி......
சிமென்ட் சிட்டி என்று அழைக்கப்படும் நகரம் அரியலூர். காரணம், இங்கு 1 அரசு சிமென்ட் ஆலையும், 7 தனியார் சிமென்ட் ஆலைகளும் இருக்கின்றன. தனியார் ஆலைகளைப் பொறுத்தவரை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதிய தொழில் நுட்பத்தைக் கொண்டு புகை எந்த அளவில் காற்றில் கலக்கிறது என்பதைக் கண்காணிப்பதாகவும், அரசு ஆலையில் அவ்வாறு கண்காணிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதன் விளைவாக அரியலூர், கல்லங்குறிச்சி, பள்ளக்காவேரி உள்ளிட்ட பல ஊராட்சிகளில் இப்புகை பரவி பெரும் பாதிப்பை விளைவிக்கிறது. இது போதாதென்று வீடுகளில் உள்ள ஓடுகளிலும், இலை செடி கொடிகளிலும் ஆலைப்புகை படர்ந்து காணப்படுகிறது. மேலும், இந்தப் புகையில் பல வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் இப்புகை கலந்த காற்றைச் சுவாசிப்போருக்கு மூச்சுத்திணறல், இருமல் உட்பட பல உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதோடு, புகை கண்ணில் பட்டு எரிச்சலை ஏற்படுத்துவதால், சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகும் நிலை உருவாகியுள்ளது.
இந்தச் சூழலில் அரியலூரில் ஒரு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை உருவாக்கி அரசு சிமென்ட் ஆலையைக் கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் பிரச்னை குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் கேட்ட போது அரசு சிமெண்ட் ஆலையில் புகையைக் கண்காணிக்கும் புதிய தொழில் நுட்பக் கருவியை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் அப்பணிகள் முடிவடைந்து ஆலைப்புகை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
செவ்வாய், 26 பிப்ரவரி, 2013
புதியதலைமுறை செய்தி எதிரொலி: அரியலூர் அரசு சிமென்ட் ஆலை நடவடிக்கை
5:49 PM