அப்துல் நாசர் மதானி வீட்டில் கூடிய கேரளத் தலைவர்கள்! ~ சஹாரா தமிழ்

ads

ஞாயிறு, 10 மார்ச், 2013

அப்துல் நாசர் மதானி வீட்டில் கூடிய கேரளத் தலைவர்கள்!

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSzxCqoBMowdap7pzuonUlffU5M3sbAxOAs4hiGWECDDrPAb5Xd

கொல்லம் : தன் மகளின் திருமணத்திற்காக குறுபிணையில் கேரளா வந்துள்ள அப்துல் நாசர் மதானியை நேரில் கண்டு வாழ்த்து தெரிவிக்க கேரள அரசியல் தலைவர்கள் குவிந்ததால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

2008ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற குண்டு வெடிப்புத் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி, தன் மகளுடைய திருமணத்திற்காக குறு பிணையில் இன்று கொல்லம் வந்துள்ளார்.

திருமண விழா மேடையில் மதானியின் வலது பக்கம் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் பிணராய் விஜயனும் இடது பக்கத்தில் முஸ்லிம் லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பஷீரும் அமர்ந்திருந்தனர்.

மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், பீதாம்பர குரூப், கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் சி. திவாகரன், தாமஸ் இசாக், வர்கலா கஹார் மற்றும் இடது முன்னணி அமைப்பாளர் வைக்கம் விஸ்வன், ஜமாத்தே இஸ்லாமி தலைவர் ஆரிஃப் அலி ஆகியோரும் விழா மேடையில் அமர்ந்திருந்தனர்.

விழாவில் பேசிய மதானி, "நான் சிறையின் இருட்டறையில் இருக்கும்போது, மதங்களைக் கடந்து கேரள மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை நினைத்து வாழ்ந்து வருகிறேன். தமிழகம், கர்நாடகாவைவிட எத்தனையோ மடங்கு பரவாயில்லை. என்னைத் தவிர இன்னும் பலர் எந்தக் குற்றமும் செய்யாமல் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனக்குக் கிடைத்த இந்த நான்கு நாள் பிணைகூட, எனக்கு முன்னர் வேறு இருவருக்கு இதே போன்று நான்கு நாள் பிணை கொடுத்துள்ளதால் வேறுவழியில்லாமலும் கேரள மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் சமூகப் பணியாளர்களின் இடைவிடாத நெருக்குதலினாலுமே கிடைத்தது. இருப்பினும் இப்போது நீதியின் சிறு ஒளி எங்கோ ஒரு மூலையில் தென்படுவது எனக்குத் தெரிகிறது" என்று கூறினார்.

தன் மகள் திருமணத்திற்காக குறுபிணையில் வெளிவர கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் எதிர்கட்சித் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தனும் செய்த உதவிகளுக்கு நன்றி கூறிக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

2010ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் மதானி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்