ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து இலங்கை அமெரிக்காவுடன் இரகசியப் பேச்சுக்களை நடத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இரு தரப்புக்கும் இடையில் தரகராகச் செயற்படும் இந்திய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட சுப்பிரமணிய சுவாமி,இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்துச் சுதந்திரமான, சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தும் பிரேரணையின் வரைவு தொடர்பாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமான அதிகாரிகள், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஆகியோர் இந்தப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து சுப்பிரமணியசுவாமி மேலும் தெரிவித்ததாவது:
எனவே இந்த விவகாரத்தில் இன்னமும் சமரசம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பாகச் சர்வதேச விசாரணை தேவை என்ற அமெரிக்கப் பிரேரணை வரைவைத் திருத்தம் செய்வது குறித்தே பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.
இதன் விளைவாக, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசே உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று, அமெரிக்காவின் பிரேரணை வரைவு இறுதியாக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரைக் கொழும்பில் கடந்த மாதம் 28ஆம் திகதி சந்தித்தேன்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை இந்த மாத முதல் வாரத்தில் சந்தித்தேன். சர்வதேச விசாரணையை ஏற்கும்படி இலங்கையிடம் கோருவது நடைமுறைக்கு ஒத்துவராது என்பதை அவரிடம் திட்டவட்டமாக எடுத்துக் கூறினேன்.
இதுபோன்ற கோரிக்கையால் இந்தியாவும் மகிழ்ச்சியடையாது என்பதையும் கூறினேன். ஏனெனில், இதை இந்தியா ஏற்றுக் கொண்டால் காஸ்மீரில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கை எழுவதற்கு வாய்ப்புண்டு.
இப்போதைய பிரேரணை வரைவை அமெரிக்கா மிகுந்த எச்சரிக்கையுடன் உருவாக்கியுள்ளது.குறிப்பாக, போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று நேரடியாகக் கோராமல், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பரிந்துரையைக் குறிப்பிட்டுள்ளது.
அந்தப் பரிந்துரையில் சுதந்திரமான, சர்வதேச விசாரணை தேவை என்று கூறப்பட்டுள்ளதை அமெரிக்கா மேற்கோள்காட்டியுள்ளது. இந்தப் பிரேரணையால் விடுதலைப் புலிகள் அமைப்புக்குப் புத்துயிர் கிடைப்பதற்கோ, இலங்கையில் பிரிவினைவாதம் மற்றும் தமிழ்த் தீவிரவாதம் மீண்டும் உருவாகவோ வாய்ப்பு ஏற்படக் கூடாது என்பதை நான், அமெரிக்க அதிகாரிகளிடம் கூறினேன்.
விடுதலைப் புலிகளின் தோல்விக்கு அமெரிக்கா பங்களித்தது என்பதையும் அவர்களுக்கு நினைவூட்டினேன்.புலிகளின் கப்பல்களை அமெரிக்க ஆயுதங்கள் மூலமே இலங்கையால் அழிக்க முடிந்தது.
இந்தப் பிரேரணை விடயத்தில் ராஜபக்ஷ அரசும் தனது நிலைப்பாட்டை மென்மையாக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கிறேன். ஏனெனில் இலங்கையின் ஏற்றுமதிச் சந்தைகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது என்றார்.
புதன், 13 மார்ச், 2013
அமெரிக்கா. - இலங்கை இரகசியப் பேச்சு; இடைத்தரகராக சுப்பிரமணிய சுவாமி
12:24 PM
அரசியல், இலங்கை, இனப்படுகொலை