மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக ராஜபக்சே அரசு கொடூரமாக நடந்து கொண்டதைக் கண்டித்தும், ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளும் ஒன்றுபட்ட நிலையில், ஐ.நா. பெருமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களிக்க வேண்டும் என தமிழகமே போராடி வருகிறது. மனிதநேய மக்கள் கட்சியும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
கடந்த 1983ம் ஆண்டு நடைபெற்ற இலங்கைத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார். அப்போராட்டத்தில் மத்திய அரசு அலுவலகங்களும், தமிழகத்தில் ரயில்களும் ஓடாதவாறு செய்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும் மறைமுக ஆதரவளித்தார்.
அதேபோன்று, தமிழக முதல்வர் அவர்களும் மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக தமிழகம் தழுவிய கடையடைப்பு அறிவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள், கடந்த 3.3.2013 அன்று திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியின் போது கோரிக்கை விடுத்தார்.
ஆகவே, அனைத்துலக தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் தமிழக அரசே கடையடைப்பு நடத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
அன்புடன்
(பி.எம்.ஆர்.சம்சுதீன்)
புதன், 6 மார்ச், 2013
தமிழக அரசே பந்த் நடத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்
9:50 PM
மமக, மமக அறிக்கைகள், மனிதநேய மக்கள் கட்சி